(இன்றைய சமூக, பொருளாதார கொடுமைக்கு மதத்தைக் குறை கூறுகிறார்
பெரியார். மதச் சிந்தனையை நீக்கிவிட்டால் அடுத்து மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறார்.
அந்த மாற்றத்தை “காலப்போக்கில்” காண்கிறார்.
இன்றைய பொருளாதார சுரண்டலுக்கு வடிவமான மதத்தை எதிர்ப்பதற்கு இந்தளவுக்கு போராடும்
பெரியார், பொருளாதார மாற்றம் தானே வரும் அல்லது காலப் போக்கில் வரும் என்கிறார். அந்த
மாற்றத்திற்கான போராட்டத்தில் பணம்படைத்த முதலாளிகளின் எதிப்பை எவ்வாறு எதிர் கொள்வது
என்பது பற்றி பெரியார் பேசுவதில்லை. கண்டிப்பாக மத எதிர்ப்பைவிட அது மிகவும் கடினமாக
இருக்கும். அந்த வர்க்கப் போராட்டத்திற்கு பெரியாரின் சமதர்ம சிந்தனை போதாது, மார்க்சின்
கம்யுனிசத்திற்கு வந்தேயாகவேண்டும்)
(குடி அரசு - 07.09.1930)
“காலம் போகப்போக நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்கு
பூமி இருக்க வேண்டியதில்லை என்றும் அப்படியிருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பது
போல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய இப்போது இருப்பது போல உழுகின்றவன் தன் வயிற்றுக்கு
மாத்திரம் எடுத்துக் கொண்டு ஏன் சில சமயங்களில் அதற்கும் போராமலும் இருக்க பூமிக்குடையவனுக்கு
பெரும்பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அது போலவே இன்று கோவில்
கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால் பிற்காலத்தில் கோவிலை இடித்து விக்கிரகங்களை
உடைத்து பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம்.
இதுபோலவே அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளைக்கு அதர்மமாகி தலைகீழாகி மாறக் கூடும்
அப்பேர்ப்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமை எல்லாம் கடவுள் கட்டளை என்றால் அதை மாற்ற
முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க ஏன் கடவுளையே மறுக்க துணிந்தாக வேண்டும். கடவுளை
மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல்
கடவுளுக்கும் மோகத்திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது
என்பதுறுதி.
ஏனெனில் அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவைகளில்
உள்ள இன்றைய கொடுமையான நிலையும் முட்டாள் தனமான நிலையும் அயோக்கியத்தனமான நிலையும்
எல்லாம் கடவுள் கட்டளையாலும் மோட்ச காரணங்களாலும் சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவைகளாகும்.
ஆகையால் தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச்
சிந்தனைகள் I- பக்- பக்- 75-76)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக