செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சுயராஜ்யமா? சுயமரியாதையா? - தந்தை பெரியார்


(சுயராஜ்யத்தைவிட சுயமரியாதையே பிராதானம்)

“இக்காலத்தில் நானும் இந்தப் பார்ப்பனர்களை நம்பி அவர்கள் பின்னால் திரிந்து கொண்டு ஜஸ்டிஸ் கட்சியார் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொன்னதுண்டு. ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிரிடையாக வேலை செய்த காலமுமுண்டு. அப்படியிருக்க அவர்களைப்பற்றி நான் ஏன் இப்பொழுது குறை கூறுகிறேன். அவர்களால் எனக்கு ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் அவர்களுடைய அந்தரங்கத்தைக் கூடவேயிருந்து பார்த்ததில் அவர்களை விட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஆயிரம் மடங்கு யோக்கியர்களென்பதே எனது அபிப்பிராயம். பார்ப்பனர்கள் தங்கள் நன்மைக்கும் பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்கும் நம்மை உபயோகப் படுத்திக் கொண்டார்களென்பதையும், இவர்களால் என்றைக்கும் நமது நாட்டிற்கு சுயராஜ்யம் வராதென்பதையும் நன்றாய் நான் அறிந்து கொண்டேன்.

சுயராஜ்யத்தை விட சுயமரியாதை தான் இப்போது எனக்குப் பெரிதா யிருக்கிறது. நமது சமூகத்திற்கு 'சூத்திரன்' என்கிற பெயர் இனி அரை நாழி கையும் இருக்கக்கூடாது. நம்மை அடிமை என்றும் வைப்பாட்டி மகன் என்றும் சண்டையில் ஜெயித்த கைதிகளென்றும் பொருள்கள் கொண்ட 'சூத்திரன்' என்கிற பெயரால் அழைப்பதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆதலால் சுயமதிப்பையே பிரதானமாகக் கருதுவது ஒருக்காலும் குற்றமாகாது. இம்மாதிரி ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் கொடுமைப்படுத்தியும் தாழ்மைப்படுத்தியும் தீண்டாதாராக்கியும் நடத்திக் கொண்டிருப்பதை விட மனதில் லாதிருக்கும் போது அந்த தேசம் எப்படி சுயராஜ்யம் அடைய முடியும்?”
(சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம்)
 (குடிஅரசு 12-08-1926)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக