திங்கள், 3 பிப்ரவரி, 2020

1) பொதுவுடைமையின் விளக்கம் - பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

37.1.1 பொது உடைமைக் கொள்கையின் கடைசி லட்சியம் உலகம் பூராவும் ஒரு குடும்பம். உலக மக்கள் எல்லோரும் சகோதரர்கள். உலகத்தில் உள்ள செல்வம், இன்பம், போக போக்கியம் முதலியவை எல்லாம் அக் குடும்பச் சொத்து. குடும்ப மக்கள் (உலக மக்கள்) எல்லோருக்கும் அக் குடும்பச் சொத்தில் (உலகச் சொத்தில்) சரி பாகம் என்கின்ற கொள்கையே யாகும். ஆகவே பொது உடைமை என்பது ஒரு கணக்குப் பிரச்சினை (Mathematical Problem).

37.1.2 பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சம பங்கு என்பதாகும். பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

37.1.3 செல்வம் என்பது உலகத்தின் பொதுச் சொத்து. அதை யார் உண்டாக்கியிருந்தாலும் உலகத்தில் உள்ளவரை எந்தச் சீவனுக்கும் அது பொதுச் சொத்தாகும். ஆனால் அந்தப் பொதுச் சொத்தானது பலாத்காரத்தாலும், சூழ்ச்சியாலும், ஆட்சியாலும், கடவுள் பேராலும் ஒருவனுக்கு அதிகமாய்ப் போய்ச் சேரவும், மற்றொருவனுக்குச் சிறிதுகூட இல்லாமல் தரித்திரம் பசி முதலியவை அனுபவிக்கவும் ஆன தன்மை உண்டாக்கப்படுகிறதே ஒழிய மற்ற எந்தக் காரணத்தாலும் எவனுக்கும் இல்லாமல் போக நியாயமே இல்லை.

37.1.4 ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது ஏழைத் தன்மையே மனிதச் சமுதாயத்தில் இல்லாதிருக்குமாறு செய்வதே தவிர, அங்கொருவருக்கும் இங்கொருவருக்கும் பிச்சைச் சோறு போட்டுச் சோம்பேறியாக்குவ தல்ல.

37.1.5 சுரண்டும் கூட்டமும், தாழ்த்தப்பட்ட வகுப்பு, பிற்போக்கு வகுப்பு, உயர்ந்த வகுப்பு என்ற வகுப்பு வேற்றுமை களும், கடவுளும் மதமும் இல்லாததுதான் கம்யூனிசமாகும்.

37.1.6 கம்யூனிசம் என்பது என் கருத்துப்படி, மனிதச் சமுதாயத்திற்கு இருந்து வரும் இழிவுகளும், குறைபாடுகளும், கவலையும் நீக்கப்படுவதுதான்.

37.1.7 கூட்டுறவு என்பது வளர்ச்சி பெற்றால் அதுதான் சம தர்மம்; அதுதான் பொது வுடைமை என்றே கூறலாம்.

37.1.8 உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது.

37.1.9 சம தர்மம் பேசுகிறோம். எப்படிப்பட்ட சம தர்மம் ஏற்பட்டாலும் நம் சமுதாயமும், நாமும், பொது வுடைமைச் சமுதாயமாகவும் பொது வுடைமை நாடாகவும் ஆகும் வரை ஏழை - பணக்காரன் இருந்து தீருவான்; எசமான் - வேலைக்காரன் இருந்துதான் தீருவான்; முதலாளி - தொழிலாளி இருந்துதான் தீருவான். ஆனால் இந்த நிலையிலும் ஒரு கட்டுத் திட்டம், ஒழுங்கு முறை இருந்தால்தானே மனித வாழ்வும், காரிய நடப்பும் சரிவர நடந்தேற முடியும்?  

பொதுவுடைமை - பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக