திங்கள், 24 பிப்ரவரி, 2020

தீண்டாதார் – தந்தை பெரியார்


“பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித் துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமானதென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத்திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலேயோ அவர்கள் முன்னேறவேயில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5 ல் ஒரு பாகம் ஜனங்கள் தேசநலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப் புலிகளுக்கு இதைப்பற்றிக் கவலையிராதுதான். பொறுப்புள்ள பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை. இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான் சொல்லவேண்டும்.

சுமார் 25 வருடங்களுக்கு முன்பாகவாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்குமேயானால் இன்றைய தினம் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப்பிராய பேதங்களும், ஒற்றுமையின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிராமணக் கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா? தெருவில் நடக்கக் கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறியக்கூடாத மனிதனும், அவனவன் தெய்வத்தைக் காணக் கூடாத மனிதனும் இந்தியாவில் இருக்கக்கூடுமாவென்பதை பொது நோக்குடைய ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டுவதோடு ராஜீய மகாநாட்டில் இதை வலியுறுத்தி அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேச பக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.”
(தமிழர் மகாநாடு)
(குடிஅரசு - தலையங்கம் - 08.11.1925)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக