ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

விருதுநகரில் சுயமரியாதைப் பொதுக்கூட்டம் – தந்தை பெரியார்


தோழர்களே! எனது ஐரோப்பிய யாத்திரையிலோ குறிப்பாக ரஷிய யாத்திரையிலோ நான் கற்றுக்கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் அங்கு எனக்குக் காணப்படவில்லை. ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும் அக்கொள்கைகளால் தான் உலகமே விடுதலையும் சாந்தியும் சமாதானமும் அடையக்கூடும் என்று தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு ஐரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கின்ற முறையில் சொல்லும் சேதியாகும்.

நாம் இந்த 7, 8 வருஷ காலமாகவே படிப்படியாய் முன்னேறி வந்திருக் கின்றோம் என்பதை நமது இயக்க வேலையை முதலில் இருந்து கவனித்து வந்திருப்பவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.

சுமார் 15, 20 வருஷங்களுக்கு முன்பாக நாம் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்று கருதினாலும் எது மக்களுக்கு நன்மையானது என்று கருதினாலும் அதையெல்லாம் அரசாங்கத்தைக் கொண்டே செய்யச் சொல்லி கெஞ்சுவோம். அதற்கு பார்ப்பனர்களையே தரகர்களாய் வைத்து அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்டு அவர்கள் பின்னால் திரிவோம், அவர்கள் சொல்லுவதையே நன்மை என்று கருதுவோம். அன்றியும் அது அரசாங்கம் வேறு பார்ப்பனர்கள் வேறு என்று சொல்ல முடியாத காலமாய் இருந்தது. அந்தக் காலத்தில் பெரும் பணக்காரன், ஜமீன்தாரன், மீராகதாரன் என்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் காலடியில்தான் கிடந்தார்கள். அதிலிருந்து ஒரு பெரும் புரட்சி உண்டாயிற்று. அது தான் ஜஸ்டிஸ் கட்சி புரட்சி என்பது. அது தோன்றிய பின்பு பார்ப்பனரல்லாத செல்வவான்களுக்கும் பார்ப்பன ரல்லாத படித்தவர்கள் என்பவர்களுக்கும் சற்று செல்வாக்கு தோன்றிற்று.

பார்ப்பனர்களையே நம்பி இருந்த அரசாங்கமானது பார்ப்பனரல்லாதாரைத் தட்டிக் கொடுத்து அவர்கள் ஆதரவில் இருக்க வேண்டியதாயிற்று. இதன் பயனாய் பார்ப்பனர்கள் அரசாங்கத்திற்குத் தொல்லை கொடுக்கக்கருதி பார்ப்பன ரல்லாத பாமர ஜனங்களை வசியம் செய்யத்தக்க சில புதிய சூக்ஷிகளைக் கையாள ஆரம்பித்தார்கள். அதன் பயனாய் பார்ப்பனர்கள் தன்மை இன்னது என்றும் அரசாங்கத்தின் தன்மை இன்னது என்றும் ஓரளவுக்கு வெளியாயிற்று. பிறகு அவை ஒரு புரட்சியாய் ஆயிற்று. அந்த இரண்டுவித கிளர்ச்சியும் சுயநலங்களையே அதாவது முன்னணியிலிருந்து கிளர்ச்சி செய்பவர்கள் அதிகாரமும் பதவியும் பெருவழியும் கவலை கொண்ட பாமர மக்களை ஆயுதமாக வைத்து போர் நடத்தியதால் இரண்டும் பலமற்று ஒரு தடவை ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெறுவதும் மறுதடவை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதுமாக நிலையில்லாமல் இருந்து வந்தது. இந்த மாதிரியில் ஜஸ்டிஸ் கட்சி என்பதும் ஒரு தடவை நல்ல தோல்வியடைய வேண்டி ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பம் நமக்கு நல்ல சந்தர்ப்பமாய் கிடைத்ததால் நாம் சமூக வாழ்க்கையில் ஒரு கிளர்ச்சி செய்ய முடிந்தது. இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்காத பகஷம் நமது வேலைக்கு அவ்வளவு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்காது.

ஏனெனில் பார்ப்பனரல்லாதார்கள் ஜாதி வித்தியாசங்களையும் அதற்கு ஆதாரமான மத சம்பிரதாயங்களைப் பற்றியும் இவ்வளவு தூரம் கிளர்ச்சி செய்ய சம்மதித்து இருக்கவேமாட்டார்கள். பார்ப்பனரல்லாதாரியக்கம் என்னும் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்து மறுபடியும் அது வெற்றியாவதற் குள் சுமார் 4 வருஷ காலத்துக்குள் அபரிமிதமான காரியங்களைச் செய்திருக் கிறோம். இதை சமூக சம்பந்தமான ஒரு புரட்சி என்றே சொல்லவேண்டும்.

இப்பொழுது மேல்கண்ட அரசியல் கிளர்ச்சியும் சமூகக் கிளர்ச்சியும் நடத்தப்பட்டது போலவே தான் இப்போது பொருளாதாரத் துறையிலும் ஒரு கிளர்ச்சி செய்ததாக வேண்டியிருக்கின்றது. இது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இது நியாயமா? அநியாயமா? அல்லது அவசியமா? அவசியமற்றதா? என்று தான் பார்க்கவேண்டும். அரசியலைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ சமூகத்தில் ஜாதி மதங்களைப்பற்றி என்னென்ன குற்றம் சொன்னோமோ அவைகள் எல்லாம் இன்றைய பொருளாதார இயலிலும் இருப்பதைக் காங்கின்றோம். எப்படி அரசாங்கம் என்பதற்காக சில மக்களின் உழைப்பு வீணாகின்றதோ, எப்படி மேல் ஜாதியான் என்பதற்காக சில ஜனங்கள் இழிவு படுத்தப்படுகின்றார்களோ அதுபோலவே தான் பணக்காரன் முதலாளி என்பதற்காக பல மக்களின் உழைப்பு விணாக்கப்படுவதுடன் இழிவு படுத்த வும் படுகிறார்கள். இந்தக் காரணங்களால் பொருளாதார இயலில் ஒரு பெரும் கிளர்ச்சி செய்யவேண்டியது இப்போது அவசியமாகின்றது. இது இன்று நமது நாட்டுக்கு மாத்திரம் அவசியம் என்று காணப்பட்டதாக நினைக் காதீர்கள். இன்று உலகில் எங்கும் இவ்வுணர்ச்சி பரவி தாண்டவமாடுகின்றது.

ரஷியா தேசத்தில் இவ்வுணர்ச்சி தோன்றி பெரும் புரட்சியாக மாறி வெற்றி பெற்று இன்று காரியத்தில் நடைபெற்றும் வருகின்றது. ரஷியாவில் அரசியல் ஆதிக்கமோ ஜாதிமத ஆதிக்கமோ செல்வவான் ஆதிக்கமோ ஒன்றுமே கிடையாது. அந்த நாட்டிலுள்ள வாலிபர்களுக்கு அரசியல் என்றால் என்ன மதம் என்றால் என்ன ஏழை பணக்காரன் என்றால் என்ன என்கின்றவைகளுக்கு அருத்தமே தெரியாது.

மனிதரில், வாழ்க்கையில், கவலையில், பொருப்பில் ஒருவருக் கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் அறியார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை இங்கும் ஏற்படுவதில் யாருக்கும் எவ்வித கஷ்டமோ நஷ்டமோ இருக்காது. பணக்காரனென்றும் மேல் ஜாதிக்காரன் என்றும் அரசன் என்றும் சொல்லிக் கொள்ளப்படுவதில் ஒருவித செயர்க்கை திருப்தி ஏற்படுவதைத் தவிர இவற்றின் பயன்களால் இவர்கள் கவலையற்று. அதிருப்தியற்று சாந்தியாய் மனச்சமாதானமாயிருக்கிறார்கள் என்று யாரும் சொல்லிவிட முடியாது.

உலகம் தோன்றிய காலம் தொட்டு இதுவரை எத்தனையோ பேர் சாதாரண மனுஷர்களாகவும் ரிஷிகளாகவும், மகான்களாகவும் அவதார புருஷர்களாகவும் தெய்வத்தன்மை பொருந்தியவர்களாகவும் ஏற்பட்டு மக்கள் சமூக நன்மைக்காக என்று எவ்வளவோ காரியங்கள் செய்தாகி விட்டது. இவற்றால் வாழ்வில் மனிதனுக்கு எவ்வித சௌகரியமோ உயர்வோ ஏற்பட்டதாக சொல்வதற்கில்லை. இது மாத்திரமல்லாமல் மனித சமூக நன்மைக்காக, நல்ல வாழ்வுக்காக, முன்னேற்றத்திற்காக என்று எவ்வளவோ மதங்களும் அரசாட்சிகளும் சீர்திருத்தங்களும் தோன்றின. அவைகளும் இன்றை வரை எந்த ஆட்சியிலோ, எந்த மதத்திலோ எந்த சீர்திருத்தத்திலோ ஏதாவது ஒரு காரியம் சாதித்ததாக காணப்படவேயில்லை.

மக்களுக்கு சுக துக்கம் பொது என்றும் ஒருவன் சுகப்படுவதும் ஒருவன் கஷ்டப்படுவதும் இயற்கை என்றும் இவையெல்லாம் கடவுள் செய லென்றும், மாற்றமுடியாதவை என்றும் சொல்லப்பட்டு அந்தப்படியே மக்க ளையும் நம்பச்செய்து சிலர் கஷ்டப்படவும் சிலர் சுகப்படவுமான முறைகள் நிலைநிறுத்தப் பட்டனவே ஒழிய வேறு ஒன்றும் இல்லை.

இன்றைய தினம் இருந்து வரும் எந்த அரசியலை, எந்த மத இயலை, எந்த செல்வ இயலைக் கொண்டும் மேல்கண்ட அக்கிரமங்களை ஒழித்து விடக்கூடும் என்றோ மக்கள் யாவரையும் சமமாக ஆக்கிவிடக்கூடும் என்றோ நினைப்பது முட்டாள் தனமேயாகும். ஆதலால் ஏதாவதொரு புதிய முறையைக் கொண்டுதான் ஆகவேண்டும். அதைப்பற்றி பிறத்தியார் என்ன சொல்லுவார்கள் என்கின்ற கவலையை சிறிதும் வைக்கக்கூடாது. அது கிளர்ச்சி என்று சொல்லப்பட்டாலும், புரட்சி என்று சொல்லப்பட்டாலும் நாம் பயப்பட வேண்டியதில்லை. கிளர்ச்சியும் புரட்சியும் உலக இயற்கை, மனித இயற்கை, நடப்பு இயற்கை, கிளர்ச்சியிலும், புரட்சியிலும் பிரிக்க முடியாமல் கலந்து இருக்கிறான் என்பதை ஒவ்வொரு மனிதனின் நடப்பையும், உணர்ச்சியையும் கவனித்துப் பார்த்தால் விளங்கிவிடும் நாம் எவ்வித சுயநலத்தையோ பலாத்காரத்தையோ குறிவைத்து இப்படி பேசவில்லை. ஆனால் மக்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து சகிக்க முடியாமல் பரிதாபத் தாலேயே தான் இப்படிப் பேசுகிறோம்.

(குறிப்பு: 28.02 1933 இல் விருதுநகர் அம்மன் கோவில் முன்பு சுயமரியாதை சங்க சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை.)

(குடி அரசு - சொற்பொழிவு - 12.03.1933)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக