சனி, 29 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 28:-


தோழர் காந்தி மறுபடியும் சிறைப்பட்டார் – தந்தை பெரியார்

(காந்தியப் போராட்டத்தை விமர்சிக்கலாம், ஆனால் சுதந்திரப் போராட்டத்தை மறுதலிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. சுதந்திரப் போராட்டம் ஏகாதிபத்திய அரசை அசைக்கவில் என்று பெரியார் தெரிவித்துள்ளார். காந்தியப் போராட்டம் அரசை அசைக்கிறதோ இல்லையோ அதற்கான மக்கள் ஆதரவு அவர்களை அசைக்கவே செய்யும். காந்தியின் அகிம்சைப் போராட்டம் மக்களின் ஆதரவைப் பெற்றதனால் தான் அதற்கு வலிமை. அகிம்சைப் போராட்டமே எதையும் சாதித்திட முடியாது என்பது உண்மை. ஆனால் அதற்குப் பின்னால் மக்கள் சேரும் போது அதற்குச் சக்தி இருக்கவே செய்யும்.

தேசிய விடுதலை இயக்கத்தை ஒரு போலி இயக்கம் என்று பெரியார் இங்கே கூறியுள்ளார். இதனை அடக்க அரசாங்கம் எடுக்கும் போலி முயற்சியினால் அதிகம் செலவழிக்கப்படுவதாகவும், அதனால் ஏழை மக்களும் நடுத்தர மக்களும் கஷ்டப்படுகிறார்கள் என்று வருத்தப்படுகிறார். தேசிய போராட்டத்தை முதலாளித்துவ ஆதிக்கத்துக்கானது என்கிறார், ஆனால் ஏகாதிபத்திய அரசலால், முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய சுரண்டல் என்கிற இரட்டை சுரண்டலால் எழை மக்கள் அதிகம் அவதிப்படுவதைப் பெரியர் கணக்கில் கொள்ளவே இல்லை. அதனால் தான் தேசிய போராட்டத்தில் ஏழை மக்களும், உடல் உழைப்பால் பாடுபட்டுப் பிழைக்கும் மக்களும் கலந்து கொள்வது தற்கொலையே என்கிறார்.)

தந்தை பெரியார்:-
“… “சாத்தான்தன்மைகொண்ட சர்க்காரை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் செய்து அதையொழித்துவிடுவது என்று சொல்லிக்கொண்டு, சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு முதலிய காரியங்களெல்லாம் காந்தியாரைப் பற்றிய ஒரு விளம்பரத்துக்கும் பாமர ஜனங்களிடையே ஒருபோலி - உயிரற்ற கிளர்ச்சி ஏற்பட்டு யேற்றப்பட்டு சோர்வும், அவ நம்பிக்கையும் அடையவுந்தான் பயன்பட்டதே தவிர ஒரு அளவுக்காவது சாத்தான் அரசாங்கத்தை அசைக்கவோ, அல்லது அது இக்கிளர்ச்சிகளை லட்சியம் செய்யவோ தக்க மாதிரியில் இதுவரை பயன்படவில்லை.

ஒரு சமயம் சர்க்கார் ஏதாவது தாங்கள் இதை லட்சியம் செய்ததாக காட்டிக் கொண்டிருப்பார்களேயானால் அது போலித்தனமாய் பாமர மக்கள் ஏமாறு கின்றதற்காக காட்டிக்கொண்டிருக்கக் கூடியதாய் இருக்குமே தவிர வேறில்லை. ஏனென்றால் இந்த சத்தியாக் கிரகத்தால் தாங்கள் மிகவும் பயந்துவிட்டதாகக் காட்டிக் கொண்டால் தான் கஷ்டப்படும் மக்கள் வேறு வழியில் பிரவேசிக்காமல் இந்தப் பைத்தியக்காரத் தனத்திலேயே முழுகி இருப்பார்கள் என்கின்ற எண்ணத்தைக் கொண்டு அவர்கள் பயந்தவர்கள் போல் நடித்திருக்கலாம். அல்லது தங்களை ஆதரித்து நிற்கும் ஜனங்களுக்கு ஒரு போலித் திருப்தியை உண்டாக்க வெண்ணி அப்படி நடந்து இருக்க லாமே ஒழிய ஒரு நாளும் சத்தியாக்கிரகக் கொள்கையோ, தேசியக் கொள்கையோ எதுவும் இது வரையில் சர்க்காரை லட்சியம் செய்யும்படி செய்யவே யில்லை என்று தைரியமாய்ச் சொல்லு வோம்.

அன்றியும் இம்மாதிரி ஒரு போலி இயக்கம் நாட்டில் இருந்துகொண்டு ஜனங்களின் உணர்ச்சிகளையும், ஊக்கத்தையும் கவர்ந்து பாழாக்கிக்கொண்டு வருவதில் சர்க்காருக்கும், முதலாளிமாருக்கும் எவ்வளவோ லாபகரமான காரியம் என்று சொல்ல வேண்டும். ஆனால், இதற்காகக் கஷ்டப்படுவதும், நஷ்டப்படுவதும் பாமர ஜனங்களே ஒழிய மற்றபடி முதலாளிமார்களோ உத்தியோகஸ்தர்களோ சர்க்காரோ சிறிதுகூட இல்லவே இல்லை.

இந்தப் போலிக் கிளர்ச்சியை அடக்க அரசாங்கத்தார் எடுத்துக் கொள்ளும் போலி முயற்சிக்கு செலவழிக்கப்படும் காரியங்களுக்குச் செய்யப் படும் செலவுகளுக்கு ஆக ஜனங்களின் வரிப்பணமே செலவழிக் கப்படுகின்றது. இந்த வரியால் பணக்காரர்களுக்கு எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் புதிய வரிகளாலும் ஜனங்களுக்குச் சர்க்கார் செய்ய வேண்டிய கடமைகளைக் குறைப்பதாலும் ஏழை ஜனங் களும் நடுத்தர ஜனங்களுமே கஷ்டப்படுகிறார்கள்.

ஆதலால் பாமர ஜனங்கள் இதுவரை தாங்கள் முட்டாள்தனமாய் ஏமாந்து முதலாளி ஆதிக்கத்துக்கு தூணான தேசியப் பித்துக்கொண்டு அலைந்த முட்டாள் தனத்தை விட்டுவிட்டு எப்படி நடந்தால் முதலாளி தத்துவம் ஒழிக்கப்படும் என்றும், எப்படி நடந்தால் முதலாளி தத்துவ ஆட்சி அழிக்கப்படும் என்பதையும் கவனித்துப் பார்த்து அதற்கு ஏற்ற கொள்கை கொண்ட இயக்கத்துக்குப் பாடுபடும்படியும் அதற்குத் தங்களால் கூடிய சர்வ தியாகங்களையும் செய்யும் படியும் வலியுறுத்துகின்றோம்.

மற்றபடி ஒரு காதொடிந்த ஊசிக்கும் பயனில்லாமல் காந்தியாருக்கு உலக விளம்பரம் சம்பாதித்துக் கொடுப்பதிலும் சோம்பேறிகளாய் இருந்து ஒரு சிலர் வாழ வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுக்கும் தேசியத்துக்கு ஆக்கம் தேடிக் கொடுப்பதிலும் ஏழைமக்களும் சரீரத்தால் உழைத்து பாடுபட்டுப் பிழைக்கும் மக்களும் கலந்துகொள்ளுவது என்பது தற்கொலையே ஆகும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.”
(குடிஅரசு - தலையங்கம் - 06.08.1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 125-127)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக