திருவாங்கூரில் சமதர்ம முழக்கம் – தந்தை
பெரியார்
(மதத்தைப் பற்றிப் பெரியார் இங்கே தெளிவாகவே கூறியிருக்கிறார்.
இந்தச் சமூகத்தின் பிரச்சினைகளை இந்த மதம் இதுவரை தீர்க்கவில்லை. மதங்களால் எந்தப்
பயனும் இல்லை. எத்தகைய சீர்திருத்தங்களையும் பகுத்தறிவுகளையும் மதத்தில் புகுத்தினாலும்
எதையும் சாதித்திட முடியாது என்று பெரியார் சரியாகவே விளக்கி உள்ளார். ஆனால் முடிவாய்
கூறும் போது, கடவுளையும் மதத்தையும் ஒழிப்பதில் தான் மனிதனின் விடுதலை அடங்கி இருக்கிறது
என்கிறார். மதம் யாருக்கு சேவை செய்கிறதோ அவர்களை ஒழிக்காமல் மதத்தை ஒழிக்க முடியாது.
மதத்தில் இருக்கும் வர்க்க சார்பை பெரியார் புரிந்து கொள்ளவே இல்லை. இதனைப் புரிந்து
கொள்வதற்கு வர்ணப் பார்வை போதாது, வர்க்கப் பார்வை அவசியமாகிறது. வர்க்கப் போராட்டத்திற்குள்
தான் வர்ணப்ப போராட்டத்தை நடத்த முடியும். வர்க்கப் போராட்டத்தைத் தள்ளிப் போட்டு வர்ணப்
போராட்டத்தை நடத்துவது என்பது உள்ளடக்கத்தை விடுத்து வடிவத்துடன் போராடுவதாகும். உள்ளடக்கம்
இருக்கும்வரை வடிவம் அழியப் போவதில்லை. கம்யூனிசம் உள்ளடக்கத்தை அறிந்து கொண்டு அதற்கு
ஏற்றபடியே வடிவத்துடன் போராடுகிறது.)
தந்தை
பெரியார்:-
“உலக சரித்திரம் கிடைத்த காலந்தொட்டு ஜாதி, மதம்,
கடவுள், தேசம், சமூகம், அரசாங்கம் ஆகியவை இருந்து தான் வந்திருக்கின்றன. இவைகளைப் பற்றிய
அபிமானங்களும், சீர்திருத்த முயற்சிகளும், பெரியார்களும், மகாத்மாக்களும் அவ்வப்போது
தோன்றியும், பல சீர்திருத்தக் காரியங்களைச் செய்தும் தான் வந்திருக்கின்றனர். இவைகள்
எல்லாம் மனிதசமூகத்திற்கு என்ன பயன் அளித்திருக்கின்றன? குறைந்தது ஒரு ஆயிரம் அல்லது
2000 வருஷ சரித்திரங்களையோ அல்லது அக்கால நிலையை உணர்த்தும் புராணக் கதைகளையோ எடுத்துக்
கொண்டீர்களேயானால், அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை யோசித்துப்பாருங்கள்.
2000 வருஷத்திற்கு முன் இருந்த சண்டாளனும், ஏழையும்,
கஷ்டப்படும் கூலியும், பட்டினி கிடந்து, பசியால் வாடி, மழையால் நனைந்து வெயிலால் காய்ந்து
உடுக்க உடையில்லாமல் படுக்கப் பாயில்லாமல் இருக்க இடமில்லாமல் அலைந்து திரிந்து அவதிப்படும்
மக்களும் கோடிகோடியாய் இன்றும் இருந்து தான் வருகின்றார்கள் என்றால் இதுவரை இருந்து
வந்த மத அபிமானமும், கடவுள் அபிமானமும், தேச அபிமானமும், அரச அபிமானமும் ஆகியவைகள் இக்கொடுமைகளை ஒழிக்கவோ, அல்லது இனிமேல்
உலகில் இக் கொடுமைகள் இல்லாமல் செய்யவோ முடியவில்லை என்றால் இன்னமும் எத்தனை நாளைக்கு
அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போன்ற முட்டாள் தனமான வேலைகளாகிய மேற்படி அபிமானங்களை
காப்பாற்றிக் கொண்டிருப்பது என்று கேட்கிறேன்.
... ... ...
நான் சொல்லுவதென்ன வென்றால் இனி இந்த அபிமானங்களால்
அதாவது ஜாதி, மத, கடவுள், தேசம், அரசு ஆகிய அபிமானங்களால் யாதொரு பயனும் இல்லை யென்றும்
அவைகள் போலியும், சூட்சியும் நிறைந்த ஏமாற்றங்கள் என்றும் தைரியமாய்ச் சொல்லுகின்றேன்.
ஆகையால் அதை விட்டு விட்டு மனுஷ்ய அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம்
வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும் அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை
ஏற்று நடத்த வேண்டும் என்று தான் சொல்லுகின்றேன்.
இனி ஜாதி மதம் கடவுள் தேசம் அரசு ஆகிய எவற்றிற்கும்
சிறிதும் இடம்கொடாமலும் மனித அபிமானத்திற்காக மேல் கண்டவைகளில் எதை வேண்டுமானாலும்
இழக்கவும் தயாராய் இருக்க வேண்டும். அன்றுதான் எல்லோரும் மனிதர்களாக இருக்க முடியும்.
இதனால் ஆபத்து ஒன்றும் ஏற்பட்டு விடாது என்றே எண்ணுகிறேன். ஆனால் இவைகளை நீங்கள் நன்றாய்
யோசித்துப்பாருங்கள். பழய காரியங்கள் பயனளிக்காததாலேயே தான் இதைப்பற்றி பேசுகிறேன்.
உங்கள் புத்தியைக்கொண்டு ஆராய்ந்து பார்த்து உங்களுக்கு சரியென்று பட்டத்தைச் செய்யுங்கள்.
நான் சொல்லுவது குற்றமாகவும் துவேஷமாகவும் இருந்தாலும் இருக்கலாம்.
...
... ...
தோழர்களே! இன்றைய மகாநாடு முடிவடைந்துவிட்டது என்றாலும்
நிகழ்ச்சிக்குறிப்பில் எனது முடிவுரை பாக்கி இருக்கிறது இனிநான் என்ன சொல்வது என்பது
விளங்கவில்லை.
...
... ...
தோழர் கேளப்பன் அவர்களே கடவுள் உண்டோ இல்லையோ தனக்கு
தெரியாது என்று சொன்னார். இந்தமாதிரி சந்தேகப்பட்ட காரியத்துக்கு எவ்வளவு செலவு, மெனக்கேடு,
கஷ்டம் என்பதை யோசித்துப் பாருங்கள். கடவுள் இருப்பதாக வைத்துக்கொண்டாலும் அது எல்லோருக்கும்
ஒன்று போல் இல்லாமல் மக்களை பாழ்படுத்துகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம், ஒவ்வொரு
குணம், ஒவ்வொரு தோற்றம் சொல்லுகிறார்கள். இந்த மாதிரி இப்போது ஏதாவது ஒரு வஸ்துவைப்பற்றி
ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி சொன்னால் அதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா? அல்லது அந்த வஸ்த்துவை
நம்புவீர்களா? எந்தக் கடவுளுக்கு எப்படிப்பட்ட தத்துவார்த்தம் சொன்னாலும் அதனால் ஏற்படுகிற
பயன் என்ன என்பதும், அதில் என்ன வித்தியாசம் என்பதும் யோசிக்க வேண்டிய காரியமாகும்.
கோவில்களை எல்லாம் இடித்துவிடுவதால் எந்தக் கடவுளுக்கும்
எவ்வித நஷ்டமும் ஏற்பட்டு விடாது. ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம். அனாவசியச் செலவும்,
மதியீனமும் விலகிவிடும். நீங்கள் எந்த முறையில்
கடவுளை நிர்ணயத்தாலும் எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும்
பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர மூடநம்பிக்கை கடவுளைவிட குருட்டுப் பழக்க
மதத்தைவிட சீர்திருத்த கடவுளும் பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாய் சாதித்துவிடப்
போவதில்லை.
...
ஆகவே எந்த வழியில் எந்த மாதிரியில் எவ்வளவு நல்ல
முறையில் கடவுளையும், மதத்தையும், வேதத்தையும் சிருஷ்டித்துக் கொண்டாலும் அது மனித
சமூகப் பெரும்பான்மை மக்களுக்கு ஆபத்தையும், கேட்டையும் பிரிவினையும் முரட்டுத்தனத்தையும்
குரோதத்தையும் அடிமைத்தனத்தையும் உண்டாக்கியே தீரும். இதுவே இன்றைய எல்லா மதத்தினுடையவும்
அனுபோகம்! பிரத்தியட்ச அனுபோகம்!
ஆதலால், கடவுள், மதம், வேதம் என்கின்றதான கற்பனைகளை
ஒழிப்பதும் அழிப்பதுந்தான் மனிதனுக்கு உண்மையான விடுதலையே ஒழிய மனிதனை கடவுள் உணர்ச்சியில்
புகுத்தி மத வெறியில் ஆழ்த்தி வேதத்திற்கு அடிமையாக்கி கல்லில் முட்டிக் கொள்ள கோவிலுக்குள்
தள்ளுவது மிகவும் மோசமும், கெடுதியுமான காரியமாகும்.”
(குடிஅரசு- சொற்பொழிவு- 26-02-1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 75-- 77—80)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக