வியாழன், 27 பிப்ரவரி, 2020

நாகம்மாள் மறைவு – தந்தை பெரியார்


எல்லாம் நன்மைக்கே

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11-5-33 தேதி மாலை 7-45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படியிருந்தாலும் நாகம்மாளை “மணந்து” வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷகாலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான் தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை. நான் சுயநலவாழ்வில் 'மைனராய்' 'காலியாய்' “சீமானாய்' இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிரத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால் நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும், ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும், மூர்க்கமாகவும், குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவ தொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநல காரியங்களுக்கும், சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பது தான். நாகம்மாள் நான் காங்கிரசிலிருக்கும் போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத்திலும், சு.ம. இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட்டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே

எது எப்படி இருந்த போதிலும் நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரிய மல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினாள். இதிலொன்றும் அதிசயமில்லை.

நாகம்மாளை அர்ப்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ் நாளாகிய 23 1/2 இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழுக வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டும் என்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில் எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமிருக்காது. அத்துடன் அதைக்கண்டு சகியாத முறையில் யானும் சிறிது கலங்கக்கூடும்.

ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் “குடும்பத் தொல்லை" ஒழிந்தது என்கின்ற ஒரு உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.

இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்துக்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப் படுத்திக்கொள்ள மாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்துக் கொள்வாள். ஆதலால் நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடு செய்ய முடியாத நஷ்டம் என்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயமல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்களானால் அவர்களும் என்னைப் போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல் நாட்டுச் சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷ காலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வரும் என்று கருதியது.

மூன்றாவதாக நமது "புதிய வேலைத்திட்டங்களை” உணர்ந்த பின் ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம். ஆகிய இப்படிப்பட்ட அற்ப காரணங்களே அவ்வம்மைக்கு “கூற்றாக” நின்றது என்றால் இனி இவற்றை விட மேலானதான பிரிவு, ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்பட இருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். 2, 3 வருஷங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் (சங்கராச்சாரிகள் போல) - (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடனல்ல) (பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆனால் அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள், இப்போது அந்த தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக.
- ஈ.வெ.ரா.
(குடி அரசு - தலையங்கம் - 14.05.1933)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக