திங்கள், 3 பிப்ரவரி, 2020

3) பொதுவுடைமையின் வழி - பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

37.3.1 வினா: எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை: ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்து விடும்.

37.3.2 சகலத் தொழிற் சாலைகளும், சகலத் தொழிற் சாலை நிர்வாகமும், தபால், தந்தி, ரயில், குளம், ஏரி, வாய்க்கால் நிர்வாகம் போல் சர்க்காருடையதாகத் தான் இருக்க வேண்டுமே ஒழியத் தனிப்பட்ட முதலாளி ஒருவன்கூட நம் நாட்டில் இருக்கக் கூடாது, எந்தத் தனிப்பட்ட மனிதனும் நமக்குக் கூலி அளப்பவனாய் இருக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி முதலாளி ஒழிப்புச் சங்கங்கள் நிறுவவேண்டியதுதான். )

37.3.3 எப்போதோ சம்பாதித்த பொருள்களையும் லாபங்களையும் வேண்டுமானால் தொலைந்து போகட்டும் என விடலாம். ஆனால் மக்கள் சமுதாயம் இன்றிருக்கிற நிலைமையில் மேலும் மேலும் தனிப்பட்ட ஆள்களிடம் பொருள் குவிவதற்கு ஏன் இடமளிக்க வேண்டும்.

37.3.4 இன்றைய உலக நிலை - அதாவது மக்களுக்கு உள்ள தொல்லைகள், துயரங்கள், மக்களை மக்கள் ஏய்த்து வஞ்சித்தல்

ஒழிந்து மக்களுக்குச் சாந்தியும் திருப்தியும் ஏற்பட வேண்டும். இதில் இராசிக்கு இடமே இல்லை . ஆனால் நம் முயற்சியில் பாமர மக்களுக்கு இம்சையும், நாச வேலையும் சிறிதும் இல்லாமல் இருக்க வேண்டும்.

37.3.5 தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் உள்ளதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடாதென்று யாராவது திட்டம் போடுகிறார்களா?

37.3.6 மனிதச் சமுதாயத்தில் பிரபு - தரித்திரன், செல்வர் - வறியர், பணக்காரன் - ஏழை என்பதாக இரு பிரிவு (சாதி) மக்கள் ஒரு நாட்டில் இருப்பார்களானால் அவர்கள் இருவரையும் சம அளவு செல்வமுள்ள (சாதியாக) ஆக்கவேண்டுமானால் பிரபு செல்வர்-பணக்காரன் என்பவர்களிடம் இருக்கும் சொத்துக் களைப் பகிர்ந்து தரித்திரர், வறியர், ஏழை என்பவர்களான பிரிவினருக்குச் (சாதியாருக்கு) சதவிகிதம் கொடுத்தால்தானே, ஏழை மக்கள் செல்வத்தில் சம நிலைமை அடைய முடியும்? செல்வ வான்களுக்குச் செல்வம் சேர்க்க, என்னென்ன வழியுண்டோ அதையும் ஏழையாக இருக்கும் மக்களுக்குக் கிடைக்கும்படிச் செய்தால்தானே சம நிலையில் இருப்பதற்குத் தகுதி செய்ததாகும்?

37.3.7 சமுதாயச் சமத்துவம், எல்லோருக்கும் சம வாய்ப்புத் தரும் ஆட்சி தேவை என்கிறோம். இதற்குப் பணக்காரத்துவம் ஒழிய வேண்டு மென்கிறோம்; இது மிகவும் சரி; மகிழ்ச்சியானதே. அத்துடன் முதலாளித்துவம் என்றும் நிலைத்திருக்கப் பாது காப்பான எதையும் ஒழிக்க வேண்டியது அவசியம்; நகத்தில் அழுக்குப்படாமல் சோம்பேறி வாழ்க்கை நடத்திவரும் பார்ப்பனீயத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும்.

37.3.8 உண்மையான சமதர்ம வாதிகள் தன்னைத் தன் அறிவைத் தன் நெற்றியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களது சமதர்மம் பிழைக்கும்.

37.3.9 சமத்துவ எண்ணம் மக்களுக்குத் தோன்றாமல் இருக்கும் வரையில் உயர் நிலையில் உள்ள உயர் வாழ்வுக் காரர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். கீழ் நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றிவிட்டால் அந்த உயர் வாழ்வுக்கு முடிவுதான். எந்த விதத் தந்திரத்தினாலும் அதை நிலைக்கச் செய்ய முடியாது.

37.3.10 பேத அமைப்பு உள்ள சாத்திர சம்பிரதாய முறைகளையும் தாபனங்களையும், அரசாங்கங்களையும் மாற்ற, ஒழிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இந்தத் துணிவு கொள்ளாத எவரும் சமதர்ம முயற்சிக்கு அருகதை அற்றவர்களே ஆவார்கள்.

37.3.11 சமதர்மத் தத்துவமும் பொது வுடைமைக் கொள்கையும் ஓங்கச் செய்வது நமது லட்சியமெனில், தலைவிதி, கடவுள் செயல் போன்ற உணர்வுகளை மக்கள் மனத்திலிருந்து ஒழிப்பதுடன் மத சாதி சம்பந்தமான பிரிவுகளையும் பழக்க வழக்கங்களையும் இவற்றுக்கு ஆதாரமான புராண இதிகாசங் களையும் ஒழிக்க வேண்டும்.

37.3.12 இந்த நாட்டில் நம் மக்களுக்கு ஒரு அங்கணம் வீடு கூட நரிக்குறவன் குடிசை மாதிரி கூட இல்லாதபோது ஒருவனுக்கு 5 வீடு, 10 வீடு என்று இப்படி ஏன் இருக்க வேண்டும்?

37.3.13 உண்மையான சமதர்ம வாதிகள் சமதர்மத்தில் நம்பிக்கையும் அக்கறையும் கொண்டவர்கள் இருப்பார்களே யானால், அவர்கள் சமதர்மம் என்கிறதை மாற்றிக் கொண்டு, பொது உடைமைத் தத்துவத்தை இலட்சிய மாக்கிக் கொண்டு முயற்சித்தால் பலன் ஏற்படலாம் என்று கருதுகிறேன். பொது உடைமை என்பது பகுத்தறிவின் எல்லையாகும்.

37.3.14 கடவுள் இல்லாத இடத்தில்தான் சமதர்மம் மலரும்.

37.3.15 தனி உடைமை உரிமையை வைத்துக் கொண்டு பொருளாதாரச் சமத்துவம் அல்லது பொது உடைமைத் தத்துவம் வேண்டுமென்றால் ஒழுக்கம், நாணயம், நேர்மை, சட்டம் ஆகியவைகளைப் பலி கொடுத்துப் பலாத்காரம், தூர் ஆக்கிரகம், கொலை, கொள்ளை ஆகிய நடவடிக்கைகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

37.3.16 பொருளாதாரச் சமத்துவம் வேண்டு மென்பது எனது கொள்கையாய் இருந்தாலும் அது மக்களே மக்களிடமுள்ள பொருளைக் கவரும்படிச் செய்வது பொருளாதாரப் பேதத்தை விடக் கேடான காரியமாகும். ஆதலால் சட்டம் செய்து, சர்க்காரே பங்கிட்டுக் கொடுக்கும்படிச் செய்ய வேண்டும். அப்படிக் கில்லாமல் பலாத்காரம், சட்டம், சமாதானபங்கத்தால் மக்களையே செய்துகொள்ளச் செய்வது என்பது அரசாங்கமே பலாத்காரத்திற்கும் சட்டம் சமாதானப் பங்கத்திற்கும் காரணமாக இருக்கிறது என்றுதான் பொருள் ஏற்படும்.

37.3.17 பூமி பூராவும் ஏராளமாக ஒரு மனிதன் வசம் தேக்கப்பட்டிருக்கக் கூடாது. அனைவருக்கும் அவரவர்கள் அளவுக்குப் பிரித்துக் கொடுக்கும் காலம் வரும். அந்தப்படியான காலத்தை விரைவில் ஏற்படுத்த நம்மால் முடியாவிட்டாலும் நாம் வழி காட்டிகளா யிருக்க வேண்டும்.

37.3.18 கவலை - பேதமற்ற நிலை ஏற்பட வேண்டுமானால், யாவரும் ஒரு நிலையில் இருக்கத் தக்க சமதர்ம நிலை ஏற்பட்டால்தான் முடியும். இந்தச் சமதர்ம நிலை உருவாவதற்கு முதலில் இந்தச் சொத்துரிமையை ஒழித்தாக வேண்டும். உடைமைகள் எல்லாம் பொதுவாக ஆக்கப்பட வேண்டும்.

பொதுவுடைமை - பெரியார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக