ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 06:-

தொழிலாளர்களின் போராட்டத்தில் பலாத்காரம் ஏற்பட்டால் நாங்கள் விலகிக் கொள்வோம் – தந்தை பெரியார்
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 29.07.1928)
*******************************************************************************************
“கடைசியாக நான் பொது மக்களையும் தொழிலாளர்களையும் கேட்டுக் கொள்வதாவது:

எந்தக் காரணத்தை முன்னிட்டும் பலாத்காரமும் பொறுமை இழத்தலும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பலாத்காரம் ஏற்படுவது அதிகாரிகளுக்கு நன்மையாகவும் நமக்கு கெடுதியாகவும் முடியும். ஒத்துழையாமையின் போது கூட திடீரென்று திருவாளர் காந்தி இயக்கத்தை நிறுத்த நேர்ந்ததற்குக் காரணம் பலாத்காரம் ஏற்பட்டதுதான். அதனாலேயேதான் அவ்வியக்கம் தோல்வியடைந்ததாக கருத நேரிட்டது. ஆதலால் பலாத்காரமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.

போலீசார் மீது குற்றம் சொல்வதில் யாதொரு பயனும் இல்லை. அவர்கள் சம்பளத்திற்காக, மேல் அதிகாரி சொன்னபடி கேட்கும் நிபந்தனை இல்லாத அடிமைகள். அவர்கள் எஜமான் சொன்னபடி நடக்கா விட்டால் வேலை போய்விடும்.

144 போட்ட மாஜிஸ்ட்ரேட்டிடமும் நாம் குற்றம் கண்டுபிடிப்பது முட்டாள்தனம். வெள்ளை அதிகாரிகள் சொன்னபடி உத்திரவு போடாவிட்டால் வேலை போய்விடும். அப்புறம் உபாதான மெடுக்க வேண்டியதோ கருமாந்திர வீட்டில் தக்ஷிணைக்கு போக வேண்டியதோ அவர்கள் கடமையாகி விடும். ஆதலால் பொறுமை இழக்காமல் பலாத்காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்களாலான உதவி கடைசி வரை செய்யக் காத்திருக்கின்றோம். பலாத்காரம் ஏற்பட்டால், அதுவும் தொழிலாளர்களால் நடந்தது என்பதாக தெரிந்தால் நாங்களும் விலகிக்கொள்வோம் என்பதைக் கண்டிப்பாய் சொல்லுகின்றேன். மற்றபடி இங்கு நடத்தப் போவதாய் சொல்லப்படும் சத்தியாக்கிரகத்திற்கு என்னாலான பண உதவியும் ஆள் உதவியும் செய்யத் தயாராயிருக்கின்றேன் என்று சொல்லி முடித்தார்.”

(குறிப்பு : 21.6.1928 இல் ஈரோடு தொடர்வண்டி நிலையத்தின் அருகில்
தொழிலாளர் வேலை நிறுத்தக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒட்டிப் பேசியது.)
 (தந்தை பெரியாரின் பொதுவுமைமைச் சிந்தனைகள் I- பக்- 58-59)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக