செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

2) நாத்திகம் தேவை – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

30.2.1 நாம் இன்றைய நிலையில் இருந்து ஒரு சிறு மாறுதல் செய்ய வேண்டுமானாலும் நமது எதிரிகளின் ஆயுதமாகிய நாத்திகத்திற்குப் பயப்படாமல், ஆமாம், நாத்திகன்தான் என்று சொல்லிக் கொண்டு, அந்த நாத்திகத்தையே நாட்டில் எங்கும், மூலை முடுக்குகளில்கூடப் பரப்ப நாம் துணிய வேண்டும். அப்போதுதான் நமது எண்ணம் ஈடேற முடியும். ஆதலால், நாம் செய்ய வேண்டியது முக்கியமாய் நாத்திகப் பிரச்சாரமே யாகும்.

30.2.2 உண்மையாகச் சாதிப் பேதத்தையும், சாதி இழி வையும், வருணாச்சிரமத் தர்ம மதத்தையும், சூத்திரத் தன்மை யையும் ஒழிக்க வேண்டுமானால், எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்க ளாகாமல் முடியாது என்பதை ஞாபத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

30.2.3 நாத்திகத்திற்குப் பயந்தவனால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகத்தினால்தான் முடியும். நாத்திக மென் பதற்கே சமதர்மம் என்று பெயர்.

30.2.4 நாத்திகமும், சாத்திர விரோதமும், தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்ய முடியவே முடியாது.

30.2.5 மூட நம்பிக்கைகளை விடுத்துச் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்கி, அனைவரும் நாத்திகராக வேண்டியது அவசியம்.

30.2.6 இன்றைய தினம் உலகில் பாதி மக்களுக்கு மேல் நாத்திகர்கள். அவர்கள் எல்லாம் கடவுளை நம்பாததினால் என்ன கெட்டுவிட்டார்கள்? நம் நாட்டைப் பொறுத்தவரையில் மற்ற நாட்டுக்காரன் அடைந்துள்ள வளர்ச்சியை எட்ட முடியாததற்கே காரணம் நம்மிடையே நிலவி வருகின்ற கடவுள், மதம், மூட நம்பிக்கை எண்ணங்களும் அதனாலே ஏற்பட்டுவிட்ட சிந்தனா சக்தி வளர்ச்சி தடைப்படுவதுமே யாகும். மனிதன் இவற்றை மறந்து சிந்திக்க ஆரம்பித்தால் நாமும் மற்ற நாட்டுக்காரனை விட வளர்ச்சியில் மிஞ்சி விடுவோம்.

நாத்திகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக