திங்கள், 24 பிப்ரவரி, 2020

தொழிலாளர் நிலைமை III – தந்தை பெரியார்


(குறிப்பு: 12.04.1983 குடி அரசு - அனுப்பபாளையம் சொற்பொழிவு தொடர்ச்சி)

நமது கவனத்தை அரசாங்கத்தாரும் வேறு ஏதாவது ஒரு வழியைக் காட்டித் திருப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கும், அன்புக்கும் விரோதமில்லாமலே தான் அரசாங்கத்தார் நடந்து கொள்ளுவார்கள். அப்படிக்கில்லா விட்டால் அரசனுக்கும், அவனுடைய சிப்பந்திகளுக்கும் உலை வைக்க உடனே முதலாளி வர்க்கம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உண்மையில் தொழிலாளிகளுக்கு தீங்கு இழைத்துக் கொண்டிருப்பது முதலாளி வர்க்கம் தான் என்பதை மக்கள் அறியமுடியாமல் பல தேச பக்தர்கள் என்பவர்கள் முதலாளிகளிடம் கூலி பெற்றுக்கொண்டு நம்மை சர்க்கார் பக்கம் திருப்பி விட்டு விடுகிறார்கள். இப்போதும் இந்நாட்டில் உள்ள கஷ்டத்திற்கு காரணம் சர்க்கார் என்றுதான் நீங்கள் கருதுகிறீர்களே தவிர முதலாளிகள் என்று நீங்கள் கருதுவதில்லை. சர்க்காரால் தொழிலாளிக்கு அதிக நஷ்டமில்லை.

இத்தேசத்திற்கு வெளிநாட்டு சர்க்கார் வருமுன் தொழிலாளிகள் எல்லாரும் எந்தவிதமான தொழில் செய்பவராக இருந்தாலும் அவர்களது சோற்றுக்கு மட்டும் கணக்குப் பார்த்து கூலி கொடுக்கப்பட்டு வந்தது. மாதம் மாதம் சாப்பாடு மட்டும்தான் போட்டு தினம் 24 மணியில் 20 மணி நேரம் வரை மாடுகளைப்போல் வேலை வாங்கிவந்தார்கள். அதிலும் இந்திய சுதேச அரசர்கள் அரசாண்ட காலத்தில் மக்களை ஆடுமாடுகளைப்போல பட்டியிலடைத்து வைத்துத்தான் வற்புறுத்தி வேலை வாங்கினார்கள். அதற்கு முன் அரசாண்ட இராமன், கிருஷ்ணன் என்பவர்களின் காலத்திலோ தொழிலாளர்களின் நிலைமையைக் கேட்க வேண்டியதில்லை. மனுதர்ம முறை தவறாமல் தான் வேலை வாங்கி இருப்பார்கள் என்பதில் என்ன சந்தேகம். காளிக்கும், கருப்பனுக்கும் மனிதர்களைப் பலி கொடுப்பார்கள்.

அக்காலத்திலும் தொழிலாளர்கள் நிலை மிக மோசமாகவேதான் இருந்துவந்ததற்கு ஆதாரமுண்டு அன்னியர் அரசு வேண்டாமென்றால் அதை விடக் கொடுமையான அரசு வருணாச்சிரம அரசு என்பது, ஆகவே அது சுதேசி அரசானாலும், காந்தி அரசானாலும் நமக்கு வேண்டியதில்லை. எந்த அரசாங்கம் இந்நாட்டில் ஏற்பட்டாலும் மேல் கீழ் ஜாதி முதலாளி, தொழிலாளி பிரிவு ஆகிய வேற்றுமை நிலை ஒழிக்கப்படும் வரை நாம் முட்டிக்கொள்ள வேண்டியது தான். உயிரையும் விடும்படியான கிளர்ச்சி செய்ய வேண்டியதுதான்.

மேனாடுகளில் அன்னிய அரசு, ராஜா அரசு ஆகியவை இல்லாத சுதேச அரசு, குடி அரசு நாடுகள் பல இருக்கின்றன. ஆயினும் அவை பேருக்குத் தான் ஜனங்கள் ஆட்சி என்பது தவிர அரசாட்சி செலுத்துவது ஆதிக்கம் வகிப்பது எல்லாம் பணக்காரக்கூட்டம் தான். அங்கு இன்று லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளிகள் பட்டினிதான் கிடந்து வாடுகிறார்கள். உலகத்தில் குபேரநாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவின் யோக்கியகைப் பற்றி வெளியில் சொல்லவேண்டியதில்லை. அங்குதான் வேலை யில்லாத் திண்டாட்டம் இன்னும் அதிகமாக இருக்கிறது. 11 கோடி மக்களுக்கு வேலையில்லை, பட்டினி தான் இருக்கிறது. அங்கு வேறு நாட்டான் வந்து அரசாளவில்லை. ஒரு அரசன் இருந்து அரசாள வில்லை. உள்ளூர்க்காரன் சொந்தக்காரன் குடிகள் தான் அரசாளுகிறான். அப்படியிருந்தும் தொழிலாளியின் நிலையானது ஏன் இவ்வளவு கேவலமாக வந்திருக்கிறது என்பதை கவனித்தால் காரணம் விளங்காமல் போகாது.

இந்தியாவில்தான் “வெள்ளைக்காரன் அரசாளுகிறான் இதனால் வேலை இல்லை கஷ்டம் பஞ்சம்," என்று குறை கூறப்படுகிறது. அவசர சட்டங்கள், அடக்கு முறைகள் என்று அலரப் படுகிறது. ஆனாலும் ஆங்கில அரசாட்சியிலும் அல்லது இனி வரப்போகும் காந்தி அரசாட்சியிலும், இங்குள்ள தொழிலாளிகளுக்கு என்ன பயன் ஏற்படும். கருப்பன் அரசாண்டால் இன்னும் ஒரு 50 சங்கராச்சாரியும் ஊருக்கு 10 மடமும் 20 கோவிலும் ஏற்பட்டு இன்றும் மக்களை கொள்ளையடிக்கப் பட்டு மக்களை ஒன்றுபடவிடாமல் சாதிக்கு சாதி சட்டம்போட்டு நசுக்கு வதைத் தவிர வேறு என்ன வழிபிறக்கும்? என்பது இதுவரை சுயராஜ்யம் கேட்கும் தேசியவாதிகள், தேசபக்தர்கள் மகாத்மாக்கள் சொல்வதிலிருந்தும், எழுதுவதிலிருந்தும் தெரியவில்லையா? ஆங்கில ஆட்சியிலேனும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதாக ஏதோ 100-க்கு 4, 2 அனு கூலங்கள் ஏற்பாடு செய்ததாக, செய்வதாக சொல்லப்படுகிறது. கொள்ளை, திருட்டு, ஜாதிமுறை இவைகள் தடுக்கப்படுவதற்கு கடுமையான சட்டங்கள் கையாளப்படுகிறது துவேஷமிருக்கக்கூடாது என்று சொல்லிக் கொள்ளப் படுகிறது.

ஆயினும் இப்போதுதான் சங்கராச்சாரி இங்கு தங்கப் பல்லாக்கு போட்டு மனிதன் மேல் சவாரி செய்கிறான். பார்ப்பானோ பகற்கொள்ளை யடிப்பது போன்று அவனுக்குத் துணையாக வருகிறான். பாதிரிகளோ மக்கள் அறிவைக் கெடுத்து மோட்சத்திற்கு அனுப்ப உபதேசிக்கின்றனர். முல்லாக்கள், புரோகிதர்கள் என்பவர்களின் கொடுமையிலிருந்து மக்களை மீட்க வழியைக் காணோம். காட்டுமிராண்டி தனமாகவே எல்லா மதக்காரர்களாலும் உற்சவம் பண்டிகைகள் கொண்டாடப்பட்டும் நரபலிகூட கொடுப்பதும் சரி என்று மக்கள் மனதில் பதிந்திருக்கும் எண்ணத்தையும் மாற்றும் முறையில் எதுவும் கவலை எடுத்துக் கொள்ளக்காணோம்.

ஆனால் சுயராஜ்யம் என்றும் மதம் என்றும் அதுவும் மதாழுக்கம் வருணாச்சிரமம், தவறாமல் சுயராஜ்யம் வேண்டும் என்றும் கேட்கின்றார்கள் அவர்களது கோரிக்கைப்படி சுயராஜ்யம் வந்துவிட்டால் அதில் தொழிலாளர்கள் நிலைமை தீண்டப்படாதார் நிலைமை, தாழ்த்தப்பட்ட பார்ப்பனரல்லாதார் நிலைமை என்ன ஆகும் என்று சொல்லவும் வேண்டுமோ?
எந்த ராஜா எந்த தேசத்திலானாலும் இந்தியாவிலானாலும் ஆண்டாலும் இங்கு பாடுபடுபவன் நாளெல்லாம் பாடுபட்டு மடியவும் சோம்பேறி இருந்து தின்கவும் தான் இருக்கிறதே ஒழிய வேறு வழி என்னவென்று கேட்டால் உடனே பதில் சொல்லாது மழுப்பிவிட்டு எல்லாம் சுயராஜ்ஜியம் வந்தால் சரியாகப் போய்விடும் என்பான். சுயராஜ்யத்தில் எப்படி சரியாகப் போய்விடும் என்று கேட்டால் அரசாங்கம் செய்வது தான் தப்பு இந்நாட்டில் அன்னிய அரசாங்கம் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம் என்று அரசாங்கத்தை ஒழிக்க வரும்படி தூண்டுவான். ஆனால் அரசாங்கத்தை எதிர்க்கும்படி காட்டிவிட்டு அவன் மட்டும் ஜட்ஜியாகவோ, வக்கீலாகவோ மாதம் 4000, 5000 சம்பளம் வாங்கிக்கொண்டு தன் பிள்ளை குட்டி பந்துக்களுக்கும் அரசாங்கத்திலே அதிகாரம் வாங்கிக் கொடுத்து தைரியம் ஏற்படுத்திக் கொள்வான்.

அன்னிய பாஷை விரோதம், அடிமைப்புத்தியை வளர்க்கும் என்றும் இனி பள்ளிக்கூடங்களுக்கு செல்லாதீர்கள் என்றும் உங்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பிப்பார்கள். ஆனால் தமது குழற்தைகளை மட்டும் எம்.ஏ., பி.ஏ., படிக்கவைத்து மேல் படிப்புக்குச் சீமைக்கு அனுப்பி அங்கிருந்தே உத்தியோகத்தோடு வந்து சேர வழிசெய்து கொள்வான். தொழிலாளியின் மக்கள் அவன் சொல்வதையே சரி என நம்பி நாளெல்லாம் பாடுபட்டு முட்டாள்களாக, முதுகெலும்பு ஒடிய வேலை செய்து மீதமிருக்கும் 2, 1 ரூபாயும் சங்கராச்சாரிக்கும், மாரியம்மனுக்கும் கொட்டி விட்டு மோட்சத்திற்கு போக வழி கேட்பார்கள்.

தனது செல்வாக்கு இன்னும் ஆயிரக்கணக்கான வருடங்களாக இருப்பதற்கும் தனது சூழ்ச்சிகள் மறைக்கப்படுவதற்கும் தொழிலாளர்களின் விழிப்பை மடக்கி விடுவதற்கும் தான் முதலாளி அன்னிய அரசாங்கத்தை சுட்டிக் காட்டுகிறான். முதலாளிகளின் கூலிகளில் தான் சுயராஜியம் பேசுகிறார்கள். தொழிலாளித்துவம் இங்கு நிலைத்திருப்பதற்குக் காரணம் இதுதான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

வெளிநாட்டிலிருந்து துணி வந்து இந்தியாவில் விற்றாலும் இந்தியா விலிருந்து ஏற்றுமதி செய்து வெளிநாட்டில் விற்றாலும் லாபம் யாருக்கு கொள்ளை லாபம் சம்பாதிப்பது முதலாளி கூட்டம் தானே. தொழிலாளி அவன் தேவைக்குத் தகுந்ததைச் செய்து கொடுக்கவேண்டியது அன்றி இவன் அடையும் ஊதியம் ஏதாவது உண்டா? மத்தியிலிருக்கும் தரகனுக்கு கிடைக்கும் லாபம்கூட தொழிலாளி - உற்பத்தி செய்கிறவன் - நெசவுக்காரன் ஆகியவனுக்குக் கிடைப்பது இல்லை.
(தொடரும்)

(குடி அரசு - சொற்பொழிவு - 16.04.1933)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக