வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 18:-


புரட்சி என்றால் என்ன? ஏன் பயப்பட வேண்டும்?

(புரட்சி என்பதற்கு அடியோடு தலைகீழ் மாற்றமடைவது என்று பெரியார் கூறுகிறார். ஆனால் புரட்சிக்கான நிலைமையான புற அக நிலைமைகளைப் பற்றிப் பேசாது, மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும். ஏற்பட ஏற்படப் புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற ஏற்படும் மாறுதல்களால் புரட்சி ஏற்படுவதாகக் கூறுகிறார். முற்போக்கு, அறிவு, புதிய உணர்ச்சிகள் ஆகிவையே புரட்சி தோன்றுவதற்குப் போதுமானதாக அவருக்குப்படுகிறது. புறநிலை மாற்றத்தின் தொடர்ச்சியாகவே அகநிலையில் அதாவது உணர்ச்சியில், அறிவில், கருத்தில் மாற்றம் ஏற்படுகிறது. பகுத்தறிவுவாதியான பெரியாரிடம் சமூகம் பற்றிய இத்தகைய பொருள்முதல்வாதப் பார்வை எதிர் பார்க்க முடியாது என்பது தெரிந்ததே. இருந்தாலும் அரசன், ஜாதி, கடவுள், மதம் பழக்க வழக்கம் ஆகியவையெல்லாம் பணக்காரனையும், பார்ப்பானையும், காப்பாற்ற ஏற்பாடு என்று பொருள்முதல்வாதப் பார்வைக்கு நெருக்கமாக வருகிறார். அதாவது பொருள் உற்பத்தியில் ஏற்படும் மாறதலுக்கு ஏற்ப கருதுதுநிலைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்கிற பொருள்முதல்வாதப் பார்வைக்கு நெருங்குகிறார். ஆனால் இதிலும் பார்ப்பானை (பார்பனியத்தை) பணக்காரனுடன் சேர்த்துக்கூறியுள்ளார். கடவுள், மதம் ஆகியவற்றின் இடத்தில் தான் பார்ப்பனர்களின் கருத்துநிலைகளை வைக்க வேண்டும்.

சிறுபான்மையினரான பணக்காரர்களின் சுயநலத்தால் பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்பகிறார்கள் என்று சொல்லும் பெரியார், “இதற்காக எவ்விதப் பலாத்காரமும் செய்துதான் ஆகவேண்டும் என்பது நமது கருத்தல்ல” என்று முடிக்கிறார். தொடர்ந்து கொடுக்கும் எச்சரிக்கை உணர்வையும் தாண்டி பெரியாரிடம் பலத்தார மறுப்பு மேலோங்கியே இருக்கிறது. பகுத்தறிவுவாதத்தைக் கடந்து பொருள்முதல்வாதத்திற்கு வரும்போதுதான் இந்தப் பலப்பிரயோக கோட்பாடு பற்றிய புரிதல் முழுமை அடையும். பார்ப்பனர்களின் பார்ப்பனியக் கோட்பாட்டை அடித்தளமாகக் கொள்ளாமல் பணக்காரர்களின் நலனை பிரதிபலிக்கும் மேற்கட்டமைப்பாகப் பார்க்கும் போதுதான் வர்க்கப் போராட்டத்தின் ஊடே தான் வர்ணப் போராட்டத்தை நடத்த முடியும் என்ற பொருள்முதல்வாதப் பார்வைபிடிபடும்..)

தந்தை பெரியார்:-
“மனித சமூகத்தில் புரட்சி என்பது மிகச் சாதாரணமாய் இருந்து காரியத்தில் நடைபெற்று தான் வருகின்றது. மனிதனுக்கு முற்போக்கு அறிவும், அக்கறையும். ஏற்பட ஏற்பட புதிய புதிய உணர்ச்சிகள் தோன்றத் தோன்ற மாறுதல்கள் என்கின்ற புரட்சிகள் உண்டாக்கிக் கொண்டேதான் இருக்கும்.
புரட்சிகள் என்றால் என்ன? ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலைகீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப்படுவதாகும். அந்தப்படி இப்போது நம் கண்முன்னாலேயே எவ்வளவோ புரட்சிகளைக் காதால் கேட்டு விட்டோம் கண்ணால் பார்த்து விட்டோம். ஒவ்வொரு புரட்சியிலும் எந்தெந்த தேசம் பூமிக்குள் போய் விட்டது? எந்த சமூகம் பூண்டற்றுப் போய் விட்டது? மாறுதலேற் படும்போது சற்று தடபுடலாய் மக்கள் மிரளுவதும் சிறிது நாளானவுடன் அது இயற்கையாய் ஆகிவிடுவதும், பிறகு அதிலிருந்து மற்றொரு புரட்சி ஆரம்பிப்பதும் சகஜந்தானே.
… … …
அரசன் ஏன்? உயர்ந்த ஜாதி ஏன்? தாழ்ந்த ஜாதி ஏன்? கடவுள் ஏன்? மதம் ஏன்? என்று சொல்லுவது போலவே இப்போது பணக்காரன் ஏன்? பிரபு ஏன்? முதலாளி ஏன்? ஏழை ஏன்? அடிமை ஏன்? என்று கேள்க்கிறோம். இந்தப்படி ஏன் கேட்கின்றோம்? முதன் முதலில் ஏதோ ஒரு விஷயத்தில் மாறுதலையடைய துணிந்து விட்டோம். அதற்கு ஏற்பட்டிருந்த கட்டுப்பாடு காவல் ஆகியவைகளை அலட்சியம் செய்து விட்டோம். அதே தைரியமும், அதே அறிவும், அதே அவசியமும், அதே முற்போக்கு உணர்ச்சியும் அதற்கு அடுத்த நிலைமைக்கு மக்களைத் தானாகவே கொண்டு போகின்றது.
… … …
அரசன், ஜாதி, கடவுள், மதம் பழக்க வழக்கம் ஆகியவையெல்லாம் பணக்காரனையும், பார்ப்பானையும், காப்பாற்ற ஏற்பாடு செய்து கற்பித்து வைத்த சாதனங்களே யொழிய இவர்கள் இயற்கையா? காற்றைப் போல் இன்றியமையாததா? எப்பொழுது அவைகளுக்கே ஆபத்து வந்து விட்டதோ அப்பொழுதே பணக்காரர்கள் நிலை காவலில்லா சொத்து காணாமல் போவது போல், மறைவு பட வேண்டியதுதானே? இதனால் யாருக்கு என்ன நஷ்டம்? உண்மையான நடு நிலைமையும் அறிவும் இருக்கிறவன் இதை எப்படி குற்றம் என்று சொல்ல முடியும்? இது சாதாரணமாய் அறிவும் முற்போக்கு உணர்ச்சியும் உள்ள எவனுக்கும் தோன்றக் கூடிய காரியம் தானே.
… … …
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய் காணப்படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர அரசனுக்குப் பதிலாக பார்ப்பானை ஏற்றி வைப்பதும் பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுய மரியாதையாகாது; இவையெல்லாம் சுய நலமரியாதையேயாகும்.
அன்றியும் அரசன் வேண்டாம் என்றாலும், பார்ப்பான் வேண்டாம் என்றாலும், பணக்காரன் வேண்டாம் என்றாலும் இதனால் கஷ்டப்படும் மக்கள் 100க்கு 10 பேர்கள் கூட இருக்க மாட்டார்கள். இவை ஒழிந்தால் சுகப்படும் மக்கள் 100க்கு 90 பேர்களுக்கு மேல் இருப்பார்கள். ஆகவே யாருடைய நன்மைக்கு ஏற்ற காரியம் செய்யப்பட வேண்டியது அறிவாளி யின் கடமை என்பதை சிந்தித்துப்பாருங்கள். உண்மையான ஜீவ காருண்யம் உள்ளவர்கள் வெறும் கோழியைத் தலை கீழாக கொண்டு போகப் படுவதையும், மாட்டின் கழுத்தில் ஒரு சிறு புண் இருப்பதையும் ஜீவ காருண்யம் என்று எண்ண மாட்டார்கள். பெரும்பான்மையான மக்கள் வெகு சிறுபான்மை யோரின் சுயநலத்தால் எவ்வளவு கஷ்டப் படுகின்றார்கள் என்பதைத் தான் கவனிப்பார்கள்.
… … …
இதற்காக எவ்வித பலாத்காரமும் செய்து தான் ஆக வேண்டும் என்பது நமது கருத்தல்ல ஆனால் பலாத்காரத்துக்கு பலவந்தமாய் வருபவர்களிடமிருந்து எப்படி  மீள வேண்டுமோ அதற்கு தயாராய்த்தான் இருக்க வேண்டும். இதற்காக எந்தப் பணக்காரரும் கஷ்டப்பட வேண்டியிருக்காது: யாரும் பட்டினிகிடக்க நேராது. நல்லுணர்வு ஏற்பட்டு விட்டால் இது ஒரு நொடியில் முடியக் கூடிய காரியமேயாகும்.

உலகில் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால் பணக்காரர்களும் முதலாளிகளும் மாத்திரம் சுகப்படுகிறார்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்று சொல்லி விட முடியுமா? ஒவ்வொரு கருத்துள்ள பணக்காரனுக்கும் இருக்கின்ற கவலை உங்களுக்குத் தெரியாததா? அவன் அதை சம்பாதிக்கும் வழியில் கஷ்டப்படுவதை விட கவலைப்படுவதை விட அதிகமாகவே அதை காப்பாற்றுவதிலும் கவலைப் படுகிறான், லாப நஷ்டம் வரும் காலையிலும் அதிக லாபம் வர வில்லையே என்றும் நஷ்டம் வந்து விட்டதே என்றும் தான் கஷ்டப்படுகிறான்.

எவ்வளவு இருந்த போதிலும் இன்னும் பொருள் சேர வேண்டுமென்றே ஆசைப்படுகிறான். கவலையும் பொறாமையும் அவனுக்குச் சமமாகத்தான் இருந்து வருகின்றது. எவ்வளவோ கஷ்டங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டும் பெருங் கவலைக்கு ஆளாய்க் கொண்டும் தான் தன்னைப் பணக்காரன் என்று பிறர் மதிக்க வேண்டுமென்று கருதுகிறான். இதனால் உண்மையில் லாபம் ஒன்று மில்லை. ஆனால் உலகத்தில் உள்ள பழக்கம் வழக்கம் பெருமையின் முறை ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டே பணக்காரனாக ஆசைப்படுகிறான். ஆகவே பணக்காரத்தன்மை என்பது போய் விடுவதால் மனித சமூகத்துக்கு ஒரு கஷ்டமும் வந்து விடாது: பணக் காரத்தன்மை போய் விட்டால் எல்லா மக்களின் நன்மையைப் பொருத்த காரியங்களையெல்லாம் கவனிக்க வேண்டிய சமதர்மக் கொள்கை கொண்ட ஆட்சிதான் நடைபெறும்.

மனித சமூகத்தின் கஷ்ட நிலைமைக்கும், இழி தன்மைக்கும், ஓய்வற்ற தன்மைக்கும், சதா கவலைக்கும் காரணமாயிருப்பதே இந்த பணக்காரத் தன்மையும் ஏழ்மைத்தன்மையுமேயாகும்.
… … …
செல்வவான் (சோம்பேறியாயிருந்து வாழ உரிமையுடையவன்) என்கின்ற ஒரு நிலைமை உலகில் இல்லையானால் கடவுளுக்கும் மதத்திற்கும் ஜாதிக்கும் அரசனுக்கும் உலகில் இடம் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.”
(குடி அரசு - சொற்பொழிவு - 18.12.1932)
(தந்தை பெரியாரின் பொதுவுமைமைச் சிந்தனைகள் I I – பக் 21-22—24-27--29)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக