திங்கள், 3 பிப்ரவரி, 2020

4) பொதுவுடைமையின் எதிரி - பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

37.4.1 பாட்டாளிகளின் கவலையும் தொல்லையும் தொலைய வேண்டுமானால் முதலாளித்துவம் என்பது அடியோடு ஒழிந்தே தீர வேண்டும்.

37.4.2 பார்ப்பனர்களைப் போலவே சமீன்தார்கள், இனாம்தார்கள் என்பவர்கள் சமுதாயத்திற்கு வேண்டாதவர் களும், உலக மக்கள் துன்பங்களுக்குக் காரணமா யிருப்பவர்களு மாவார்கள்.

37.4.3 மனிதச் சமூக வாழ்வுக்குச் சமீன்தார் இனாம்தார் தன்மை ஒரு விச சந்துக்கு ஒப்பாவதாகும். மனிதர்கள் தரித்திரம், பசி முதலிய துன்பங்களுக்கு ஆளாகி நல் வாழ்வு இல்லாமல் அடிமை நிலையில் இருப்பதற்கு இந்தச் சமீன்தார்கள் இனாம்தார்கள் என்னும் விச சந்துக்களே காரணமாகும்.

37.4.4 பேத தர்மமாகிய மனுதர்மத்தை நிலை நிறுத்த இயற்கைக் காரணம் ஒன்றும் சொல்லாமல் மனுதர்மவாதிகள், பேதமானது கடவுளால், மதத்தால், சாத்திரங்களால் ஒவ்வொரு மனிதனும் முன் சென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களால் (தர்மங்களால்) ஏற்பட்டவை என்று பொய்யான காரணங்களைச் சொல்லிச் செயற்கை முறையில் ஏற்படுத்தி விட்டார்கள். அது போலவேதான் செல்வத்தையும், காரணம் சொல்லி உயர்வு தாழ்வு இருக்கும்படிச் செய்து விட்டார்கள்.

37.4.5 முதலாளித்துவத்தை வைத்துக் கொண்டு தொழி லாளிகளுக்கு உரிமை வழங்க வேண்டுமென்றால் ஒழுக்கம், நேர்மை, நாணயம், சட்டம், அமைதி எப்படிக் காப்பாற்ற முடியும்?

37.4.6 ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் பணக்காரர்களாக முடியாது.

37.4.7 நம்முடைய நாட்டில் அளவுக்கு மீறிய செல்வச் செருக்கு கொண்டவர்களையும் கல் நெஞ்சம் படைத்த கனத்த முதலாளிமார்களையும் ஒரு பக்கத்தில் வெகு பந்தோபஸ்தாக வைத்துக் கொண்டிருக்கிறோம். மற்றொரு பக்கத்தில் வேலை யில்லாத் திண்டாட்டக்காரர்களையும் பிச்சைக்காரர்களையும் வைத்துக் கொண்டிருக்கிறோம்.... சுய நல ஆதிக்கக்காரனுக்கும் ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிறவரையிலும் தொல்லைப்படுகிறவர்களும், தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்யும்.

37.4.8 மூட நம்பிக்கை பயனாகத்தான் மனிதன் தேவைக்கு மேற்பட்ட பொருள் போகங்களைத் தானும் அனுபவியாது பிறரையும் அனுபவிக்க விடாது வைக்கோல் போரைக் காக்கும் நாய் போல் வாழ்கிறான். இந்தத் தனி உரிமை வாழ்க்கையில் பல்லாயிரக் கணக்கான கோடிக் கணக்கான மக்களுக்குப் பயன்படக் கூடிய பல பொருள் சாதனங்கள் வீண் விரயம் செய்யப்படுகின்றன.

37.4.9 ஏற்றத் தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட முடியுமா? இருப்பவன் அதோடு திருப்தி அடையாது மேலும் மேலும் பணக்காரனாக வேண்டும் என்று கருதுகின்றான். இந்த மனப்பான்மைக்குக் காரணம் என்ன வென்றால் கஷ்டப்பட்டு உழைக்காது சுக வாழ்வு நடத்துவதும் தேவைக்கு மேற்பட்ட சொத்துக்களுக்குச் சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கவுரவம் என்றும் தனி மதிப்பிற்குரிய பாத்திரமானது என்றும் கருதுகின்ற ஒரு மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.

37.4.10 செல்வவான்கள் (செல்வர்கள்) இந்தக் காலத்தில் லட்சுமி புத்திரர்களாய் இருக்கின்றார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற் கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டுப் பலாத்காரத்தால் அவர்களிட மிருக்கும் செல்வங்களைப் பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

பொதுவுடைமை - பெரியார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக