வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 11:-


பெண்கள் சொத்துரிமை
(குடிஅரசு – துணைத் தலையங்கம்- 26-10-1930)

(பெண்களுக்கான சொத்துரிமையின் அவசியத்தை இதில் பெரியார் கூறுகிறார். மேலும் பெண்களின் சுதந்திரத்தை சொத்துரிமையின் அடிப்படையில் வலியுறுத்துகிறார். ஆனால் தொழிலாளர் என்று வரும்போது பொருளாதாரப் பலனால் சுதந்திரம் கிடைத்திடாது, அவர்களிடம் காணும் பிறப்பால் உயர்வு தாழ்வு, மத மூட நம்பிக்கைகள் ஆகியவை மறைந்த பிறகே பொளாதார மேம்பாடு அடைதல் வேண்டும் என்பதாகப் பெரியார் கூறுகிறார். பெண்கள் மீது காட்டும் பெரியாரின் கரிசனம், ஏன் தொழிலாளர்கள் மீது வரவில்லை என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஆண்களைவிடப் பெண்களே மத மூட நம்பிக்கையில் அதிகப் பணத்தைச் செலவு செய்பவராக இருக்கின்றனர்.

பெரியார் கூறுவதையே ஒரு முறை பார்ப்போம். “.. பிறப்பில் உயர்வு என்கிற கொடுமையை ஒழித்தவுடன் பணத்தால் உயர்வு என்கிற கொடுமையை ஒழிக்கும் வேலைதான் பொதுநல சேவையாக ஏற்பட வேண்டும் என்பதுதான் நமது அபிப்பிராயம். அதுதான் இயற்கையாகும் (கோயமுத்தூர் தொழிலாளர் வேலை நிறுத்தம் - குடிஅரசு- 04-09-1927))

“பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் அல்ல வென்றும் அவர்களும் ஆண்களைப் போலவே சுதந்திரமாய் இருக்கத் தகுந்தவர்கள் என்றும் நாம் முதலில் தீர்மானம் செய்து கொண்டோமேயானால் பிறகு மேல் கண்ட சீர்திருத்த விஷயங்களும் மற்றும் ஒழுக்க சம்மந்தமான தென்றும் கட்டுப் பாட்டுக்காக இருக்க வேண்டும் என்று சொல்லப்படும் கொள்கைகளின் யோக்கியதைகள் எல்லாம் தானாகவே விளங்கிவிடும். அந்த எண்ணம் ஆண்களுக்குச் சரியாக உண்டாகாததினாலேயே பெண்கள் சுதந்திரம் என்னும் விஷயங்களில் எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்கள் பெண்களுக்குத் தயவு செய்து பிச்சை கொடுப்பது போலவே கருதுகின்றார்கள்.

உண்மையான சுதந்திரம் பெண்களுக்கு ஏற்பட வேண்டுமானால் வாழ்வில் அதாவது ஒரு பெண்ணும் ஆணும் வாழ்க்கைத் துணைகளாய் வாழும் வாழ்க்கையில் இருவருக்கும் ஒழுக்கத்திலும் கட்டுப்பாடுகளிலும் ஒரேமாதிரியான ஒழுக்கமும் கட்டுப்பாடும் இருக்கும்படி வாழ்க்கையையும் அது சம்பந்தமான அரசியல் சட்டங்களையும் திருத்திக் கொண்டாலொழிய உண்மையான சுதந்திரம் ஏற்படவே முடியாது. மக்கள் மனதிலும் “இயற்கையிலேயே பெண்கள் பலவினர்களாகவும் ஆண்களுடைய சம்ரக்ஷணையிலும் இருக்கும் படியாக படைக்கப்பட்டிருக்கின்றார்கள்" என்கின்ற உணர்ச்சி அடியோடு மாறியுமாக வேண்டும். அந்த வுணர்ச்சி ஆண்களுக்கு மாத்திரமல்லாமல் இன்றைய நிலை பெண்களுக்கே பெரிதும் முதலில் மாற வேண்டியதாக இருக்கின்றது.

ஏனெனில் அவர்களை அழுத்தி அடிமைப்படுத்திய கொடுமையான பலமானது பெண்கள் தாங்கள் மெல்லியலார்கள் என்றும், ஏதாவது ஒரு ஆணின் காப்பில் இருக்க வேண்டியவர்களென்றும் தங்களையே கருதிக் கொள்ளும்படி செய்து விட்டது. ஆதலால் அது முதலில் மாற வேண்டியது அவசியமாகின்றது.

ஆகவே அவர்களது சுதந்திரத்திற்கு சொத்துரிமை இல்லாததோடு தங்களின் அடிமையுணர்ச்சியும் பயமும் காரணமாயிருப்பதால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு துறையிலும் அவ்வடிமை உணர்ச்சியும் பயமும் அடியோடு மறையும்படியாகவும் பார்த்துக் கொள்ள வேண்டியது பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவர்களின் முக்கிய கடமை என்பதை ஞாபகப் படுத்துகின்றோம்.
 (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I - பக்- 102-103)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக