சனி, 22 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 20:-


வேலைத்திட்டக் கூட்ட முடிவு – தந்தை பெரியார்

(பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு சுயமரியாதை சமதர்மக் கட்சித் திட்டம் ஏற்கப்படுகிறது.)

“கூட்டமானது இரண்டு நாளில் நான்கு தடவை கூடி சுமார் 20 மணி நேரம் நடந்தது. பல விஷயங்களைப் பற்றியும் பலமான வாக்கு வாதங்களும் நடந்தது என்றாலும் முடிவில் ஏகமனதாகவே தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

முதலாவது சுயமரியாதை இயக்கத்தின் லக்ஷியம் என்பது. அதாவது சென்றவாரக் குடியரசில் “சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான கொள்கை" என்ற தலைப்பில் பிரசுரித்த விஷயமாகும். இது பலருக்கு ஒரு பெரிய உணர்ச்சியையும், திடுக்கிடக்கூடிய நிலையையும் உண்டாக்கி விட்டதாகத் தெரிகிறது. அதில் சிலருக்கு அந்த கொள்கையே அதிருப்தியைக் கொடுக்கக்கூடியதாய் இருந்ததாகவும் காணப்பட்டது என்பதோடு மாத்திர மல்லாமல், சிலருக்கு அந்த லக்ஷியத்தை அப்படியே ஒப்புக்கொள்ளு கின்றவர்களுக்கும் கூட அதை வெளியில் சொல்லுவது என்பது அதிக பயத்தைக் கொடுத்திருக்கிறதாய்த் தெரிகிறது. எதனாவென்றால் இதைச் சொன்னால் அரசாங்கத்தார் பிடித்து 10 அல்லது 20 வருஷம் தண்டித்து விடுவார்களோ என்று கருதினதினாலேயாகும்.

ஆகவே, எது எப்படி இருந்த போதிலும் சரி, அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை, அதன் சாதக பாதகங்களையும் அதனால் ஏற்படும் பயன்களையும் நன்றாய் விவாதித்து ஆராய்ந்து அறிந்த பின்பே அது சரியா தப்பா என்று முடிவு கட்ட வேண்டும் என்பது தான் நமது கடமையாய் இருந்தது. அந்தப்படியே நமது அழைப்புக்கு இணங்கி விஜயம் செய்து இருந்த சுமார் 200 தோழர்களும் நன்றாய் இரண்டு நாளும் விவாதித்து பிறகே ஏகமனதாய் ஒரு முடிவுக்கு வந்தார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

அதுபோலவே சு.ம. இயக்க வேலைத் திட்டம் என்கின்ற விஷயமும் மேற்கண்டது போன்றவையாய் இல்லாவிட்டாலும் அதுவும் ஓரளவுக்கு பெருத்த விவாதத்தைக் கிளப்பி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். எப்படி என்றால் சு.ம. இயக்கம் அரசியலில் தலையிட்டால் இயக்கத்திற்கு கேடுவந்து விடுமென்றும் பலருக்கு அது அசௌகரியமாய் இருக்குமென்றும் சொல்லப்பட்டது. ஆனபோதிலும் சட்டசபை முதலிய ஸ்தாபனங்களை கைப்பற்ற முயற்சி செய்ய வேண்டும் என்றும் அதனால் குறைந்த பட்சம் என்று சற்று அதிகமான பிரசாரம் செய்யவாவது இடமேற்படும் என்றும் கருதி ஏகமனதாய்த் தீர்மானிக்கப் பட்டு விட்டது.

லக்ஷியம்

நிற்க, சுயமரியாதை இயக்க லக்ஷியம் பொது உடமை இயக்க லக்ஷியமாய் இருக்கின்றதென்றும், அதற்கு அரசாங்க அடக்குமுறை கொடுமை ஏற்படுமென்றும், அதனால் இயக்கமே அழிவுர வேண்டி வரும் என்றும் பலர் சொல்லக் கேள்க்கிறோம். பலர் பத்திரிகைகளிலும் பிரசங்கங்களிலும் அந்தப்படி குறிப்பிட்டு வருவதையும் பார்க்கின்றோம். இதற்கு நாம் முதலாவதாக கூறும் பதில் என்னவென்றால் அவர்கள் கூறுகின்றபடியே பொது உடமைக் கொள்கையே சு.ம. கொள்கை என்று ஒத்துக் கொண்டே பார்ப்போமானாலும் அதனால் ஏற்படும் நஷ்டமென்ன? கஷ்டமென்ன? என்றுதான் கேள்க்கின்றோம்.

நாம் என்றையத் தினம் சுயமரியாதை இயக்கம் என்று ஆரம்பித்தோமோ அன்று முதலேதான் இவ்வியக்கத்தைப்பற்றி பவரால் இது பொதுவுடமை இயக்கமென்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றது என்பதோடு சு.ம. இயக்கத்தின் முடிவான லட்சியங்களை எடுத்துச்சொல்லும் போதெல்லாம் நாமும் மேல் கண்ட தத்துவத்தையே தான் சொல்லி வந்திருக் கிறோம். ஆதலால் நாம் புதிதாக எதையும் கொண்டு வந்து புகுத்தி விட வில்லை.
… … …
…நமது சுயமரியாதை இயக்க லக்ஷியம் உலக லக்ஷியமாய்  உள்ளதை கைகொண்டு இருக்கிறது. இந்த லக்ஷியத்தால் ஒன்றும் ஆபத்து வந்து விடப்போவதில்லை. அப்படி ஏதாவது ஒரு ஆபத்து வருவதாய் இருந்தாலும் அந்த ஆபத்தானது மக்கள் சமூகத்தினிடம் உண்மையான கவலை உள்ளவனுக்கு மேல் கண்ட ஆட்சியின் கீழ் வாழ்ந்து வருவதை விட கடினமானதாக இருக்காது. ஒரு சமயம் யாருக்குக் கடினமானதாக இருக்கும் என்று யோசிப்போமானால் சோம்பேரிகளுக்கும் ஊரார் உழைப்பில் வாழ்கின்றவர்களுக்கும், முதலாளிகளுக்கும், ஜமீன்தாரர்களுக்கும், ராஜாக்களுக்கும் மகாராஜாக்களுக்கும் கடினமாய் இருக்கலாம்.

அதனால் நமக்கு என்ன? என்றையத்தினம் நாம் அந்த சமூகங்கள் பெரும்பான்மையான மனித சமூகத்தின் இன்ப வாழ்வுக்கும் சுதந்திர வாழ்வுக்கும் இடையூறாய் இருக்கின்றது என்று கருதி விட்டோமோ அன்றே அவற்றின் நாசகாலத்தை எதிர்பார்க்க வேண்டியவர்களாகவும் அதற்கு நம்மால் ஆன எல்லா காரியத்தையும் செய்து தீரவேண்டியவர்களாகவும் ஆகிவிட்டோம்.”
(குடி அரசு - தலையங்கம் – 01-01-1933)
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 38—40 -43-44)
                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக