வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 19:-


(சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டம் அமைப்பதற்கு தோழர்களை பெரியார் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சமதர்ம கட்சித் திட்டத்தைப் பற்றி அரசாங்க என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளது என்பதை லட்சியம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இரண்டு வகையில் செயற்படப் போவதாக கூறுகிறார். 1) சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டம் 2) சுயமரியாதை கட்சி)

                                                                      
சமதர்ம வேலைத் திட்டக் கூட்டம்:-

“இந்த மாதம் 28, 29 தேதி புதன், வியாழக் கிழமைகளில், ஈரோட்டில், சுயமரியாதை இயக்கத்தின் 1933 வருஷத்திய வேலைத் திட்டத்தைப் பற்றி யோசிக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்காக சுய மரியாதை இயக்கத்து பிரமுகர்களும், தீவிர பிரசாரர்களும் அபிமாளிகளும் ஆதரவளிப்பவர்களுமான தோழர் பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. சில முக்கிய பிரபவஸ்தர்களுக்கு அழைப்பு வந்து சேராமலோ, அல்லது அனுப்பத் தவறிப்போயோ இருந்தாலும் இருக்கலாம். அவற்றையெல்லாம் லட்சியம் செய்யாமல் இயக்க அபிமானிகள் உள்படயாவரும் விஜயம் செய்து ஒரு வேலைத் திட்டம் நிர்ணயிக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவரை சுயமரியாதை இயக்கம் பெரிதும் பிரசார நிலையிலேயே இருந்து வந்திருக்கிறது என்றாலும் அது தோன்றியது முதல் நாளுக்கு நாள் முற்போக்கான, கொள்கைகளையே படிப்படியாய் கைக்கொண்டு பிரசாரம் செய்து வந்திருப்பதின் மூலம் பெரிதும் தமிழ் நாட்டு மக்களின் உள்ளத்தில் ஒரு பெரிய புரட்சி உணர்ச்சியை உண்டாக்கி இருப்பதுடன் குறுகிய நோக்கமும் சுயநல பிரதானமும் கொண்டவர்கள் உள்ளத்தில் பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் உண்டாக்கி வந்திருக்கிறது.
… … …
1933 ஆம் வருசத்துக்கு என்று நாம் வகுக்கப்போகும் திட்டங்களில் பல பொது ஜனங்கள் என்பவர்களும் அரசாங்கத்தார் என்பவர்களும், குற்றங் கூறக் கூடியதாகவும், குற்றமாய் கருதக் கூடியதாகவும் இருக்கலாம். ஆனாலும் அவ்வியக்கத்தில் அத்திட்டங்களில் நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்களும், முதலாவதாக இத்திட்டங்களை வெளியிட்டால் ஜனங்கள் என்ன சொல்லுவார்கள், அரசாங்கத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதை மறந்து, இது சரியா, தப்பா, அவசியமா, அவசியமில்லையா என்பதைத்தான் யோசிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம். பொது ஜன அபிப்பிராயம் என்பதை எப்படி லட்சியம் செய்யக் கூடாது என்று சொல்லுகின்றோமே அப்படித்தான் சர்க்கார் அரசாங்கத்தார் என்ன சொல்லுவார்கள் - என்ன செய்வார்கள் என்பதையும் லட்சியம் செய்யக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம். பொது ஜனங்களோ பாமரர்கள் - மூடநம்பிக்கையில் பற்று கொண்டவர்கள் பகுத்தறிவு தடை படுத்தப்பட்டவர்கள். சர்க்கார், என்பதோ சுயநலமே உருவாய் கொண்ட முதலாளித் தன்மையும் எஜமானத் தன்மையும் கொண்டது. அதாவது இந்த இரண்டுப் பிரிவும் முதலாளி (செல்வவான்கள்) களாலும், சோம்பேரி (பார்ப்பனர்கள்) களாலும் நடத்தப் படுவனவாகும். மேற்கண்ட செல்வமும், பார்ப்பனியமும் மதம், அரசாங்கம் என்னும் சாதனங்களாலேயே காக்கப்படுவதாகும். ஆகவே ஒன்றுக் கொன்று சுலபத்தில் பிரிக்க முடியாத சம்மந்தமும் ஆதரவும் கொண்டவைகள். எனவே பொது ஜனங்களானாலும், சர்க்காரானாலும் செல்வவான்களுக்கும் சோம்பேரிகளுக்கும் விபரீதத்தை விளைவிக்கக் கூடிய எந்தக் கொள்கைகளையும் எதிர்த்தே தீருவார்கள். ஆதலால் இவ்விரண்டு வகை எதிர்ப்புக்கும் தயாராயிருந்து தான் நாம் நமது திட்டங்களை வகுக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். தீவிரமான, அவசியமான வேலைத் திட்டம் வகுக்க கருதும் தோழர்கள் இந்த இரண்டு எதிர்ப்பையும் சமாளிக்க உறுதி கொண்டு வந்தால் தான் சரியான திட்டங்களை வகுக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இப்பொழுது இரண்டுவகை திட்டங்கள் யோசனைக்கு கொண்டு வருவதற்காக சில தோழர்களால் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒன்று சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டம் என்னும் பேராலும், மற்றொன்று சுயமரியாதை கட்சி இதுவரையில் செய்து வந்தது போலவே பிரசாரத்தின் மூலமாக பல துறையிலும் சீர்திருத்தங்கள் செய்து மக்களுக்கு உலக ஒற்றுமையையும் பகுத்தறிவையும், அன்பையும் உண்டாக்குவது என்பது. இரண்டைப் பற்றியும் சுருக்கமாக விளக்க வேண்டுமானால் முன்னையது சில கொள்கைகளை வகுத்து அதை நிறைவேற்ற சட்டசபை முதலிய அரசியல் பொது ஸ்தாபனங்களைக் கைப்பற்றி அதன் மூலம் நடத்துவிப்பது என்பது, பின்னையது அரசியல் ஸ்தாபனங்களை லட்சியம் செய்யாமல் மக்களிடை பல கொள்கைகளைப் பிரசாரம் செய்து கொண்டே உலகப் புரட்சியை எதிர் நோக்கிக் கொண்டிருக்க வேண்டுமென்பது மற்றொன்று. இந்த இரண்டு வித வேலையும் தனித்தனியே நடத்தப்படலாம் என்பது. ஆகவே இந்த விஷயங்கள் எல்லாம் நன்றாய் பொறுப்புடன் ஆலோசிக்கப்படப் பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டியது அவசியமாகும்.

ஆதலால் உண்மை விடுதலையிலும், உண்மை சமத்துவத்திலும் பற்று கொண்ட சுயமரியாதைத் தோழர்கள் அவசியம் விஜயம் செய்து கூட்டத்தின் உத்தேசத்தை நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.”
(குடி அரசு - தலையங்கம் - 25.12.1932)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 33—35-37)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக