திங்கள், 3 பிப்ரவரி, 2020

4) தொழிலாளர்கள் நிலை மாற – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

28.4.1 நாள் முழுதும் பாடுபட்டும், வேலை செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களைத் திரும்பிப் பார் என்றால் நமது மதப் பிரச்சாரகர்கள் கடவுளைப் பார் என்கிறார்கள். - 28.4.2 யந்திரங்கள் ஏற்பட்டதின் பயனாய்ச் சனங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்யும் வேலைத் தன்மையை அது ஒழித்ததே தவிரப் பணவருவாய்த் தன்மையை அது ஒழித்து விடவில்லை.

28.4.3 யந்திரங்களைத் துவேசிக்கின்ற ஒவ்வொருவரும், முதலாளி ஆதிக்கத்திற்கு அடிமையாகவோ - அல்லது முதலாளித் துவத்தை அறியாத ஞான சூன்யர்களாகவோ இருக்கின்றவர்களே தவிரச் சிறிதாவது தொழிலாளி (சரீரத்தினால்) - கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களின் நிலையைக் கண்டு இரக்கப்படத் தகுதியுடையவர்களல்ல.

28.4.4 எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத் தத்துவமாய் இருக்க வேண்டும்.

28.4.5 தொழிலாளிகளது கஷ்டமும், துன்பமும், அடிமைத் தனமும், கவலையும், குறையும் நீங்க வேண்டுமானால் முதலாளித் தன்மை என்பது இல்லாமல் போயே ஆக வேண்டும். அப்படிக் கில்லாமல் வேறு எப்படிப்பட்ட காரியம் செய்தாலும் தொழி லாளி துன்பமும், இழிவும், தரித்திரமும் ஒரு நாளும் ஒழியாது.

28.4.6 குமாஸ்தாக்களுக்கு ஓய்வு வேண்டாமா? அநேகக் குமாஸ்தாக்களுக்குத் தங்கள் பிள்ளை குட்டிகளையும், பெண் சாதிகளையும் வெளிச்சத்தில் பகல் காலத்தில் பார்க்கக்கூட நேரம் கிடையாது. பிள்ளைகள் எழுந்திருக்கு முன் கடைக்கு ஓடிவர வேண்டும். பிள்ளைகள் தூங்கின பிறகு வீட்டுக்குப் போக வேண்டும். இப்படித்தான் இருக்கிறது. லீவ் நாட்களும் கிடையாது. இது மிகவும் கொடுமையான சீவ இம்சையான காரிய மாகும்.

28.4.7 குமாஸ்தாக்கள் நாணயமாய் இருக்க வேண்டும் என்பதில் அருத்தமே இல்லை. குமாஸ்தாவை முதலாளி நன்மைக்காக முதலாளியே திருடச் சொல்கிறான். அத் திருட்டில் ஒரு நேர்மையான பங்கு கொடுப்பதாய் இருந்தால் குமாஸ்தாவைத் திருடாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ள உரிமை உண்டு.

28.4.8 பாடுபடும் வகுப்பு என்று ஒன்றும் அந்தப் பாட்டின் பயனை அனுபவிக்கும் வகுப்பு என்று ஒன்றும் இருக்கக்கூடாது என்று சொல்லுகிறோம். அப்போதுதான் மனிதச் சமூக ஏழ்மை யும் குறையும் நீங்கும் என்கிறோம்.

28.4.9 தொழிலாளர்களின் விடுதலையே தமிழர்களின் விடுதலை; பார்ப்பன ரல்லாதாரின் விடுதலை யாகும். பார்ப்பன ரல்லாதார் முன்னேற்ற மென்பது உண்மையில் தொழிலாளர் முன்னேற்றமே.

28.4.10 தொழிலாளிக்கு வேண்டியது தொழிலின் பயனைச் சம உரிமையுடன் அனுபவிக்க வேண்டும்; அடைய வேண்டும் என்பதோடு தான் அந்த யந்திரசாலைக்கு ஒரு கூட்டாளியாகப் பங்காளியாக இருக்க வேண்டுமே ஒழிய ஒரு தொழிலாளியாக வேலைக்காரனாக இருக்கப்படாது என்பதே யாகும். தொழிலாளி முதலாளித் தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்ற பெயரும் இருக்கக் கூடாது. ஒரு தொழிற் சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகளாக அல்லாமல் கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம்; அடிமைத் தனம்; மானமற்றதனம்.

28.4.11 தொழிலாளிக்கு அதிகக் கூலியும், வீடு, வைத்தியம், படிப்பு வசதியும் முதலாளி செய்வது என்பது, ஒருவன் தன் மனைவியை எப்போதும் அடிமையாய் அடைத்துத் தனது நலனுக்கு வைத்திருப்பதில் அவளை அந்தக் காரியத்தில் உற்சாக மூட்டி நல்ல பக்தி விசுவாச முள்ள அடிமையாகச் செய்யத் தங்க, வைர நகை, பட்டுச் சேலை, சீப்பு, சோப்பு, கண்ணாடி, வாசனை எண்ணெய், பவுடர் வாங்கிக் கொடுப்பது போலவே தவிரச் சம உரிமை அடைவதற்கு அல்ல என்பது போலவே யாகும்.

28.4.12 அவதிப்படும் தோழர்கள் மனம் முறிந்து கிளர்ச்சி செய்வதாகக் கூறுவார்களானால் அவர்களை அடிக்கிறேன் உதைக்கிறேன் என்று பயமுறுத்துவதாலோ அல்லது சுட்டுத் தள்ளுவதாலோ யாதொரு பலனும் ஏற்பட்டுவிடாது. இப்படிச் செய்வது அரசியல் ஞானம் போதாது; அனுபவ அறிவு போதாது; பரம்பரைக் குணம் சரியானதல்ல என்பதைத்தான் காட்டுமே ஒழிய மக்கள் அடங்கிவிட மாட்டார்கள். இதை ஆட்சியாளர்கள் திருத்திக் கொண்டு நீதி நேர்மையோடு ஆட்சி புரிய வேண்டும்.

28.4.13 தொழிலாளி உயர வேண்டுமானால் தொழிலாளி என்ற பிரிவு ஒழிய வேண்டும். தொழிலாளி நிலை ஒழிய வேண்டுமானால் முதலாளி என்ற வார்த்தையே, பிரிவே ஒழிய வேண்டும். ஏனெனில் பிராமண வர்க்கம் இருக்கும் வரை சூத்திர வர்க்கம் இருந்தே தீரும் என்பதுபோல் முதலாளி வர்க்கம் இருக்கும்வரை தொழிலாளி வர்க்கம் இருந்தே தீரும்.

28.4.14 இராசாக்கள் ஒழிய வேண்டும், ஏகாதிபத்தியம் ஒழிய வேண்டும் என்று கிளர்ச்சி செய்வதற்காக ஏகாதிபத்திய ஒழிப்புச் சங்கங்கள் (ஆண்டி இம்பீரியலிஸ்ட் சங்கங்கள்) உலகில் ஏற்பட்டதால்தானே மக்கள் ஆட்சி ஏற்பட்டது. சமீன்தார்கள் ஒழிப்புச் சங்கங்கள் ஏற்பட்டு இன்று சமீன்தார்களை ஒழிக்கப் பாடுபடவில்லையா? அதே போல் முதலாளி ஒழிப்புச் சங்கங்கள் ஏற்பட்டு முதலாளிகள் ஒழியப் பாடுபடுவதற்கு என்ன தடை இருக்க முடியும்? முதலாளி வர்க்கம் ஒழியாமல் முதலாளியிடம் எவ்வளவு பங்கு வாங்கினாலும் தொழிலாளித் தன்மை ஒழியாது என்பது என் அபிப்பிராயம்.

28.4.15 எப்படிச் சுற்றிச் சுற்றிப் போனாலும் கூலி உயர்வு, சம்பள உயர்வுக் கிளர்ச்சிகளால் கஷ்டப்படுகிறவர்கள் இப் பாட்டாளி மக்களே ஒழிய, ஒரு முதலாளியாவது எந்தச் சங்கடத்திற்கும் உள்ளாவதில்லையே. இதற்கு என்ன அர்த்தம்? தொழிலாளர்கள் சங்கம் கூலி உயர்வு, சம்பள உயர்வுக் கிளர்ச்சியால் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளு கிறார்களே ஒழிய முதலாளிகள் அழிவதில்லை என்பதுதானே இதன் தாத்பர்யம்?

28.4.16 இன்று அய்ந்து இலட்ச ரூபாய் மூலதனப் பங்கு வைத்து ஒரு புதிய மில் திறப்பதாக வைத்துக் கொண்டால் அதிலே தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்யும் தொண்டுக்காக என்று அவர்கள் பெயரால் ஒரு லட்சம் ரூபாயைத் தொழிலாளர் கஷ்டப் பங்கு என்று கவுரவப் பங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். வருடக் கடைசியில் அந்த மில்லுக்கு வருகிற லாபத்தில் ஆறு லட்ச ரூபாய்க்கு விகிதம் பிரித்து ஒரு லட்ச ரூபாய்க்கு விழும் இலாபத் தொகையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

28.4.17 தொழிலாளிக்குக் கொடுக்கப்படும் கூலி, சம்பளம் ஆகியவை எல்லாம் எப்படி ஒரு இயந்திரம் வேலை செய்யாமல் நின்று போகக் கூடாது என்பதற்காகவும், அது தேய்ந்து போகக் கூடாது என்பதற்காகவும் அதற்கு எண்ணெய் போடுகிறானோ, அது போலத் தொழிலாளர்கள் நல்ல உடல் நலத்துடன் மன நலத்துடன் இருந்து வேலை செய்ய வேண்டும் என்பதற்குச் செலவு செய்யப்படும் பாதுகாப்புச் செலவாகக் (மெயின்டினன்ஸ்) கருத வேண்டும்.

28.4.18 மதம், கடவுள், சாத்திரங்கள், விதி, பகவான் செயல் என்பவைக ளெல்லாம் முதலாளிகளுக்கு, அவர்களின் முதலாளித் தன்மை நீடூழி வாழ்வதற்கு, அழியாமல் இருப்பதற்கு ஆகத்தான் ஒரு கற்கோட்டையாக இருக்கிறது. அவைகள் அழியாமல், அழிக்கப்படாமல் முதலாளித் தன்மை அழியாது.

28.4.19 இயந்திரத்திலே வேலை செய்யும் தொழிலாளியைத் தாயாகவும், இயந்திரத்திற்கு முதல் போட்டவனைத் தந்தையாகவும் வைத்துக் கொண்டால் இவ் விருவருடைய முயற்சியால் கிடைத்ததே பிள்ளை என்ற லாபம். பிள்ளை தாய்க்கும் சொந்தம், தகப்பனுக்கும் சொந்தம். அவ்வித மிருக்கத் தந்தை மட்டும் உரிமை கொண்டாடுவது போன்று லாபத்திற்கு முதல் போட்ட முதலாளி மட்டும் உரிமை கொண்டாடுவது என்ன நியாயம்.

28.4.20 முதலாளிக்கு எப்படி மூலதனத்தில் பங்கும் லாபத்தில் உரிமையும் மற்ற சலுகைகளும் இருக்கின்றனவோ அதைப் போன்றே உடலுழைப்பை மேற்கொள்ளும் தொழிலாளிக் கும் இருக்க வேண்டும். முதலாளியைப் போல் தொழிலாளியும் மூலதனத்தில் பங்கு கொண்டவர்களாக ஆகும் வரை இரண்டு பேதங்களும் ஒழியப்போவ தில்லை.

28.4.21 தொழிலாளி முதலாளி என்ற இரண்டு நிலைகளையும் ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தொழிலாளி என்று இருக்கவும் கூடாது. முதலாளி என்று இருக்கவும் கூடாது. இவைகள் இரண்டும் இது வரை எதை அடிப்படையாய்க் கொண்டு நிலை நாட்டப்பட்டதோ அந்த அடிப்படைகளை முதலில் ஒழிக்க வேண்டும். அதன்படி அவைகள் ஒழிக்கப்படாத வரை இரண்டு பேதங்களும் ஒழிவதற்கு வழியே இல்லை .

28.4.22 தொழிலாளி என்று ஒருவன் ஏன் இருக்க வேண்டும்? அப்படி யிருந்தால் சமுதாயத்திலே தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளதைப் போன்று முதலாளித்துவ உலகில் தொழிலாளர் ஏன் இருப்பது? முதலாளி என்று ஒருவன் தன்னை இனியும் கூறிக் கொள்ள நாணயமான யோக்கியமான சுதந்திரச் சுயராச்சிய அரசாயிருந்தால் விட்டு வைப்பார்களா?

28.4.23 இன்று மனிதச் சமுதாயத்திற்கு இருக்கிற பெரிய கேடு நாணய மில்லை, ஒழுக்க மில்லை என்ப தாகும். இந்த இரண்டும் இல்லாத இடத்தில் மக்கள் வாழ்வு என்பது பூனை இருக்கு மிடத்தில் எலி வாழ்வது மாதிரிதான். இதி லிருந்து மாறுதல் அடைய வேண்டும். தொழிலாளர் நிலைமை ஒழுங்காக வந்து விடுகிறது என்றால் முதலாளி தானே திருந்திவிடுவான். அதுதான் இயற்கை.

28.4.24 தொழிலாளி மகன் தொழிலாளியாக இருக்கக் கூடாது என்பது எனது லட்சியச் சொல்... தொழிலாளி மகன் பரம்பரை பரம்பரையாகத் தொழிலாளி என்பது இல்லாமல் மறைய வேண்டும். மேலும் இந்த நாட்டில் தொழிலாளியே இருக்கக் கூடாது.... நான் தொழிலாளியே கூடாது என்பதெல்லாம் அவர்கள் பரம்பரையாகத் தொழிலாளிகளாக இருக்கக் கூடாது என்பதற்காகவே.

28.4.25 தொழில் செய்கிறவன் தாயாருக்குச் சமமானவன். முதல் கொடுப்பவன் தகப்பனாருக்குச் சமமானவன். உற்பத்தி யாகிற பண்டம் குழந்தைக்குச் சமமானது. தாயும் தகப்பனாரும் சேர்ந்து குழந்தை பிறந்தாலும் தாயாருக்குத்தான் அதிக உரிமை உண்டு. தகப்பனார் பொறுப்பு சாதாரணமாகப் பாதுகாப்பு தான், சம்பாதித்துக் கொடுப்பதோடு சரி. நேரிடையான தொடர்பு இல்லை. அது போலவேதான் முதலாளியும் தொழிலாளியும் சேர்ந்து உண்டாக்கிய குழந்தையான உற்பத்தியாகும் பொருளில் தொழிலாளருக்குத்தான் அதிகப் பங்கு உண்டு. அதிகம் தராவிட்டாலும் சம அளவாவது லாபத்தில் பங்கு தர வேண்டும்.

28.4.26 தொழிலாளர்க்குச் சிறிது கூலி உயர்வு கொடுப்பதைவிட அவர்களுடைய பிள்ளை குட்டிகளுக்குக் கல்வி, சம்பளம் இல்லாமல் படிக்க வசதி வேண்டும்; சோறு போட வேண்டும்; மற்ற வசதிகள் எல்லாம் செய்து தர வேண்டும்.

28.4.27 பத்து ஆண்டுகட்கு முன்பே சொன்னேன், இயந்திரம் மற்றும் எந்தத் தொழிலாயினும் தொழிற் சட்டத்தின் கீழ்க் கொண்டு வந்து தொழிலாளிகளுக்குச் சோற்றுக்குப் பணம் கொடுப்பதுடன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைத் தொழிலாளருக்குக் கொடுத்து ஆலையின் பங்குகளை வாங்கிக் கொடுக்கச் சர்க்கார் உதவ வேண்டும். இம் மாதிரி செய்தால் கிளர்ச்சிக்கு வழி யில்லாமலேயே போய் விடும்.

28.4.28 எந்த விதப் பலனு மில்லாமல் பொறுப் பேற்க முடியாது! ஆகவேதான் நிர்வாகத்தில் பங்கு என்று ஏற்படுமானால் பொறுப்பு அதிகமாக ஏற்படும். பொது மக்களின் நன்மைக்கும் அது பயன்படும். இரயில் கவிழ்ந்தாலும், சொத்து நாச மானாலும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் கேடில்லை; மக்களுக்குத்தான் கேடு. அது போலவேதான் மற்றதும்.

28.4.29 கூலி உயர்வு வேண்டும் என்பதைப் பற்றிச் சட்டம் கூடாது. வருகின்ற லாபத்தில் எத்தனை சதவிகிதம் பங்கு உழைப்பவர்க்கு என்று இருக்க வேண்டும். அப்போதுதான் முதலாளி - தொழிலாளி இருவர்க்கும் நட்பும் பாசமும் இருக்கும். தொழிலாளர்களும் கஷ்டப்பட்டுத் திறமையாக வேலை செய்ய வழி யேற்படும்.

28.4.30 தொழிலாளியைத் தொழிலாளியாகவே வைக்காமல், லாபத்தில் பங்கு கொடு, அப்படிக் கொடுக்கப்படும் பணத்தைக் கொண்டு தொழிலாளியையும், தொழில் தாபனத்தில் பங்குதாரர் களாகச் சேர்த்துக்கொள். தொழிலாளிகளுக்குக் கல்வி கொடு, சுகாதாரம் கவனி. வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுங்கள் என்றுதான் கூறுவேன்.

28.4.31 தொழிலாளிக்காக மற்றவர்கள் பாடுபடுவதற்கும் நாங்கள் (திராவிடர் கழகம்) பாடுபடுவதற்கும் வேறுபாடு உண்டு. மற்றவர்கள் பாடுபடுவது எல்லாம் எதற்காக என்றால் தொழிலாளி சாகிறவரை தொழிலாளியாக இருக்கணும். அவனது பரம்பரையும் தொழிலாளியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆகும். அதாவது நம்முடைய சூத்திரச் சாதி என்பதை நிலைக்க வைக்கவே ஆகும்.

28.4.32 கணவன் மனைவி நிலை மாறியது போல் எசமான் தொழிலாளி இவர்களின் நிலையும் மாறணும். இருவரும் சம உரிமை உள்ள கூட்டாளிகள் என்ற நிலை வந்தாகணும். அதற்கு இருவரும் விறைத்துக் கொண்டிருந்தால் முடியுமா?

28.4.33 தொழிலாளி முதலாளி என்ற பிரிவு உணர்ச்சியே நம் நாட்டில் தவறான அர்த்தத்தில் கையாளப்பட்டு வருகிறது. தொழிலாளி, முதலாளிகளிடத்தில் 50, 60 ஆண்டுகட்கு முன் இருந்த நாணயம், ஒழுக்கம் இன்று இல்லாமல் போய் விட்டது. இப்போது முதலாளிக்கு எதிராகத் தொழிலாளியும், தொழி லாளிக்கு எதிராக முதலாளியும் ஒருவரோ டொருவர் ஏமாற்றிக் கொண்டு வருவதன் விளைவு பொது மக்கள் தலையில் வந்து விழுகிறது.

28.4.34 தொழிலாளி என்ற வார்த்தை அகராதியில்கூட இருக்கக் கூடாது என்பதுதான் இன்றைய அறிவுக் கேற்ற கருத்தாகும். மானமோ அறிவோ இருந்தால் எவனும் தன்னைத் தொழிலாளி என்று கூறமாட்டான். கூலிதான் தேவை; தொழிலாளித் தன்மையில் திருப்தி என்ற நிலையி லிருந்து மீள வேண்டும்.

28.4.35 தொழில் உரிமைக்கு என்று ரகளை பண்ணுவது; தோல்வி வரும் போல் இருந்தால் சரண் அடைந்து விடுவது; என்று இருப்பதால்தான் தொழிலாளிகளுக்கு மரியாதை போய் விடு கின்றது. முதலாளியும் கேவலமாக மதிக்கின்றான்.

28.4.36 எல்லாத் தொழிற் சாலைகளிலும் தொழிலாளி களுக்குப் பணம் செலுத்தாவிடினும், மூலதனத்தில் 5-ல் ஒரு பாகம் பங்கு ஒதுக்கப்பட வேண்டும். தொழிலாளிகளுக்கு லாபத்தில் பங்கும் போனசும் அளித்து அதைப் பங்கு முதலீட்டுடன் சேர்த்து அவர்களைக் கூட்டாளிகளாக மாற்ற வேண்டும்.

28.4.37 கதர் எவ்வளவு முட்டாள் தனமும் காட்டுமிராண்டித் தன்மையும் கொண்ட தொழிலோ அதில் பாதி அளவு முட்டாள் தனமும் காட்டு மிராண்டித் தன்மையும் கொண்ட தொழிலாகும் இன்றைய கைத்தறித் தொழிலும் என்பதே எனது கருத்து. அது மாத்திரமே யல்ல, இனி யார் என்ன பாடுபட்டாலும் அதை நல் வாழ்வு வாழச் செய்ய முடியவே முடியாது என்பதும் எனது கருத்து.

28.4.38 தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கு கொடுக்கும் ஏற்பாடு சட்டத்தின் மூலம் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்..... ஒவ்வொரு துறையையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசாங்கமே ஏற்றுக் கொள்கிறது என்று சொன்னால் அதன் லாபம் எல்லாம் மக்களுக்குத்தானே சேருகிறது.

28.4.39 தொழிலாளர்கள் பங்கு வாங்கினால் மட்டும் போதாது. மூட நம்பிக்கைகளை விட்டுவிட்டுப் பகுத்தறிவு வாதிகளாக வாழ வேண்டும். எவ்வளவு வருமானம் வந்தாலும் சமுதாயத்தில் இன்னும் சூத்திரனாக, நான்காவது சாதியாக இழி நிலையில்தானே இருக்க வேண்டி இருக்கிறது? அதை மாற்ற வேண்டும்.

தொழிலாளர் – தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக