திங்கள், 3 பிப்ரவரி, 2020

1) தொழிலாளி – தந்தை பெரியார்


(முனைவர் மா.நன்னன் தொகுத்தவை- நூலின் “பெயர் பெரியார் கணினி”)

28.1.1 தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோ ரெல்லாம் தொழிலாளிக ளல்ல. அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள் தான். தொழிலாளி என்பவன் நாட்டின் நன்மைக்கான ஒரு தொழிலைக் கற்று அத் தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து, அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும் படியான முறையில் தொழில் செய்பவன்தான்.

28.1.2 ஏவலாள்கள் அதாவது எவ்விதக் கூலியோ சம்பளமோ பேசாமல் இட்ட வேலையைச் செய்துவிட்டுக் கொடுத்த கூலியைப் பெற்றுக் கொண்டு கிடைத்ததற்குள்ளாகவே வாழ்ந்து திருப்தியடைய வேண்டியவர்கள்.

28.1.3 எங்கள் தொண்டு யாவும் தொழிலாளர்களுக் காகவேதான். நாங்களும் தொழிலாளிகள் தான். ஆகவே வாய்ப் பினால் மாத்திரம் தொழிலாளிக ளல்லாமல் பிறவியினால், சட்டத்தினால், சாத்திரங்களால், கடவுள்களால், கடவுள் சிருட்டியினால் நாங்கள் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்ட தொழிலாளிகள்தான் திராவிடர்கள்.

28.1.4 எவனெவன் தனது உழைப்பை வயிற்றுச் சோற்றுக்கு மட்டும் கொடுக்கின்றானோ அவனெல்லாம் கூலியாள். வயிற்றுச் சோற்றுக்கு வசதி வைத்துக் கொண்டு மேலும் உழைப்பவன் முதலாளி.

28.1.5 எவன் ஒருவன் ஒரு தொழிலைச் செய்து அது எவ்வளவு அற்புதமானதாய், அதிசயமானதாய், அவசியமானதாய், மதிப்புக் கூற முடியாததாய் இருந்தாலும் அவனுடைய அரிய முயற்சியின் பயனாய்த் தொழில் திறத்தின் பயனாய், உழைப்பின் பயனாய் அதன் முழுப் பயனையும் பெற முடியாதவனாய் அதன் மீது எந்தவிதமான உரிமையும் இல்லாதவனாய், இவ்வளவுக்கும் பிரதி பிரயோசனமாய் அவனது அன்றாட வாழ்வுக்கு ஏற்ற கூலி மாத்திரம் பெற்றுக் கொண்டு மேலும் தொழில் செய்வதற்கு என்றே உயிர் வாழ்பவன்தான் கூலியாள் எனப்படுவான்.

28.1.6 இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காகவே, பிறருக்கு அடிமையாய் உழைப்பதற்காகவே பிறந்திருக்கிறானே யொழியச் சுகப்படுவதற் கில்லை என்றும், ஆதலால் அவன் வேலை செய்வதற்காக ஒரு தொழில் கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும் என்றுதான் ஏற்படுகின்றது. இதுவும் தன் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூடக் கிடைக்க முடியாத கூலிக்கு முழு நேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படுகிறது.

28.1.7 உண்மையிலேயே இன்று யாரெல்லாம் தொழிலாளி மக்களாக இருக்கிறார்கள் என்றால் யார் சாதி, மதம், கடவுள், சாத்திரம் என்பதன் பேரால் சூத்திர மக்களாய்க் கீழ்ச் சாதிப் பிறவிகளாய் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் தானே தொழிலாளர்களாக இருக்கின்றார்கள்.

28.1.8 தொழிலாளியின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டவன்தான் முதலாளி, தொழிலாளி இன்றேல் முதலாளி யின் சுக வாழ்க்கை கிடையாது. எவனொருவன் தன் உடலு ழைப்பைத் தன்னுடைய வாழ்க்கைக்கு மாத்திரம் விற்கிறானோ அவன் தான் தொழிலாளி,

28.1.9 தொழிலாளியும் கூலிக்காரனும் தின வாழ்க்கைச் செலவையேதான் லட்சியமாக வைத்துப் பணம் தேடுகிறானே ஒழியப் பணம் மீத்து வைப்பதை லட்சியமாகக் கொள்வதே இல்லை. அதற்காகக் கவலைப்படுவதே இல்லை. சில சமயங்களில் அதிகக் கூலியோ அதிக வருமானமோ கிடைத்துவிட்டாலும் அதற்கும் உடனே செலவுத் திட்டம் போட்டுக் கொள்கிறான்.

28.1.10 தொழிலாளி என்பவன் தன்னுடைய உடல் உழைப்பை வயிற்றுப் பிழைப்பிற்காக விற்பவன். தன்னுடைய உழைப்பைத் தன்னுடைய இச்சைப்படித் தன் காரியங்களுக் கேற்ற வசதிப்படி நடத்துபவன் முதலாளி.

28.1.11 தொழிலாளி என்றால் கீழான சாதி என்றும் முதலாளி என்றால் மேல் சாதி என்றும்தான் அர்த்தம். பாடுபடுகின்ற தொழிலாளி கீழ்ச் சாதி; பாடுபடாத முதலாளி மேல் சாதி, தொழிலாளி உழைப்பின் பயனால் வரும் பணத்தைக் கொண்டு சுக போகமாய் வாழும் முதலாளி மேல் சாதி; அதாவது சூத்திரன் பிராமணன் என்பது மாதிரியான நிலைமை. சூத்திரன் எவ்வளவுதான் உயர்ந்தவனாகவும், திறமைசாலியாகவும் புத்திக் கூர்மை யுள்ளவனாகவும் இருந்தாலும் சூத்திரன் சூத்திரன்தான். அவன் மேல் சாதியாக - பார்ப்பானாக ஆக முடியாது. அது போல எவ்வளவுதான் இழி குணம் இழி நிலை உடைய பார்ப்பானாக இருந்தாலும் அவன் மேல் சாதி மேல் சாதிதான்; பார்ப்பான்தான். அது போல் இதிலே அந்த முறை இருக்கிறது.

28.1.12 நம் நாட்டுத் தொழிலாளர்கள், தாங்கள் செய்வதன் பயனை உணராமல், தங்கள் நிலைமையையும் உணராமல் வஞ்சகர்களிடம் சிக்கித் தலையெடுக்க முடியாமல் தாழ்ந்து கிடக்கிறார்கள்.

தொழிலாளர் – தந்தை பெரியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக