“உண்மையாக வகுப்புத் துவேஷம், வகுப்பு வாதம், தேசியம்,
உரிமை என்பதற்கு இவர்களுடைய பொருள்தான் என்ன? பார்ப்பனர் தங்கள் சுயநலத்திற்கு ஒன்றைச்
சொன்னால், இவர்களும் கூடவே கோவிந்தா போடுவதுதான் தேசீயமென்பதற்கு அருத்தமா? உண்மையாகவே
வகுப்புத் துவேஷமும் வகுப்பு வாதமும் பார்ப்பனர்களிடம் இருக்கிறதா? ஜஸ்டிஸ் கட்சியினிடம்
இருக்கிறதா? என்பதை இவர்கள் உணராதவர்களா? நான் உயர்ந்த ஜாதி, நீ தாழ்ந்த ஜாதி என்று
சொல்லுபவனிடம் வகுப்புத் துவேஷ மும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது நீயும் நானும்
சமமான ஜாதிதான், நம்மில் உயர்வு இல்லை; தாழ்வு இல்லை என்கிறவர்களிடம் வகுப்புத் துவேஷமும்
வகுப்பு வாதமும் இருக்கிறதா? நான் கடவுள் தலை யில் பிறந்தேன், நீ காலில் பிறந்தாய்,
நான் உயர்ந்தவன் - பிராமணன், நீ தாழ்ந்தவன் - வேசி மகள், வைப்பாட்டி மகன், சூத்திரன்
என்று சொல்லுபவனிடம் வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? நீயும் நானும்
ஒரே இடத்திலிருந்துதான் பிறந்தோம்; நீ பிராமணனுமல்ல, நான் வைப்பாட்டி மகனுமல்ல; நாம்
இருவரும் சகோதரர்கள் என்று சொல்லுகிற ஜஸ்டிஸ் கட்சியில் வகுப்பு துவேஷமும் வகுப்பு
வாதமும் இருக்கிறதா? அல்லது தெய்வம் என்றும் தீர்த்தம் என்றும் மோக்ஷமென்றும் புண்ணிய
மென்றும் தர்மமென்றும் தானமென்றும் உன் சொத்தும் வரும்படியும் எங்களுக்கே கொடுக்க வேண்டும்;
அதுகள் எல்லாம் எங்களுக்கேதான் சேர வேண்டும்; நாங்கள் உயர்ந்த ஜாதியாரானதால் அவற்றை
எங்கள் இஷ்டம் போல் விநியோகித்துக் கொண்டு நாங்களே சாப்பிடுவோம்; நீங்கள் தாழ்ந்த ஜாதியாரானதால்
உங்களுக்கு தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தாலும் தோஷம்; ஆதலால் அதில் ஒன்றும் பாத்தியமில்லை,
கொடுத்ததிற்கும் நீங்கள் கணக்குக்கூட கேட்கக் கூடாது என்று சொல்லுகிறவர்களிடம் வகுப்பு
துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? நீ கேட்கிறபடியும் அதற்கு மேலும் உன் இழவுக்கு
அழுது விடுகிறோம்; ஆனால் அதுகளுக்கு கணக்கு மாத்திரம் காட்டு என்று கேட்பவர்களிடம்
வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? அல்லது எங்கள் கால் கழுவின தண்ணீரை
தீர்த்தமாக சாப்பிடுவதுதான் உங்களுக்குப் புண்ணியம்; நாங்கள் உங்களைத் தொட்டால், கிட்டவந்தால்,
தெருவில் நடக்க விட்டால், கண்ணால் கண்டால் கூட எங்களுக்குப் பாவம் என்று சொல்லுகிறவர்களிடம்
வகுப்பு துவேஷமும் வகுப்பு வாதமும் இருக்கிறதா? உங்கள் கால்களைக் கழுவின தண் ணீரை வேண்டுமானாலும்
குடிக்கிறோம்; அதற்குப் பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறோம்; எங்களையும் உள்ளே விடுங்கள்
; தெருவில் நடக்க விடுங்கள் என்று கேட்பவர்களிடம் வகுப்பு வாதமும் வகுப்பு துவேஷமும்
இருக்கிறதா?”
(ஜஸ்டிஸ் கக்ஷிக்கு ஓர் எச்சரிக்கை)
(சமய சஞ்சீவிக் கூட்டம்)
(குடி அரசு - கட்டுரை - 21.11.1926)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக