திங்கள், 3 பிப்ரவரி, 2020

2) பொதுவுடைமையின் பயன் - பெரியார்


37.2.1 இந்த நாட்டிலே உண்மையான கம்யூனிசக் கொள்கையுடைய ஆட்சி ஏற்படுமானால் திராவிட நாடு பிரிவினைக் கிளர்ச்சிக்கு அவசியம் இல்லாமற் போய்விடலாம்.

37.2.2 எல்லா மில்களையும் மற்றும் பெரிய கம்பெனிகளையும், அது எது எது பொது மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்கின்றனவோ அவைகளை யெல்லாம் சர்க்கார் தைரியமாய் மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் ஒருவன் கொள்ளை லாபம் அடிப்பதை நிறுத்த முடியும். மற்றும் அப்படிச் செய்தால் சர்க்கார் வரவு செலவு நிலையை நல்ல தன்மையில் வைத்திருக்கவும், மக்களுக்கும் தொல்லை ஏற்படாம லிருக்கவுமாக இருக்க முடியும்.

37.2.3 உற்பத்திப் பொருள்களின் சாதனங்கள் அனைத்தும் பொது வுடைமை யாக்கப்பட்டால் அதனுடைய மொத்த விளைவுகள் அதிகரிக்கும். அதனால் சகலருக்கும் அதிக சவு கரியமும் சந்துஷ்டியும் அதிகரிக்கும். மனிதனிடம் காணும் பேராசை, தன்னல லட்சியம் குறையும்.

37.2.4 பண்ட உற்பத்தியை மட்டும் சர்க்கார் எடுத்துக் கொண்டால் போதாது. பண்ட வினியோகத்தையும் சர்க்காரே மேற்கொண்டு எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி வினியோகிக்க வேண்டும். இடையில் தரகர்கள் கொள்ளை கொண்டு போகாமல் பார்ப்பதே பஞ்சத்தைத் தவிர்க்கும் முதல் ஏற்பாடு.

37.2.5 கவலைகள், மனக் குறைகள் எல்லாம் பொது வுடைமை ஒன்றினால்தான் நிவர்த்திக்க முடியும். பொதுவுடைமை என்று கூறுவதன் அடிப்படைத் தத்துவமே மனிதன் கவலையற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதுதான். சொந்த உடைமை என்பது கவலை நிறைந்த வாழ்வு ஆகும்.

37.2.6 மனிதனுடைய கவலைக்கும் குறைபாட்டிற்கும் பரிகாரமாக முடிந்த முடிவாக அறிஞர்களால் பலகாலும் சிந்திக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டதுதான் பொது வுடைமைத் தத்துவம். இதன் மூலம் சந்தோஷமான, கவலை' துக்கம் அற்ற, தெளிவுள்ள வாழ்க்கை மக்களுக்குக் கிட்டுகின்றது. மனிதன் சிந்தித்து அறிவை வளர்த்துக்கொண்டே போனால் பொது வுடைமையில் தான் கொண்டு போய்விடும்.

37.2.7 நாட்டில் பொது வுடைமைக் கொள்கையைக் கொண்ட அரசாங்கம் ஏற்பட்டு முயன்றால்தான் மக்களின் குறைபாடுகள் நீங்குமே ஒழியப் பொறுக்கித் தின்னும் இந்தக் கம்யூனிஸ்டுகளின் காலித்தனம், பலாத்காரத் தூண்டுதல் மூலம் ஒன்றும் முடியாது. அரசாங்கத்தைக் கைப்பற்றி ஆட்சி இந்தத் துறையில் ஈடுபட்டால் தான் மார்க்கம் ஏற்படும்; ஒருவன் சட்டைப் பையில் இருப்பதை ஒருவன் எடுப்பதுபோல் ஒருவன் நிலத்தில் ஒருவன் பிரவேசிப்பதால் ஆகிவிடாது. பொது வுடைமை ஆட்சியில் சொத்தெல்லாம் அரசாங்கத்தினுடையது. மக்கள் எல்லாம் அதில் ஈடுபட வேண்டும். வரும் பலன் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்த முறையினால்தான் மனிதனுடைய கவலையும் குறைபாடும் நீங்க முடியும்.

37.2.8 துக்க நிவர்த்திக்கும் குறைபாடுகள் ஒழிப்பிற்கும் பரிகாரம் பொது வுடைமைதான். குறைபாடு இரண்டு விதத்தில் உண்டு. போதவில்லை என்பது ஒன்று. இரண்டாவது போதுமான அளவுக்கு மேல் வேண்டும் என்று ஆசைப்படுவது. இப்படி ஆசையினால் ஏற்பட்ட குறையும், தேவையினால் ஏற்பட்ட குறையும் பொது வுடைமையினால் தீர்ந்துவிடும்.

37.2.9 நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொது வுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.

37.2.10 உலகத்திலுள்ள எல்லாச் சொத்தும் உலகத்திலுள்ள எல்லோருக்கும் சொந்தம். ஒவ்வொருவனும் பாடுபட்டுத்தான் சாப்பிட வேண்டும். தேவைக்கு மேல் எவனும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பன போன்ற கொள்கைகள் ஏற்பட்டு விட்டால், திருட்டுப் போவதும் திருட்டுப் போனதைப் பற்றிக் கவலைப் படுவதும் தானாகவே மறைந்து விடும்.

பொதுவுடைமை - பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக