“தொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாளருக்குத் தலைவராயிருக்கக் கூடாதென்று அநேகத் தடவைகளில் நாம் எழுதியும் தொழிலாளர் கூட்டங்களில் பேசியும் வந்திருப்பது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
அல்லாமலும் இம்மாதிரி வேலை நிறுத்தம் செய்வதைப் பற்றியும் நாம் பலமாகக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்திருப்பது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.
ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் எந்த விதத்தில் என்ன மாதிரியான தொழிவாளராவார். அல்லாமலும், அவருக்கும் தொழிலாளர்களுக்கும் எந்த விதத்தில் சம்மந்தம் உண்டு. அவர் தேசத்தை பாழ்பண்ணியும், பாமர மக்களை வஞ்சித்தும், நாணயக் குறைவினாலேயே காலத்தை கழிக்க வேண்டியதான வக்கில் உத்தியோகம் செய்பவர். அன்றியும் மக்களை சமமான கண்ணில் பார்க்காமல் 100க்கு 99 பேர்களான தொழிலாளிகளையே அதாவது தங்கள் சரீரத்தால் உழைத்துச் சாப்பிடும் கண்ணியமானத் தொழில் மக்களைத் தாழ்ந்த பிறவி என்றும், மக்களை ஏமாற்றி ஊரார் உழைப்பால் பிழைக்கும் தன்னைப் போன்றார்களை உயர்ந்த பிறவியென்றும் எண்ணி, அந்தப்படிக்கே நடந்து வருகிற சாதியை சேர்ந்தவர்.
… … …
இதற்கு உதாரணமாக பார்ப்பனரல்லாதார்களில் 100க்கு 99 பேர்களால் போற்றப்பட்டும் மரியாதை செய்யப்பட்டும் வந்த, வருகிற பெரியாரான சர்.தியாகராயப் பெருமானவர்களின் வீட்டுக்கு இது போன்ற தொழிலாளர் கூட்டங்களை ஒருகாலத்தில் ஏவிவிட்டு, அவரை அடிக்கச் செய்ததும், அவர் வீட்டு ஜன்னல், கதவு, கண்ணாடிகளை உடைக்கச் செய்ததும், அவரது அருமை மனைவியார் இந்த தொழிலாளர்களிடம் தனக்கு மாங்கல்யப் பிச்சை கொடுக்க வேண்டுமென்று தனது முந்தானையைப் போட்டுக் கும்பிட்டுக் கெஞ்சினதும் யாரும் அதற்குள் மறத்திருக்க முடியாது.
சென்றமாதத்தில் அதே தொழிலாளர் கூட்ட நண்பரில் ஒருவர் முனிசிபல் ஸ்தானத்துக்கு நின்றபோது அவருக்கு எதிரிடையாய் அவர்களை ஏவிவிட்ட கூட்டத்தாரே வேலை செய்து அவரைத் தோற்கடிக்கப் பார்த்ததும் ஜன்னலும் கதவும் உடைக்கக் கொடுத்து, மாங்கல்யப் பிச்சை கேட்ட கூட்டத்தாரே அத்தொழிலாளர்களுக்கு உதவி செய்ததும் யாவரும் அறிந்திருக்கக்கூடும். நிற்க.
… … …
அப்படிக்கில்லாமல் முதலாளி கூட்டத்தில் சேர்ந்து கொண்டு தன்னுடைய பணத்துக்கு வருஷம் 1-க்கு 30, 40, 50 வீதம் வாபம் சம்பாதித்து மூட்டைக் கட்டிக் கொண்டு தொழிலாளர்களிடம் வந்து "நான் உங்களுக்காக பாடுபடுகிறேன். முதலாளிகள் செய்வது. அக்கிரமம். சர்க்கார் செய்வது அக்கிரம்" என்று பேசி பாமர மக்களின் ஓட்டைப் பெற பார்ப்பதினால் தொழிலாளர்களுக்கு என்ன லாபம் வந்து விடும். இவர்களுடைய முயற்சிகள் எந்த விதத்தில் யோக்கியமான பலனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை நேயர்கள் யோசிக்க வேண்டும்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I- பக்- 36-37 -38-39)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக