முதலாளிகளுக்கு தங்களது வாழ்நாளைப் பற்றிய கவலை
என்பதே கிடையாது. மற்றபடி அவர்களது கவலை எல்லாம் தங்களுக்கு வேண்டியது போக மீதி இருப்பதை
எப்படி பத்திரப் படுத்துவது, எப்படி பெருக்குவது, எப்படி சுகபோகங்களைப் பெருக்கி அனுபவிப்பது
என்பவை போன்றவைகளைப் பொருத்ததேயாகும்.
இவர்கள் வேலை செய்து அன்றாடம் கூலி பெற்று ஜீவிக்கும்
ஜனங்களைப்போல் நாளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது, வீட்டு வாடகைக்கு என்ன செய்வது, துணிக்கு
என்ன செய்வது, குழந்தை பிறந்து விட்டதே அதற்கு வகை என்ன? அதற்கு பால் எங்கே? படிப்புக்குப்
பணம் எங்கே? அதை எப்படி வளர்ப்பது? வியாதி வந்து விட்டதே! எப்படி தப்புவது? வைத்தியனுக்கு
பணம் எங்கே? என்பது போன்ற கவலைகளை அவர்கள் அறிந்திருக்கவே மாட்டார்கள். இந்த கவலைகள்
எல்லாம் தொழிலில் ஜீவிப்பவர்களைத்தான் பற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒருதேசம் என்பது
இருப்பதற்கே காரணமும் ஆதாரமும் தொழில் செய்யும் மக்களால் தானே தவிர வேறில்லை.
இந்த மக்களின்
தொழிலின் பயனை அனுபவிப்பதினால் தான் சிலர் முதலாளிமார்களாகி தங்கள் முதலாளி தத்துவம்
நிலை நிற்கவும் பெருகவும் ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தி அதற்கு ஓர் அரசனை ஏற்படுத்திக்
கொண்டு தொழிலாளிகளை அடக்கி வைத்து வாழ்ந்து வருகிறார்கள். அரசனென்றால் ஒரு வேலையும்
செய்யாமல் அநாவசியமான ஜீவனாய் இருந்து கொண்டு, வாரம் ஒன்றுக்கு பத்தாயிரம் பவுன்போல்
உதவி தொகையும், மேல்கொண்ட தனது முழுச் செலவுக்கும் வேறு படித்தொகையும் பெற்றுக் கொண்டு,
தன்னுடைய கையெழுத்தை எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போட்டுக் கொள்வதற்கு
முதலாளிமார்களுக்கு அனுமதி கொடுத்து தன் பெயரால் எதையும் செய்யும்படி விட்டுக் கொண்டும்,
சில சமயங்களில் முதலாளிமார்கள் சொல்லிக் கொடுத்ததை சொல்லிக் கொண்டு இருப்பவரே ஆகும்.
உண்மையிலேயே இந்தக் காரியம் தவிர மற்றெதுவும் தெரியாத வரையும் சிறிதும் சுயமரியாதை
அற்றவர்களையும்தான் மிக நல்ல அரசர் என்று முதலாளிமார்கள் கொண்டாடுவார்கள். இளவரசர்
என்பதும் இதே சங்கதியில் சிறிது குறைந்த அளவு கொண்டவர் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
இந்தக் கூட்டங்கள் தொழிலாளிகளிடம் அதாவது வேலை செய்து
ஜீவனம் செய்யும் கூ.லிஜனங்களிடம் மிக அன்பு இருப்பதாகக் காட்டிக் கொண்டு இவர்களுக்காக
பரிதாபப்படுகிறவர்கள் போலவும் பேசிக் கொண்டு, தொழிலாளர் சங்கம் என்றும் பொது
ஜனசேவை சங்கம் என்றும் ஏற்படுத்தி, அவைகளுக்குத் தாங்களே முழு நிர்வாகிகளாய் இருந்து
கொண்டு அவர்களது கூலிக்காரத்தன்மையும், ஏழ்மைத் தன்மையும் நிரந்தரமாய் இருக்கவும்,
தாங்கள் மேலும் மேலும் முதலாளிகளாகி நிரந்தர பிரபுக்களாக இருக்கவும் ஆன காரியங்களைச்
செய்து கொண்டு தொழிலாளர்களை ஏமாற்றிக் கொண்டே வருவார்கள், இன்று இருந்து வரும் தொழிலாளர்கள்
சங்கங்கள் தொழிலாளர்களை நசுக்கவும், ஏய்க்கவும் ஏற்பட்டவைகளேயாகும்.
இன்று உலகில்
நடைபெறும் எல்லாவிதமான அக்கிரமங்களுக்கும் அநியாயங் களுக்கும் தொழிலாளிகள் பேரால் பொது
ஜனங்கள் பாமர ஜனங்கள் பேரால் ஏற்பட்ட சங்கங்கள், கட்சிகள் ஆகியவைகளேயாகும். இவை ஒரு புறமிருக்க இச்சங்கங்கள்
உண்மையாக தொழிலாளிகளுக்கும் பொது ஏழை ஜனங்களுக்கும் பாடுபட என்ற கட்சிகளையும் உண்மையாகவே
உலகத்தில் தொழில் செய்து பிழைக்கும் மக்கள் ஆட்சிக்கு வேண்டும் என்று பாடுபடும் கட்சிகளாகிய
சமதர்மக் கட்சி பொதுவுடமை கட்சிகளாகியவைகளையும் அழிக்கப்பாடுபடுகின்றன. அவைகளுக்கு
நேர் விரோதமாகவே பாடுபடுகின்றன. தொழிலாளிகள் கூடி தங்கள் நலத்தைப் பெருக்குவதற்கும்,
தங்கள் கஷ்டத்தைக் குறைத்துக் கொள்வதற்கும் தங்கள் வேலைக்குத் தகுந்த கூலிகிடைப்பதற்கும்
முயற்சி செய்யப்படும் வேலைகள் எல்லாம் சட்ட விரோதமானதாகப் பாவிக்கப்படுகிறது. தொழிலாளிகளை
மோசம் செய்து அவர்களை வாட்டி இம்சித்து வேலை வாங்கி, வயிறார கஞ்சிக்கும். இடுப்பாரத்துணிக்கும்
வெளியில் மழை மேல் படாமல் குடியிருக்க வீட்டுக்கும் வகை இல்லாமல் கொடுமைப்படுத்தி மோசம்
செய்வது சட்ட சம்மதமாகக் கருதப்படுகிறது.
தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகள் செயல்களை
எல்லாம் தொழில் திறமையாகவும், நிர்வாகத் திறமை யாகவும் கருதப்படுகிறது. முதலாளியைத்
தொழிலாளி ஏமாற்றுவது நாணயக் குறைவானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக் குற்றத்தில்
சேர்ந்தது என்பதாக ஆகிவிடுகின்றது. இதற்குக் காரணம் எல்லாம் முதலாளிமார்கள் ஆட்சி வலுத்திருக்கிறது.
அவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதற்கு அரசாங்கத்தின் சலுகை இருக்கிறது. அவர்களது நன்மைக்கு
என்றால் உலக முதலாளிகள் எல்லாம் ஒன்று கூடி விடுகிறார்கள். முதலாளிகள் நன்மையில் ஒவ்வொரு
முதலாளிக்கும் கவலை இருக்கிறது. அரசாங்கமும் அவர்கள் கைவசமிருக்கிறது. சட்டசபை அவர்கள்
கைவசமிருக்கிறது. சட்டசபையில் 100க்கு 90பேர் அவர்கள் இனத்தவர்களாகவே அவர்களைத் தழுவி
ஆதரிப் பவர்களாகவே சேர்ந்து விடுகிறார்கள் ஆனால் தொழிலாளிகளுக்கோ குடிஅரசு உண்மையான
சங்கம் என்பது இல்லை. ஒற்றுமை என்பது இல்லை. தக்க பிரதிநிதித்துவம் என்பதில்லை ஒன்று
படக் கவலையுமில்லை மார்க்கமும் இல்லை.
தொழிலாளிகளை முதலாளிகள் தங்கள் நன்மைக்கு உபயோகித்துக்
கொள்ளுகிறார்கள் தொழிலாளிகளை ஆயுதங்களாகக் கொண்டுதான் முதலாளிகள் ஒருவரோடொருவர் யுத்தம்
செய்து கொள்ளுகிறார்கள். இரண்டு முதலாளிகள் சண்டை போட்டுக் கொள்ளுகிறார்கள். இரண்டு
முதலாளிகள் சண்டை போட்டுக் கொள்வதின் பயன் தொழிலாளிக்குத் தான் நஷ்டமாகவும் உயிர் பலியாகவும்
முடிகின்றதே தவிர முதலாளிகளுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. சரீரத்தில் வேலை செய்யாத சோம்பேறி
அன்னியர்கள் உழைப்பில் வாழ்கின்றவன் ஆகியவர்களுக்கே தொழிலாளிகள் ஓட்டுக் கொடுத்து தங்கள்
பிரதிநிதியாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள்.
பிறகு இந்த
சோம்பேரிகள் ஊரார் உழைப்பில் வாழ்கின்றவர்கள் தொழிலாளிகளின் பிரதிநிதிகளாய் ஆனவுடன்
முதலாளிகளாகவே ஆகப்பார்க்கின்றார்கள் அனேகர் முதலாளிகளாகவே ஆகிவிடுகிறார்கள். அனேகர்
முதலாளிகளுக்கு உளவாளிகளாயிருந்து தொழிலாளிகள் நலத்தை விற்று தொழிலாளிகளைக் காட்டிக்
கொடுத்துத் தாங்கள் வாழ்கிறார்கள்.
சரீரத்தில்
பாடுபடுகின்றவன் தவிர, வேறுயாரும் தொழிலாளிகளுக்குப் பிரதிநிதியாக இருக்கக் கூடாது. எந்த சபையிலும் தொழில்
செய்பவனே தொழிலாளர் பிரதிநிதியாக இருக்க வேண்டும். உலகின் சகல துறைகளைச் சேர்ந்த ஆட்சிகளும்
தொழிலாளர்கள் கைக்குள்ளாகவே வரவேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் தகும், அப்படிப்பட்ட
ஆட்சி தான் பொது ஜன ஆட்சியாகும். அப்படிப்பட்ட பொது ஜன ஆட்சி என்பது உலகப் பொது ஜனங்கள்
நன்மைகளை எல்லாம் கருதியதாக இருக்க வேண்டும். அப்படிக் கில்லாமல் ஒரு தேசத் தொழிலாளிகள் மாத்திரம் அந்த ஆட்சி பெற்றால் போதும்
என்பது தற்கொலையேயாகும். அதனால் உலக தொழிலாளர் கஷ்டம் நீங்காது. மற்ற தேசத் தொழிலாளர்
கஷ்டம் அதிகரிக்கும். உலக தொழிலாளர் யாவருமே
விடுதலை பெற்று ஆட்சிபெறும் மார்க்கந்தான் நிரந்தரமான நன்மையை கொடுக்கும். இல்லாத வரை
மற்ற தேச முதலாளிகள் ஒன்று சேர்ந்து தனிச்தேச தொழிலாளர் ஆட்சியை அளிக்கப் பார்ப்பார்கள்.
உலகில் வேலை செய்பவர்களைத் தவிர மற்றவர்கள் இருக்கக்
கூடாது. ஒருவர் சௌக்கியமாயிருக்க மற்றவன் கஷ்டப்படுவது, பட்டினி கிடப்பது ஜீவனத்திற்கு
மார்க்கமில்லாமல் திண்டாடுவது என்கின்ற நிலைமை எங்கிருந்தாலும் அவைகள் ஒழிக்கப்பட வேண்டும்.
அவைகளுக்குக் காரணமானவைகள் வேருடன் அழிக்கப்பட
வேண்டும்.
யந்திரங்களால்
ஏற்பட்டது சரீரங்களால் கஷ்டப்படும் மக்களின் கஷ்டத்தை குறைத்து வேலைகளை சுளுவாகவே ஒழிய
மற்றபடி வேலை செய்யும் ஆட்களைப் பட்டினி போட்டு விட்டு முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதித்து
பணம் சேர்ப்பதற்காகவல்ல என்பதை பொது ஜனங்களும் முதலாளிகளும் உணரவேண்டும். யந்திரங்கள் வேலை செய்வதால் ஏற்படும் லாபம் ஏராளமாய் இருக்கும்போது, பொது ஜனங்கள்
ஏன் பட்டினி கிடக்க வேண்டும். யந்திர லாபத்திற்கு விதிக்கப்படும் வரிகள் உத்தியோகஸ்தர்கள்
சம்பளக் கொள்ளைக்கும் அரசர்கள் அதிகார வர்க்கக்காரர்கள் அனுபவக் கொள்ளைக்கும் மக்களை அடக்க என்று வளர்க்கப்படும் பட்டாள செலவுக்குமே
போய் விடுகிறதே தவிர பட்டினி கிடந்து சாகும் மக்களைப் பற்றி கவலையே கிடையாது.
அரசாங்கம் தொழிலாளிகளுடையதாகுமானால், பொது ஜனங்களுடையதாகுமானால்
இந்த யந்திர சாலை லாபமெல்லாம், பொது ஜனங்களுக்குக் கிடைக்கும், தொழில் செய்பவர்களுக்கெல்லாம்
வேலை நேரத்தைக் குறைத்து வேலையைப் பங்கிட்டுக் கொடுத்து ஜீவனத்திற்கு வேண்டியதை கொடுக்க
முடியும். முதலாளிகள் வசம் முதலாளிகள் ஆதிக்கத்தில் ஆட்சி இருக்கும் வரை ரூபாய்க்கு
5 ரூபாய் லாபம் கிடைக்கும் படியான தொழிலாயிருந்தாலும் அவை முதலாளிவர்க்கத்திற்கும்
அதிகார வர்க்கத்திற்கும் தான் கொள்ளை போகுமே யொழிய ஒரு நாளும் தொழிலாளி வர்க்கம் தாராளமாய்
ஜீவிக்கப்பயன் படாது. இந்தத் தகவர் யந்திரத்தின் பயனாகவே இத்தனை பேர்கள் பட்டினி கிடக்கிறார்கள்
என்றால் இனியும் அதிகமாக எத்தனையோ மாதிரியான யந்திரங்கள் ஏற்படப் போகின்றது என்று சொல்லிக்
கொள்ளப்படுகிறது போல் ஏற்பட்டால், அப்போதைய நிலை என்னாகும் என்பதை யோசித்துப்பாருங்கள்.
வேலையாளுக்கு வேலை யில்லை ஆனதினால் யந்திரங்கள்
வேண்டாம் என்று சொல்லுவதா? அல்லது யந்திரத்தின் வேலை சுளுவின் பயனை வேலையாட்கள் அனுபவிக்க
வேண்டுமே தவிர முதலாளிவர்க்கம் கொள்ளை அடிக்கக் கூடாது என்பதா என்பதைப் பற்றி யோசித்துப்
பாருங்கள். அதிகாரிகள் அடிக்கும் கொள்ளையை நிறுத்த வேண்டுமானால் முதலாளி ஆதிக்க அரசாங்கத்தைக்
கவிழ்க்க வேண்டும் அப்பொழுதுதான் உலகில் எல்லா மக்களும் சுகமாக வாழலாம்.
தொழிலாளர் ஆட்சி செய்யும் அரசாங்கம் நடக்கும் ரஷியாவைப்
பாருங்கள். அங்கு யந்திரங்கள் தினத்திற்கு தினம் பெருகி, ஒவ்வொரு யந்திர சாலைகளிலும்
பத்தாயிரம் இருபதாயிரம், முப்பதாயிரம் ஆணும் பெண்ணும் சரி சமமாக வேலை செய்கிறார்கள்.
அங்கு ஒருவருக்குக் கூட வேலை யில்லை என்று சொல்ல முடியாது. ஒருவராவது பட்டினி கிடக்கிறார்கள்
என்று சொல்ல முடியாது. ஒருவருக்காவது நாளைக்கு என்ன செய்வது என்ற கவலையே கிடையாது.
ஓ தேசீயவாதிகளே! இதற்கென்ன பதில் சொல்லு கிறீர்கள்?
(குடிஅரசு - தலையங்கம் - 11.12 1932)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக