திங்கள், 3 பிப்ரவரி, 2020

5) தொழிலாளர்களுக்கு அறிவுரை – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

28.5.1 தொழிலாளர்களின் கவலை யெல்லாம் தங்களுக்கு எவ்வளவு வேண்டும் என்ப தல்ல. தங்களுடைய நிலைமை மற்ற யாருடைய நிலைமைக்கும் தாழ்ந்ததாக இருக்கக் கூடாது என்பதே யாகும்.

28.5.2 எதிரிக்கு விபீடணனாய், அனுமாராய் இருப்பதைப் பற்றி வெட்கப்பட்டு எதிரியை, எதிரி ஆயுதத்தை வெறுக்க வேண்டும். தனது இழிவுக்கு அடிப்படை எது என்று பார்த்து அதைப் பெயர்த்துத் தகர்த் தெறிய வேண்டும். அந்த நிலை அடையாத தொழிலாளி சூத்திரன் எவனும் மாறுதல் அடைய முடியாது. இது உறுதி, உறுதி, உறுதி என்று முக்காலும் சொல்லுவேன்.

28.5.3 தொழிலாளர் ஒன்று திரண்டு தங்கள் உரிமைக்காகப் போரிடத் துணிவாராயின் தொழிலாளர்களின் உழைப்பால் உயர் வெய்திய முதலாளி வர்க்கம் அடியோடு அழிந்து விடும். பாட்டாளி மக்களின் பணத்தைப் பல வகையிலும் கொள்ளை கொள்ளும் பணக்காரர்களின் ஆர்ப்பாட்டம் முற்றிலும் தொலைந்துவிடும். இந் நிலைமை வருங் காலத்தில் உண்டாவது உறுதி உறுதி.

28.5.4 மே தினம் ஒரு புரட்சி நாள், உண்டு கொழுக்கும் சோம்பேறிக் கூட்டத்திற்கு இட மில்லாமல், ஆண்டவன் திருவிளையாடல் நிகழும் அக்கிரமத்திற்கு இட மில்லாமல், பாவ புண்ணிய அடிப்படையில் உலக மக்கள் என்கிற போக்கை மாற்றிப் பாடுபடுபவன் பாடுபடாதவன் என்கிற அடிப்படையில் அதாவது தலை கீழ் மாற்றமான அடிப்படையில் நடத்திய புரட்சி வெற்றி பெற்ற நாள் இந்த மே தினம். மே தினம் விரும்பும் தோழர்கள் இந்த அடிப்படையை முதலில் மனதில் கொள்ள வேண்டும்.

28.5.5 தொழிலாளிகள் மோதிக் கொள்ள வேண்டிய இடம் முதலாளிகள் அல்ல; முதலாளிகளிடம் முறையிடுவதற்குப் பதிலாக மந்திரிகளிடம் முறையிடுங்கள். அவன் வீட்டைக் கொள்ளை யடிப்பதற்குப் பதிலாகக் கசானாவைக் கொள்ளை யிடுங்கள்..... தொழிலாளியின் கூலி உயர்ந்து விட்டால் மட்டும் அவன் நிலை அந்தஸ்து உயர்ந்து விடாது; தொழிலாளித் தன்மை அடியோடு மாறிவிடாது.

28.5.6 தொழிலாளர் முக்கியம் கைக் கொள்ள வேண்டிய பண்புகளாவன நாணயம், நேர்மை, நல் லொழுக்கம், கடமையைச் செய்தல், பிறருக்குத் தீங்கு விளைவிக்காமல் இருத்தல் முதலியவைக ளாகும். யாவற்றிலும் மேலாகச் சிக்கன வாழ்க்கையைக் கைக்கொண்டு வாழ்க்கை நடத்த முற்பட வேண்டும்.

28.5.7 கூலி உயர்ந்தாலும், உத்தியோகம் உயர்ந்தாலும் நிலைமை உயர்ந்துவிடாது. கூலி உயர்ந்துள்ள நிலையில் உள்ளவர்களும் உத்தியோகம் உயர்ந்த நிலையில் உள்ளவர்களும் ஆக இரு சாராரும் உள்ளனர். ஆனால் அவர்கள் நிலைமை உயரவில்லையே ஏன்? கூலியும் உத்தியோகமும் உயர வேண்டும் என்று கேட்பதே நம் எசமானர்கள் என்பவர்களை நோக்கித்தான். ஏனெனில் அவை எசமானர்கள் பார்த்துச் செய்ய வேண்டிய காரியம் என்பதாகும். ஆனால் நம் நிலைமை உயர வேண்டும் என்பது நம்மாலேதான் ஆகும். நம்முடைய நடப்புக்களால் ஆசா பாசங்களால்தான் முடித்துக் கொள்ள முடியும். எனவே நமது குறிக்கோள் எல்லாம் கூலி உயர்வு, உத்தியோக உயர்வைப் பற்றி அல்ல. மாறாக நிலைமை உயர வேண்டும் என்பது பற்றியே.

28.5.8 கூலியும், பதவியும் உயர்த்தப்பட்டாலும்கூடக் கூலி உயர்வைப் பற்றிக் கவலை கொள்ளும் போது நாம் எந்த நிலையில் உள்ளோமோ அதே நிலையில்தான் கூலி உயர்ந்த பின்பும் உள்ளோம். அந்தப் பேதத்தின் அளவு (கூலி எசமான நிலை) ஒன்றும் மாறிவிட வில்லை. பதவி உயர்ந்தாலும் பேத அளவு அப்படியேதான் உள்ளது. எவ்வளவு கூலி உயர்ந்தாலும் திருப்தி ஏற்படும் நிலையில் இல்லையே? அதனால்தான் கூலியைப் பற்றி அவ்வளவு கவலைப்படத் தேவையில்லை.

28.5.9 நான் தொழிலாளர்களுக்குக் கூறும் அறிவுரையானது காலித்தனம், ரகளை பண்ணாதீர்கள்; ஒத்துக் கொண்டபடி நடவுங்கள்; உற்பத்திக்கோ பொருளுக்கோ நட்டம் ஏற்படுத்தா தீர்கள்; தாபனத்துக்கு விசுவாசமாக இருங்கள் என்பதுதான்.

28.5.10 நான் போய்ப் பார்த்த அத்தனை ஊர்களிலும் கண்ட கருத்து முதலாவது தொழிலாளர்கள் பெரிதும் நாத்திகர்கள். ரசியாவில் அந் நாட்டு இயற்கையே நாத்திகம். செர்மனி, இங்கிலாந்து, பிரான்சு முதலிய நாடுகளிலும் தொழிலாளர்கள் நாத்திகர்கள்தான். நாத்திகர்கள் என்றால் அறிவுவாதிகள் பகுத்தறிவைப் பயன்படுத்துபவர்கள் என்று அர்த்தம்.

1 28.5.11 நம் நாட்டில் தொழில் தாபனங்களை உருவாக்கி அதற்குத் தலைவராக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால் அந்தக் கம்யூனிஸ்டுகள் தங்களால் நடத்தப்படுகின்ற தொழிலாளர் இயக்கங்களில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்வதில்லை. பகுத் தறிவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்தி நாத்திகர்களாக ஆக்குவ தில்லை. தொழிலாளி நாத்திகனாக ஆனால்தான் தான் ஏன் தொழிலாளி ஆனான் என்பது தெரிய முடியும்.

28.5.12 தொழிலாளர்கள் பகுத்தறிவு வாதிகளாக ஆகணும், கடவுள், மதம், சாத்திரம், சம்பிரதாயம் முதலிய காரியங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கணும். மனிதத்தன்மையிலும், மானத்திலும், ஒழுக்கத்திலும் நம்பிக்கை இருக்கணும்.

28.5.13 தொழிலாளி தன் பிள்ளை என்றென்றைக்கும் தொழிலாளியாகவே இருக்க ஆயுதங்களை வைத்து விட்டுப் போவது மட்டும்தானா சொத்து? அவனவன் தங்கள் பிள்ளை களுக்குக் கல்வியறிவு பெறச் செய்துவிட்டுப் போவது சொத்தா காதா? தொழிலாளி தன் சம்பாத்தியத்தை யெல்லாம் கோயி லுக்கும் குளத்துக்கும் அழுதுவிட்டுப் பிள்ளைகளைத் தற்குறியாக விட்டுச் சென்று விட்டால் அவர்கள் குலத் தொழில் செய்ய ஆயுதங்களைத் தூக்க வேண்டியதுதானே? தொழிலாளிகள் சிந்திக்க வேண்டாமா?

28.5.14 நம் நாட்டுத் தொழிலாளர்களின் அடிப்படையில் பெரிய கோளாறு இருக்கிறது. அடிமைத் தன்மையும் அறியா மையும்தான் அந்தக் கோளாறு. இது உள்ள வரையில் எவ்வளவுதான் தலை கீழாக நின்றாலும் தொழிலாளர்கள் முன்னேற முடியாது. தொழிலாளர் நன்மைக்கு என்று உழைப்ப தாகக் காட்டிக் கொண்டு வயிறு வளர்ப்பவர்கள் இருப்பதால் தான் தொழிலாளர்கள் சிந்திக்கவோ, முன்னேறவோ முடியாமல் இருக்கின்றார்கள்.

28.5.15 அடித்துப் பிடித்து ஏதோ கூலி உயர்வு வாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் தொழிலாளருக்கும் இருக்கிறதே ஒழிய, வாங்கிய பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்து கொண்டும், மிச்சத்தில் தன் வாழ்க்கையை வசதி பண்ணிக்கொண்டும், தன் பிள்ளைகளைப் படிக்க வைத்தும் அவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற கவலை இல்லையே! தொழிலாளர் குடும்பங்கள் முன்னேறவில்லை யென் றால் எப்படி முன்னேற முடியும்?

28.5.16 கூலி உயர்வால் மட்டுமே உங்கள் இழிவு போய்விடாது; எசமான், கூலி என்கிற அந்த வேற்றுமையும் அதனால் மறைந்து விடாது. உழைக்காத சோம்பேறிக்கு ஏன் உடைமை இருக்க வேண்டும்? உழைக்கும் பாட்டாளி ஏன் அவனிடம் கூலி பெற்று வாழ வேண்டும்? என்று நீங்கள் கேளுங்கள். நீங்கள் முதலில் சரிசமம் ஆன மனிதனாகுங்கள். பிறகு உடைமையைச் சரிசம மாக்கிக் கொள்ள நீங்கள் பாடுபடுங்கள். உடைமையில் அதிகமான உடைமைக்காரர்களாக இருந்தும் அநேகம் பேருக்கு இழிவு நீங்கவில்லை. உடைமை வரும், போகும் தற்செயலாய். இழிவு அப்படி அல்ல. ஆகவே, ஒரு காலணா கூலி உயர்வுக்காக அடிபட்டுச் சாவதைவிட, அவன் ஏன் மேல் சாதி? அவன் ஏன் முதலாளி? நான் ஏன் தொழிலாளி? என்று கேட்பதில் உயிர் விடுங்கள்.

தொழிலாளர் – தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக