செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 07:-

(தொழிலாளர்களின் போராட்டம் என்று வந்தால், தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் உள்ள போராட்டத் தலைவர்களை ஏஜன்டாகத் தான் பெரியார் பார்க்கிறார். அந்த ஏஜன்டுகளுக்குக் கிடைக்கும் பலனைப் பார்க்கிறார். ஏஜன்டை முற்றப் புறக்கணிக்கிறார். போராட்டத்தால் தான் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச பலனாவது கிடைக்கிறது. இந்தப் பலனைப் பற்றியோ, போராட்டத்திற்குச் சரியான தலைமை வேண்டும் என்பதைப் பற்றியோ பெரியார் வலியுறுத்தவும் இல்லை அறிந்திடவும் இல்லை. இதன் அவசியத்தைக் கம்யூனிச சித்தாந்தத்தில் தான் காணமுடியும்.)

(குடிஅரசு - தலையங்கம் - 19.08.1928)

"அரசாங்கம் என்பதும், ரயில்வே முதலாளிகள் என்பதும், ஜனப் பிரதிநிதிகள், தலைவர்கள், காங்கிரசு, சுயராஜ்யம், தேசியம் என்பதும், ஏழைகள் தலையில் கையை வைத்துக் கொள்ளையடித்துத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் ஒரே தன்மைமையுடைய கொள்ளைக் கூட்டமே ஒழிய வேறில்லை என்று நாம் கோபுரத்தின் மீதிருந்தும் கூவுவோம். இதற்கு உதாரணம் வெகு தூரம் போகவேண்டியதில்லை. ஒவ்வொரு தன்மையிலும் தலைவர்களின் ஜீவிய சரித்திரத்தை சற்று ஞாபகப்படுத்திக் கொண்டால் போதுமானதாகும்.

எனவே ரயில்வே அதிகாரிகளின் ஆணவத்திற்குக் காரணம் இன்னது என்பது இப்போதாவது பொது ஜனங்களுக்கு விளங்கியிருக்கும். இந்த மாதிரிப் பத்திரிகைகளினுடையவும் தலைவர்களினுடையவும் உதவி ஏஜண்டுக்கு விலை கொடுக்காமல் கிடைத்திருக்குமென்று யாராவது நம்பக் கூடுமா? ஆதலால்தான் இவ்வேலை நிறுத்தத்தால் பலருக்கு லாபம் என்று சொன்னோம். "குதிரை கீழே தள்ளினதல்லாமல் குழியும் பறித்தது” என்பது போல் வேலை நிறுத்தத்தை தோல்வியடையச் செய்தது போதாமல் தொழிலாளர்களை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தவும் பலமான காரியங்கள் செய்யப்பட்டும் வருவது மிகவும் வெறுக்கத்தக்கதென்றே சொல்லுவோம்.

கடலூர் சிறையில் சில தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டு எண்ணெய்ச் செக்கு ஆட்டுவதாக கேள்விப்படுகின்றோம். பல தொழிலாளர்கள் மீது பல வருஷம் தண்டிக்கத்தக்க கேசுகளை ஜோடினை செய்வதாக கேள்விப்படுகின்றோம். போலித் தலைவர்களுக்கு அடிமைப்படாத தொழிலாளர் சங்கங்களை அடியோடு அழிக்க முயற்சிப்பதாகவும் கேள்விப் படுகின்றோம். இன்னமும் இதில் எழுதமுடியாத கொடுமைகளும் நடை பெறுவதாகத் தெரியவருகின்றது. இதனாலெல்லாம் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஒருக்காலும் தோல்வியடையச் செய்துவிட முடியாதென்றே சொல்லுவோம்.
... ...
… இதிலிருந்து தேசீயம் என்பதும், அரசியல் என்பதும், சீர்திருத்தம் என்பதும், சுயராஜ்யம் என்பதும், தொழிலாளர் நன்மை என்பதும், காங்கிரஸ் என்பதும், சைமன் பகிஷ்காரம் என்பதும் தொழிலாளர்கள், தலைவர்கள் என்பதும், தேசியத் தலைவர்கள் என்பதும் தேசியப் பத்திரிகைகள் என்பதும், தொழிலாளர்கள் நன்மைக்குப் பாடுபடும் பத்திரிகைகள் என்பதும், ஏழைகளிடத்தில் அன்புள்ள முதலாளிகள் என்பதும், ஏழைகள் நன்மைக்குப் பாடுபடும் அரசாங்கம் என்பதும் ஆகியவைகளின் புரட்டுகளை மக்கள் அறிந்து கொள்ள ஒருவாறு வசதி ஏற்பட்டதென்றே நினைக்கிறோம்."
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I- பக்- 61-63)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக