வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 12:-


“தேசீயக் கிளர்ச்சி”யும் "சீர்திருத்த” முயற்சியும்
(குடிஅரசு- 23-11-1930)

(காலம் காலமாக இருக்கும் சமூக கொடுமைகளை முன்வைத்து சுதேசிய போராட்டத்தை அதாவது ஏகாதிபத்தியத்தில் இருந்து நாடு விடுபடுவதை பெரியார் மறுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்றைய உடனடிப் பிரச்சியை தீர்ப்பது அவசியம் இந்தப் பிரச்சினையின் ஊடே தான் பழைய பிரச்சினைகளை இணைத்துத் தீர்க்க வேண்டும்.

பெரியாரின இத்தகைய மறுதலிப்பு உடனடிப் பிரச்சினையின் தீர்வுக்கு தடையாகவே இருக்கிறது. கலகக்காரர் பெரியாரின் கலகம் உடனடிப் பிரச்சினைகளையும் தீர்க்க முயல வேண்டும். உடனடியாகத் தீராத பிரச்சினையில் கலகம் செய்வதுடன் நில்லாது, இன்றைய காலத்திய உடனடிப் பிரச்சினையிலும் பெரியார் கலகம் செய்திருக்க வேண்டும்.

இன்று காணப்படும் சுதந்தர இந்தியாவில் பெரியார் குறிப்பிடுவது போல் உயர்ந்த ஜாதிக்காரன், பணக்காரன், படித்தவன் ஆகியோர் மட்டுமல்லாது ஏழைகளுக்கும் அனுகூலமாகத்தான் இருக்கிறது. ஏழை மாணவர்களும் படித்து முன்னேறியதைக் காண முடிகிறது. பல குடும்பம் முதல் பட்டதாரியும் முதல் முனைவர்களையும் சந்தித்துள்ளது. பார்ப்பன எதிர்ப்பில் முழ்கியிருந்தால் இந்த நற்பலனை அனுபவித்திருக்கமுடியுமா?. தொடர்ந்து கல்வியின் அருமையும் பயனையும் அக்குடும்பங்கள் அறிந்துவருகிறது. அதனைப் பார்த்த பலகுடும்பங்கள் தங்களது குழந்தைகளை கல்வி கற்பதற்கு பாடுபட்டுவருவதை காணமுடிகிறது. பொருளாதார முன்னேற்றமும் சிறுகசிறுக மேம்பாடடைகிறது. படிப்பு பலவற்றை அவர்களுக்கு கற்றுத்தருகிறது. சுதந்திர நாடு பலருக்கு அனுகூலமாகத்தான் இருக்கிறது.)

“இன்று இந்திய மக்களில் பெரும்பான்மையோருடைய உணர்ச்சிகளை காங்கிரஸ் 'தேசீயக் கிளர்ச்சி'யும் வட்ட மேஜை மகாநாட்டு “சீர்திருத்த” முயற்சியுமே கவர்ந்து கொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் சிறை சென்றும் அடிபட்டும் செல்வமிழந்தும் கஷ்டப்படும் மக்கள் பலர் இருக்கிறார்கள் என்பதில் ஆக்ஷேபணையில்லை. சீர்திருத்தம் அளிக்கும் முயற்சியில் சர்க்கார் பெரும் தொகைகளைச் செலவு செய்து பெரும் எதிர்ப்புகளைச் சமாளித்து கமிட்டி விசாரணைகள் நடத்துவதும், வ.மே. மகாநாடுகள் கூட்டி யோசிப்பதுமான காரியங்கள் நடைபெற்று வருவதும் யாவரும் அறிந்ததாகும். என்றாலும் இவ்விரண்டினுடைய முடிவு என்ன என்பதும் அதனால் நாட்டுக்கு நன்மை என்ன என்பதும் அநேகமாக ஏற்கனவே நம்மால் முடிவு செய்யப்பட்டு விட்ட விஷயங்கள் தானே யொழிய வேறில்லை.

அதாவது கிளர்ச்சியினால் அநேகர்கள் தேச பக்தர்களாகவும், தியாகிகளாகவும் ஆகலாம். முயற்சியினால் பலருக்கு பெரியபெரிய பட்டமும், பதவியும், உத்தியோகங்களும் கிடைக்கலாம். இதைத் தவிர நாம் எதிர் பார்க்கும் காரியம் கிடைக்குமென்று நம்புவதற்கில்லை. சைமன் கமிட்டியார் தெரிவித்தபடியும் சர்க்கரவர்த்தியார் தெரிவித்தபடியும் இந்தியாவில், "அனாதி” காலம் தொட்டு இருந்து வரும் மேல் ஜாதி, கீழ் ஜாதி வித்தியாசக் கொடுமையும் ஆண் பெண் உயர்வு தாழ்வு வித்தியாசக் கொடுமையும், பணக்காரன் - ஏழை வித்தியாசக் கொடுமையும், மிராசுதாரன் - உழுகின்ற குடியானவன் வித்தியாசக் கொடுமையும், பொதுவில் மதக்கொடுமையும் ஆகியவைகளை நன்றாய்க் கவனித்து அஸ்திவாரத்தில் இருந்தே பரித்துக் களைந்து எறியும்படியான கிளர்ச்சியும் முயற்சியுந்தான் உண்மையில் ஏதாவது பயனளிக்கக்கூடியதாகுமே தவிர வேறல்ல.

இவ்விதக் கிளர்ச்சிக்கும் முயற்சிக்கும் மக்களை முந்த விடாமல் செய்வதற்காகவே தான் இன்றைய ‘கிளர்ச்சியும்’ ‘முயற்சியும்' நடை பெறுகின்றன.

ஆகவே இவையிரண்டும் இந்தியாவின் உண்மையான விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் விரோதமானதென்றே சொல்லுவோம்.
… …. …
தேசியக் கிளர்ச்சியில் வரும் பூரண சுயேச்சையானாலும், சீர்திருத்தமளிக்க முயற்சி செய்யும் சர்க்காரால்வரும் முழு சீர்திருத்தமானாலும், இரண்டும் உயர்ந்த ஜாதிக்காரன், பணக்காரன், படித்தவன் ஆகிய மூவருக்கும் மாத்திரம் அனுகூலமும், முற்போக்குக்கான சுதந்தரமும் சீர்திருத்தமுமாய் இருக்குமே தவிர, 100க்கு 90 மக்களாய் இருக்கின்ற குடியானவனுக்கும் கூலிக்காரனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்கும், வேண்டிய மார்க்கம் அதில் ஒன்றுமிருக்காது என்றும் சொல்லுவோம்.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I - பக்- 114-115 / 119-120)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக