தலைவரவர்களே! தோழர்களே!! இன்று இங்கு கூடியுள்ள
இப்பெரிய கூட்டத்தில் பேச எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது பற்றி நான் உண்மையிலேயே மகிழ்ச்சி
கொள்ளுகிறேன். அதிலும் எனது பழய தோழர் மாஜி மந்திரி கனம் கலிபுல்லா சாய்பு அவர்கள்
தலைமையில் பேசுவதைப் பற்றி மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். முஸ்லீம் லீக்கு சம்பந்தமாய்
முஸ்லிம் சமூகத்தினரால் கட்டப்பட்ட இக்கூட்டத்தில் என்ன பேசுவேன் என்று குறிப்பிடாத
நிலையில் என்ன பேசுவது என்று யோசித்ததில் தலைவர் அவர்கள் பேசியதை ஒட்டியும் இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியும் பேசுவது
பொருத்தமுடையதாக இருக்கலாம் என்கின்ற முடிவுக்கு வந்து அதைப்பற்றியே பேச தலைவர் அனுமதியளிப்பார்
என்று கருதுகிறேன்.
இந்து முஸ்லிம் ஒற்றுமை
இந்தியாவைப் போலுள்ள ஒரு நாட்டுக்கு இன்று முக்கியமாய்
வேண்டியது இந்து முஸ்லிம் ஒற்றுமையேயாகும். அது மாத்திரமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்
வேறு ஜாதி வகுப்பாரின் ஒற்றுமையுமாகும். இந்தக் காரியங்களை செய்யாமல் அரசியல், பொருளாதாரம்
முதலிய பெரிய விஷயங்களைப் பற்றி பேசுவதோ செய்ய முயற்சிப்பதோ மானங்கெட்டதும் முட்டாள்
தனமானதும் அல்லாவிட்டால் பித்தலாட்டம் சூழ்ச்சிகரமான சுயநலமானதுமாகும் என்பது எனது
அபிப்பிராயம்.
எல்லாவற்றையும் விட இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல்
இந்நாடு ஒரு விரற்கிடை அளவாவது முன்னேற்ற மடையாது. இந்து முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல்
இந்நாட்டு மக்களுக்கு ஒரு கடுகளவு சுதந்தரம் கூட ஏற்பட்டு விடாது. இந்து - முஸ்லிம் ஒற்றுமை இல்லாமல் இந்நாட்டு
மக்களுக்கு வினாடி நேர சாந்தியும் ஏற்பட்டுவிடாது.
ஒரு காலத்தில் காந்தியார் நடித்தது
இதை நான் மாத்திரம் சொல்லவில்லை. தோழர் காந்தியார்
அவர்களே உண்மையான மனிதராய் நடத்த காலத்தில் சொன்ன விஷயமாகும் - அதற்கு ஆக என்றே 21
நாள் பட்டனி விரதமிருந்த காரியமும் ஆகும். “இந்து முஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுயராஜ்யம்
பெறுவது என்பது பித்தலாட்டமான காரியம்'' என்று சொன்னதுமாகும். சென்னையில் ஒரு சமயத்தில்
தோழர் காந்தியார் பேசும் போது தோழர் கdம் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் கேட்ட கேள்விக்கு
“இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்பட்டாலொழிய சுயராஜ்யம் என்கிற வார்த்தையை உச்சரிக்கக்கூட
மாட்டேன்" என்று சொன்னார். அதோடு மாத்திரமல்லாமல் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படுவதற்கு
முன் சுயராஜ்யம் கிடைப்பதாயிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்றும் சொன்ளார்.
பிரபலம்தர்கள் ஆதரவு
இதை உண்மையென்று நம்பியே மௌலானாக்கள் ஆகிய அலி சகோதரர்களும்
அக்கீம் அஜ்மல்கான் ஆசாத் சோபானி முதலியவர்களும் அப்துல் பாரி முதலிய மத தலைவர்களும்
காந்தியாரை மதித்து அவரைப் பின்பற்றி வந்தார்கள். இந்த சமயத்தில் தென்னாட்டிலும் வடநாட்டிலும்
பல இந்து மத உணர்ச்சித் தலைவர்களும், பார்ப்பனத் தலைவர்களும் காந்தியார் மீது அதிர்ப்தி
அடைந்ததோடு முஸ்லீம்களுக்கு இவ்வளவு இடம் கொடுக்கலாமா? - என்றும் கேட்டார்கள். இப்படிக்
கருதியவர்களையும் கேட்டவர்களையும் தோழர் காந்தியார் முட்டாள்கள் என்றும் சுயநலக்காரர்கள்
என்றும் யோக்கியர்கள் அல்லாதவர்கள் என்றும் கூடக் கூறினார்.
காந்தியார் கிலாபத்து வேஷம்
மற்றும் கிலாபத்து விஷயத்தைக் காந்தியார் அவ்வளவு
பிரமாதமாகப் பேசி அதில் இந்திய காங்கிரசையும் இந்திய அரசியலையும் புகுத்திக் கிளர்ச்சி
செய்த வேஷமும் இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கருதியேயாகும். அதனாலேயே காந்தியாரின் நிர்மாணத்திட்டத்தின்
முதல் அம்சமாக இந்து முஸ்லீம் ஒற்றுமைத்திட்டம் இருந்து வந்தது. ஆகவே இந்து முஸ்லிம்
ஒற்றுமையைப்பற்றி நான் பேசுவதும் அதை வற்புறுத்துவதும் என் சொந்த அபிப்பிராயமல்ல என்றும்
காந்தியார், பெசண்டம்மையார் ஆகியவர்கள் காலத்திலிருந்தே ஏற்பட்டதாகும் என்றும் சொல்லுகிறேன்.
40, 50 வருஷமாய் பாடுபடுகிறேன்
தவிர என்னைப் பொறுத்தவரை இந்து முஸ்லீம் ஒற்றுமை
என்பது இன்று நேற்று பேசிவரும் பேச்சல்ல. எனக்கு விபரம் தெரிந்த 40, 50 வருட காலமாகவே
இந்த பாரில் நான் முஸ்லிம்களோடு குடும்பத் தோழனாகவே இருந்து வந்திருக்கிறேன். விளையாட்டுப்
பிள்ளையாக இருந்த காலத்திலும் மைனராக இருந்த காலத்திலும் வியாபாரியாக இருந்த காலத்திலும்
கவுரவ வாழ்க்கை பொதுநல சேவகத்தில் இருந்த காலத்திலும் பொதுவாக இவ்வூரில் முஸ்லீம்களுக்கு
நாள் ஒரு உண்மையான நண்பனாகவே இருந்து வந்திருக்கிறேன். இதை நான் வேறு ஊர்களில் போய்
சொல்லவில்லை. இங்கேயே உள்ளூர்காரர்களாகிய உங்களிடத்தில் சொல்லுகிறேன். ஏனெனில் நீங்கள்
விஷயங்களை நேராக அறிந்தவர்கள் ஆவீர்கள். ஆதலால் இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றிப்
பேசுவது முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்ததாகவோ முஸ்லிம்களுக்கு இந்துக்களைக் காட்டிக்
கொடுத்ததாகவோ ஆகிவிடாது. அப்படி யாராவது கருதுவார்களானால் அவர்களுக்கு ஒரு வார்த்தை
சொல்ல விரும்புகிறேன். அது சற்று ஒரு கூட்டத்தாருக்கும் விஷயம் அறியாதவர்களுக்கும்
முறையே எரிச்சலாகவும் அதிருப்தியாகவும் இருக்கலாம். ஆனாலும் நான் விளக்கித் தீர வேண்டயவனாக
இருக்கிறேன். ஏனெனில் இதற்கு ஆகவே இந்து முஸ்லிம் ஒற்றுமையைப் பற்றிப் பேசுவதற்கு ஆகவே
என்னைப்பற்றி சிலர் விஷமப் பிரசாரம் செய்கிறார்கள். அதற்கு நாள் சமாதானம் சொல்லியாக
வேண்டும். என்னை நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
சேலத்தில் விஷமப் பிரசாரம்
சென்ற வாரத்தில் சேலத்தில் சில காங்கிரஸ்காரர்கள்
நான் இந்துக்கள் மீது முஸ்லிம்களை தூண்டி விட்டதாக துண்டுப் பிரசுரம் போட்டு வினியோகித்து
இருக்கிறார்கள். முஸ்லிம்களுடைய கோரியின் சுவரை ராத்திரியில் போய் இடித்து இருக்கிறார்கள்.
இது இப்படியே வளர்ந்தால் அப்புறம் என்ன ஆகும்? ராணுவ ஆட்சிதாளே ஏற்படும். குட்டி நாய்கள்
குலைந்து தாய்களுக்கு ஆபத்து வருவதா?
இந்து முஸ்லீம் என்றால் என்ன?
இந்த நாட்டு இந்து முஸ்லிம்கள் என்றால் இவர்கள்
யார்? இதே நாட்டில் பிறந்து வளர்ந்து வந்தவர்கள் அல்லவா? இந்த நாட்டுக்கு ஆரியர்களும்,
ஆரிய மதமும் வருவதற்கு முன் இன்று இந்துக்களாகவும், முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும்
இருக்கிறவர்கள் பூர்வீக இந்தியர்கள் அல்லவா? என்று கேட்கின்றேன். இங்கிருக்கும் முஸ்லிம்களை
எடுத்துக் கொள்ளுங்கள். தலைவர் உள்பட கனம் பேக்தாவுத் சாய்பு உள்பட இவர்கள் எல்லோரும்
ஆப்கானிஸ்தானம் அரேபியா ஆகிய இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா? அல்லது
அவர்களது பெற்றோர்களாவது வெளிநாட்டிலிருந்து வந்த சந்ததிகளா?
ஆரியர் வந்த பிறகே முஸ்லிமானார்கள்
ஆரியர்கள் இந்த நாட்டுக்கு வந்து அவர்களுடைய மதத்தை
நமக்குள் புகுத்தி நம்மை அவர்களது அடிமைகளாகவும் நமது பெண்களை அவர்களது போக மாதர்களாகவும்
ஆக்க சூழ்ச்சி செய்த காலத்தில் அதை சகிக்க மாட்டாமல் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள
ஆரிய மதத்தை ஏற்க மறுத்து இஸ்லாம் ஆனவர்களாவார்கள். கிறிஸ்தவர்களும் அப்படியேதான்.
நாமோ நமது சுயமரியாதையில் லக்ஷ்யமில்லாமல் மானம் கெட்டு இன்றும் ஆரிய மதத்தினராய் இருந்து
கொண்டு இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு நம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆளுகிறவர்களை
சாமி என்று கூப்பிட்டுக் கொண்டு மிருகத்திலும் கேடாய் வாழ்ந்து வருகிறோம். இதுதான்
இந்து முஸ்லிம் என்பது.
இந்து முஸ்லீம் ரத்த சம்பந்தம்
மற்றும் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ரத்த
சம்மந்தமுண்டு என்று நான் சொல்வதை நீங்கள் சிறிது நன்றாய் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
விவசாரித்தனத்தால் ரத்த சம்மந்தம் என்று நாள் சொல்லவரவில்லை. முஸ்லிம்கள் நம்மில் இருந்து
போனவர்களே. நம்முடையவும் அவர்களுடையவும் மூதாதைகள் இந்தியர்களே ஆவார்கள்.
ஆனால்
ஆரியர்கள் அப்படி அல்ல, வெள்ளைக்காரர்களைப் போலவே வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு
வந்தவர்கள். மேலும் அவர்கள் தங்கள் ஆதிக்கக் கொள்கைகளையே மதம் என்று ஆக்கி தங்களையும்
தங்கள் மூதாதைகளையும் கடவுள்கள் என்று ஆக்கி அவற்றை நம்மீது சுமத்தி நம்மை அடிமை கொண்டவர்களாவார்கள்.
அதனால்தான் அவர்களை பெரிய ஜாதியார் என்றும், நம்மை கீழ் ஜாதியார் என்றும் கருதப்பட்டு
வருகிறது. மற்றபடி நமக்கும் அவர்களுக்கும் ஏதாவது ரத்த சம்பந்தம் உண்டு என்று சொல்லுவதானால்
அது விவசாரக் தனத்தாலும் ஒட்டி செடி முறையாலுமே இருக்கலாம். அதுவும் சில மேல் ஜாதியார்
என்கின்றவர்களுக்குள்தான் இருக்க முடியும். மற்றபடி நமக்கும் (இந்நாட்டு பழங்குடி மக்களுக்கும்)
ஆரியர்களுக்கும் ரத்த சம்பந்தமோ நாட்டு சம்பந்தமோ மூதாதை சம்பந்தமோ ஒன்றும் இருக்க
இடமில்லை.
ஆரியரும் நாமும் சகோதரர்களா?
ஆனால் இன்று சிலர் ஆரியர்களும் நாமும் சகோதரர்கள்
என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள். ஆரியர் வாழ்வுக்கும் நம்மை அடிமைகளாக்கத் தரகர்களாயும்
கூலிகளாயும் இருக்கிறார்கள். இவர்களை நாம் ஒரு வகுப்பாரை ஆங்கிலோ இந்தியர்கள் என்று
சொல்லுவது போல் ஆரியோ - இந்தியர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி ஆரியர்கள் நமக்கு
முஸ்லிம்களைவிட அதிக நெருக்கமோ சொந்தமோ நாட்டு உரிமையோ உடையவர்கள் அல்ல.
இதை என் சொல்லுகிறேன்
இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் என்ளை வைவதற்கும்
என்மீது பாமர மக்களுக்கு வெறுப்பும் துவேஷமும் ஏற்படுத்துவதற்கும் நான் முஸ்லிம்களின்
கூலியாய்ப் பிரசாரம் செய்கிறேன் என்று சொல்லுவதற்கு சமாதானமாக சொல்லுகிறேனே ஒழிய வேறில்லை.
நம் கடமை
மற்றும் நான் ஒன்று சொல்லுகிறேன். அதாவது இந்தியாவில்
இருந்து நாம் இன்று அல்ல, இன்னமும் ஆயிரக்கணக்கான வருடங்கள் பொறுத்து ஆனாலும் முஸ்லிம்களையோ,
ஆரியர்களையோ விரட்டிவிட முடியாது. முஸ்லிம்கள் மொத்த தொகையில் 100-க்கு 25 வீதமும்
உலகில் இல்லாத ஒற்றுமையையும் கட்டுப்பாடும் கொண்டவர்களாவார்கள். ஆரியர்கள் ஜனத்தொகையில்
100-க்கு 3 வீதம் என்றாலும் அவர்களும் உலகில் வேறு எந்த சமூகத்தினிடமும் இல்லாத சூழ்ச்சியும்
தந்திரமும் கட்டுப்பாடும் கொண்டவர்கள் ஆவார்கள். இவர்களை அடக்கி ஆளவோ இந்தியாவை விட்டு
விரட்டி விடவோ முடியாது. ஆதலால் நமது கடமை என்னவென்றால் இந்தியாவில் உள்ள எல்லா மதமும்
எல்லா சமூகமும் ஒன்றுபட நாம் பாடுபடவேண்டும். மதத்தில் ஜாதியில் சமூகத்தில் மக்களை
மக்கள் இழிவாய் வேற்றுமையாய் கருதப்படுவது ஒழிய வேண்டும். நமக்கு எவ்வளவு சுயராஜ்யம்
என்பது வந்து விட்டாலும், மதத்தால், ஜாதியால், வகுப்பால் மக்களை இழிவாய் கருதுவதும்
நடந்துவதும் ஒழியாவிட்டால் நமக்கு சாந்தியோ, விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது என்பது
எனது பலமான அபிப்பிராயம். அதனாலேயே நான் இதை சொல்லுகிறேன்.
காப்பிக்கடை தேசபக்தி
நம்ம ஊர் காப்பிக்கடைக் காரர்களும் வக்கீல்களும்
தான் இன்று பெரிய தேசிய வீரர்களாகவும் சுயராஜ்ய பிரயத்தனக்காரர்களாகவும் இருக்கிறதைப்
பார்க்கிறோம். காப்பிக்கடைகளில்தான் காங்கரஸ் கொடிகள் பறந்த வண்ணமாய் இருக்கின்றன.
வக்கீல்கள்தான் மேடையில் பேசிய வண்ணமாயிருக்கிறார்கள். இவர்கள் மற்ற மக்களை எப்படி
மதிக்கிறார்கள்? இவர்களிடத்தில் வகுப்பு உணர்ச்சி இல்லையா? என்று யோசித்துப் பாருங்கள்.
காங்கரஸ் கொடிக்குக்கீழ் தொங்கும் போர்டுகள் ஒவ்வொன்றிலும்
பிராமணாள் ஓட்டல் - பிராமணாள் காபி கிளப்பு என்று பரங்கிக்காய் பிரமாணத்தில் எழுத்துக்கள்
எழுதி தொங்கவிட்டு இருக்கிறார்கள். உள்ளே போய் பார்த்தாலும் பிராமணாள் சாப்பிடும் இடம்
- பிராமணரல்லாதவர்கள் சாப்பிடுமிடம் என்று எழுதி இடம் பிரித்து இருக்கிறார்கள். சில
இடங்களில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடமே இல்லை. தாழ்த்தப்பட்ட மக்கள்
விஷயம் கூட அங்கு பேச முடியாது. வக்கீல்கள் ஓட்டல்காரர்களுக்கு அண்ணன்மாராய் இருக்கிறார்கள்.
அவர்களது ஒழுக்கமும் நாணையமும் நடத்தையும் நாள் உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமா?
ஓட்டல் மாத்திரம் தானா? "சாமிகள்" என்பவை இருக்கும் கோவில்கள் என்பவைகளிலும்
மடங்களிலும் சத்திரம் சாவடிகளிலும் சில இடங்களில் ரோட்டுக்கள், கிணறுகள் ஆகியவைகளிலும்
இடம் வேறு வேறு. சிலருக்கு அடியோடு இடமே இல்லை. இந்தநிலையில் இந்த யோக்கியர்கள்தான்
நமக்கு அதாவது இந்து முஸ்லிம் தீண்டாதார் என்பவர்களுக்குச் சுதந்திரம் சுயராஜ்யம் சம்பாதித்துக்
கொடுப்பவர்களாம். இவர்களுக்குப் பின் கொடி தூக்கிக் கொண்டு “கோவிந்தா” போடாவிட்டால்
நானும் நீங்களும் தேசத் துரோகியாம். இதற்கு யார் பயப்படக்கூடும் என்று கேட்கிறேன்.
(குறிப்பு:
ஈரோடு முஸ்லிம் வீக்கு பொதுக் கூட்டத்தில் 02.01.1938 ஜனாப் கான்பகதூர் கலிபுல்லா சாய்பு
எம்.ஏ.பி.எல், எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் பேசியது.)
(குடி அரசு - சொற்பொழிவு - 09.01.1935 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக