பொதுவுடைமைக்கும் சுயராஜ்யத்துக்கும் சம்மந்தமில்லை
(பொதுவுடைமையை ஒரு கூட்டுக் குடும்பமாகவே பெரியார் புரிந்திருக்கிறார்.
இன்றைக்குக் காணப்படும் விஞ்ஞான வழிப்பட்ட கம்யூனிசப் புரிதல் பெரியாருக்கு இருக்கும்
என்று எதிர்பார்க்க முடியாது என்பதை உண்மையே. இந்த உணைமைபடியே அவரது கருத்தை இன்று
புரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றாமல் சோஷலிசப் பொருளாதாரத்தை
நிர்மாணிக்க முடியாது. பெரியார் கூறுவது போல் சோஷலிசக் கொள்கைப்படி யார்வேண்டுமானாலும்
ஆளும்படி கம்யூனிசம் கருதவில்லை. பாட்டாளி
வர்க்க சர்வாதிகாரத்தையே விஞ்ஞானக் கம்யூனிசம் கோருகிறது. பொருளாதாரத்தை மட்டும்
கம்யூனிசம் முக்கியத்துவப்படுத்துவதாகப் பெரியார் கருதிவிட்டார். கம்யூனிசத்தில் காணப்படும்
பலதுறையை அவர் அறிந்திடவில்லை. வர்க்கமாக பிரிந்து கிடப்பதை முதலாளித்துவமே ஏற்றுக்
கொண்டுள்ளது, ஆனால் இறுதியில் புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க சர்வாதகார அரசு நிறுவப்படும்
என்பதை முதலாளிகள் ஏற்றுக் கொள்வதில்லை
வர்க்கப் போராட்டத்தின் வெற்றி பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சியை
அமைப்பதிலேயே இருக்கிறது என்கிறது விஞ்ஞானக் கம்யூனிசம்.)
தந்தை
பெரியார்:-
சுயராஜ்யம் என்பது அரசியலைப்பொருத்தது. அது எந்த
தேசத்தை, யார் ஆளுகிறது என்பதையே முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுடமை என்பது பொருளாதாரத்தையே
முக்கியமாய் கொண்டதாகும். பொதுவுடமைக் கொள்கையைப்பற்றிய விஷயத்தில் ஆட்சிசெய்பவர்கள்
யார் என்பதைப் பற்றியோ, எந்த தேசம் ஆதிக்கமுள்ளதாய் இருக்க வேண்டு மென்று எல்லை கட்டுவதிலோ
பிரவேசிக்கவேண்டிய அவசியமே இல்லை. பொது உடமை
என்பது மேல் குறிப்பிட்டபடி வெறும் பொருளாதாரப் பிரச்சினையே ஆகும். அதுவொரு கணக்குப்
பிரச்சினை என்றும் சொல்லலாம். உலகத்தை ஒரு குடும்பமாக்கி உலக மக்களை ஒரு குடும்பமக்களாக்கி
உலக செல்வத்தையும் சுக துக்கதையும் அக்குடும்பத்துக்குப் பொதுவாக்கி அக்குடும்ப மக்கள்
எல்லோரும் அக்குடும்ப சொத்துக்களை சரிசமமாய் அனுபவிக்கும்படி செய்யும்முறையே பொது உடமைத்
தத்துவமாகும்.
இதனால் யாருக்கும் ஏற்றத்தாழ்வோ ஜாஸ்தி கம்மியோ
இல்லாமல் இருக்கும் என்கின்ற முடிவின்பேரிலும் உலகவாழ்க்கையில் மக்கள் உயர்வு தாழ்வும்
ஜாஸ்தி கம்மியும் அனுபவிப்பது மனித இயற்கை என்றும் இந்தப்படி இருக்கவே மனிதன் ஏற்பட்டவன்
என்றும் இந்தப்படியான வித்தியாச வாழ்வு அமைப்பு அவனவன் முன்ஜன்ம கர்மப்படியும் கடவுள்
சித்தப்படியும் ஏற்பட்டதென்றும் சொல்லும் கொள்கையை அடியோடு தப்பு என்கின்ற முடிவின்பேரிலும்
இப்பொதுவுடமைக் கொள்கை கண்டுபிடிக்கப்பட்டு அது சில இடங்களில் அனுபவத்தில் இருந்து
வருகின்றது.
ஆகையால் இக்கொள்கையை வற்புறுத்துகின்றவர்கள் இன்னார்
ஆள வேண்டும் என்கின்ற பிடிவாதம் இல்லாமல், இன்ன கொள்கையின் மீது ஆளப்படவேண்டும் என்கின்ற
பிடிவாதத்துடன் கிளர்ச்சியோ புரட்சியோ செய்து புரட்சி ஏற்படுத்தவேண்டியது வாலிபர் கடமையாகும்.
(குடிஅரசு - கட்டுரை - 17.09.1933)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக