புதன், 5 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 01:-


தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்காகப் பாடுபடுகிற இயக்கத்தைப் பற்றிய பெரியாரின் கருத்து:-
(குடிஅரசு இதழில் பெரியார் முதலில் எழுதியது(குடி அரசு - 28.06.1925))

"தொழிலாளர்கள் என்பது யார்? என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடையவனாகவிருக்கிறேன்.
… …
தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உப கருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அதுபோல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வஸ்துவும் அதற்கு உப கருவியாகவிருந்து. அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது.

இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆகமாட்டார்கள்.

இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதேயல்ல. இவர்களாகவே கூலிக்கு அமர்ந்து கொண்டு அடிமைபோல் சொல்லுகிறதைச் செய்கிறதாகவும் சம்மதித்து, பிறகு எஜமானன் அதிக இலாபம் அடைவதைப் பார்த்துப் பொறாமை கொண்டோ, தொழில் திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்குப் போதாது என்ற காரணத்தினாலோ தாங்கள் இல்லாவிட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிக கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம், வேலை நிறுத்தம் செய்தபின் வேறு ஒருவன் அந்த வேலை செய்யவும் சம்மதிக்கமாட்டோம்.

முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடைய வேண்டும் என்கின்ற முதலியனக் காணப்படும் செயல்களையும் அதன் பலன்களையும் தான் தொழிலாளர் இயக்கமென்பதும், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றி தோல்வியாய்க் கருதப்படுவதுமாகவிருக்கிறது.

இதைக் கூலிக் காரர்கள் இயக்கம் என்றுதான் கூறலாம்”

1 கருத்து: