சனி, 15 பிப்ரவரி, 2020

பெரியாருடன் நேர்காணல்- 1972


(பெரியார் 1972 ஆம் ஆண்டுக் கொடுத்த இந்தப் பேட்டியில் அவரின் பெரும்பான்மையான கலகக்குரல் வெளிப்பட்டுள்ளது. தமிழர்களின் இழிவுநிலையைப் போக்குவதே தமது கொள்கையின் முக்கிய அம்சம் என்கிறார். தமது நோக்கத்தை வெளிப்படுத்துவதில் இருந்தே தமது கலகத்தைத் தொடங்குகிறார். மொழிப் பற்று, தேசப் பற்று ஆகியவற்றையும் அவரது கலகக்குரல் எதிர்க்கிறது. பொருளாதார வேறுபாடுகள் மனிதனை அடிமைப்படுத்துகிறது என்பதை மாயை என்கிறார். இழிநிலைக்குக் கொடுத்த முதன்மை பெரியார் பொருளாதாரத்திற்குக் கொடுக்கவில்லை. பெண்கள் சுதந்திரம் பெற, கல்யாணமே வேண்டாம் என்கிறார். இந்தக் கலகக்குரலோடு பொருளாதாரச் சமத்துவம் வந்தால் சாதியும் மத உணர்வுகளும் மறையாது என்கிறார். தம் வாழ்வில் மேற்கொண்ட பணியில் திருப்தி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கும் பெரியார் பதிலளித்துள்ளார். இந்த நேர்காணல் பெரியாரின் இறுதிகாலத்தில் எடுக்கப்பட்டதால் அவரின் இறுதிகாலக் கண்ணோட்டம் எதிலெல்லாம் உறுதியாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.)

("கணையாழி”, இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி, 27-10-1972)

கணையாழி: நீங்கள் பல காலமாகச் சில கொள்கைகளைச் சொல்லி வந்திருக்கிறீர்கள். இந்த நேரத்தில், உங்கள் இயக்கத்தின் வரலாற்றை நினைத்துப் பார்க்கும்போது எந்த அளவுக்கு வெற்றியடைந்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

ஈ.வெ.ரா.: என்னாலே சொல்லப்பட்ட கொள்கைகள் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் எதிர்ப்புக் குறைந்து, சகிப்புத் தன்மை நல்ல அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்ப எல்லாரும் கேட்டுக்கிறாங்க. ஓரளவுக்கு நடைமுறையில் வந்திருக்கு. துவக்கிறபோது எதிர்ப்பு அதிகம். இப்ப இல்லை .

கணையாழி: உங்கள் இயக்கக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்?

ஈ.வெ.ரா.: சமுதாயத்தில் தமிழருக்கு உள்ள இழிவு, இழிநிலை – இதுதான் நான் தொடங்கியதற்குக் காரணம். இந்த இழிநிலைக்குப் பரிகாரம் செய்ய முயற்சி செய்தபோது, முதலாவதாகக் கடவுள், மதம், சாஸ்திரம், தேஷம் (தேசம்), மொழி (மொழின்னா அதிலே இலக்கியமும் இருக்கு) - இதுமேலே பற்று இருக்கக்கூடாது, அப்படீன்னு சொன்னேன்.

கணையாழி: ஆனால், மொழிப்பற்று நிறைய வளர்ந்திருக்கிறதே?

ஈ.வெ.ரா.: அது ஒரு தப்பு. பேப்பர்க்காரன் பிழைக்கிறதுக்குன்னு செய்யறான். அது ஒண்ணு. தமிழைச் சொன்னா மக்களைக் கவரலாம்ங்கிறது ஒண்ணு.

கணையாழி: தேசப்பற்றுக்கூடத் தப்பா?

ஈ.வெ.ரா.: எந்தத் தேசத்துக்காரனாயிருந்தால் என்ன? நமக்கு உதவி செய்யறவன், நம்மை முன்னேத்துகிறவன் இருந்தா பரவாயில்லை. துலுக்கன் வந்தாக்கூடத் தேவலையே.

கணையாழி: உங்கள் இயக்கத்தின் முக்கிய அம்சங்கள் என்று சிலவற்றைச் சொன்னீர்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அகலவேண்டும் என்பது முக்கியமில்லையா?

ஈ.வெ.ரா.: பொருளாதாரம் ஒரு மாயை. அரசாங்கம் எவ்வளவு அனுமதிக்கிறதோ அவ்வளவுதானே பொருளாதாரம். இப்ப அஞ்சு இலட்சத்துக்கு மேல் சொத்து கூடாது என்று அரசாங்கம் சொல்லுது. அவ்வளவுதான். அப்பறம் மூணு இலட்சம்னு சொன்னா அவ்வளவுதானே. பொருளாதாரம் அனுமதியிலே இருப்பது.

கணையாழி: மதம், கடவுள் போன்ற விஷயங்களிலேயும் அரசாங்கம் தலையிட முடியாதா?

ஈ.வெ.ரா.: அரசாங்கத்துக்குச் சக்தியில்லே , ஒரு சின்னக் காரியம் பார்த்துக்கலாமே, சாமியை எவன் வேணும்னாலும் தொடலாம், பூசை பண்ணலாம்னு சட்டம் கொண்டுவந்தாங்க. சுப்ரீம் கோர்ட்டிலே பார்ப்பான் மட்டும்தான் தொடலாம்னு சொல்லிவிட்டானே.

கணையாழி: பொருளாதார வேறுபாடுகள், வித்தியாசங்கள் மனிதனை அடிமைப் படுத்தவில்லையா? அவனை அழுத்தி வைக்கவில்லையா?

ஈ.வெ.ரா.: இதெல்லாம் மாயை, எந்தப் பணக்காரன் ஒன்னாச் சேர்ந்தான்? எந்தப் பணக்காரனுக்குச் சிநேகிதன் இருக்கான்? பணக்காரனுக்குப் பேப்பர் எங்கே இருக்கு? பார்ப்பானுக்குத்தான் பேப்பர் இருக்கு.

கணையாழி: பொருளாதாரச் சமத்துவம் வேண்டும் என்று சொல்லப்படுவதையும், அதற்கானத் திட்டங்களையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

ஈ.வெ.ரா.: பார்க்கப்போனால் நான்தான் இதையெல்லாம் ஆரம்பிச்சேன். இரஷ்யாவிலிருந்து வந்த பின்னாலே நான் மாநாடு போட்டேன். அரசர் ஒழிப்பு, ஜமீன்தார் ஒழிப்பு, லேவாதேவிக்காரர் ஒழிப்பு இதுக்கெல்லாம் நான்தான் மாநாடு போட்டுச் சொன்னேன்.

கணையாழி: இரஷ்யாவிலே பொருளாதாரச் சமத்துவம் ஏற்பட்டதால் நீங்கள் சொல்லும் கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய துறைகளிலும் மாறுதல்கள் தோன்றவில்லையா?

ஈ.வெ.ரா.: இரஷ்யாவிலே முதல்லே கோயிலை இடிச்சான்; பாதிரியாரைக் கொன்னான்; பைபிளை நெருப்பில் போட்டான். இதெல்லாம் செஞ்சப்புறம்தான் பொருளாதாரச் சமத்துவம் ஏற்பட்டது.

கணையாழி: பிராமணர் அல்லாதவர்களிடையே சாதி வெறி இருக்கிறதே? தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறோமே, அவர்கள் சாதி உணர்ச்சியோடுதானே இருக்கிறார்கள்?

ஈ.வெ.ரா.: அவனவன் ஒஸ்தின்னு சொல்லிக்கிறதுக்குச் சாதியைப் புடிச்சுக்கிறான். நாடார் வீட்டிலே சாப்பிடறது தியாகம்னு நினைக்கிறாங்க. பள்ளன் பறையனை ஏத்துக்க மாட்டேங்கிறானே? மாரியாத்தா கோயில்லே எல்லோரும் ஆடுவாங்க. மாரியாத்தாவுக்குப் பூச்சூட்டுன்னா, சக்கிலியன் ஆடினா பள்ளன் வரமாட்டான். பள்ளன் ஆடினா பறையன் வரமாட்டான்.

கணையாழி: நீங்கள் சொல்லும் வித்தியாசங்கள் போகவேண்டுமென்றால் நடைமுறையில் அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்று சொல்வீர்களா?

ஈ.வெ.ரா.: சாதி கிடையாதுன்னு அரசாங்கம் சட்டம் போடணும். மதத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று அறிவிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களைச் செய்தால் சமுதாயம் மாறிவிடும்னு சொல்லலே. நம்முடைய பிரச்சாரத்துக்கு வலு ஏற்படும். இப்பவே பாருங்க, எனக்குத் தெரிஞ்ச வரையில் 70% வீடுகளிலே சாதி உணர்ச்சி மறைஞ்சு போயிடுச்சி. முன்னேயெல்லாம் எல்லா வீட்டிலேயும் சொப்புத் தொள்ளு இருக்கும் அல்லது நாமப்பெட்டி இருக்கும். இப்ப அநேக வீட்டிலே அதெல்லாம் கிடையாது.

கணையாழி: நம் நாட்டுப் பெண்களின் நிலையும், மனப்பான்மையும் மாறாத வரையில் சமுதாய முறைகளில் பெரிய மாறுதல் ஏற்படுமா?

ஈ.வெ.ரா.: கல்யாணத்தைச் சட்ட விரோதம் பண்ணனும். கட்டாயக் கல்வி கொடுக்கிறதனாலேயும், உத்தியோகங்களிலே 50% பெண்களுக்கு ஒதுக்கி வைக்கிறதுனாலேயும் ஓரளவு முன்னுக்குக் கொண்டுவரலாம். கல்யாணமே கிடையாதுன்னா, ஒவ்வொரு பொம்பளையும் தன்னையே மாத்திக்கிடுவாங்க. அநேக வீட்டில் பொம்பளைங்க மாறிடலையா. பிழைக்கறதுக்கு வழி, அந்தஸ்து எல்லாம் பொம்பளைங்களுக்குத் தந்திட்டா போதும், இப்ப பொம்பளைங்க dependent ஆக இருக்காங்க. யார் கட்டிக் காப்பா, யார் கஞ்சி ஊத்துவா இதுதான். தகப்பன் வீட்டிலே இருந்தா அண்ணன், அண்ணன் பொண்டாட்டி எதிர்ப்பு, தனி வீட்டிலே இருந்தா சமுதாயம் மதிக்காது.

கணையாழி: குழந்தைகள் பிறப்பதற்கும், அவை வளர்வதற்கும் ஒரு ஸ்தாபன அமைப்பு வேண்டாமா?

ஈ.வெ.ரா.: கல்யாணம் இல்லாம பிள்ளை பெத்தா பாவம்? கல்யாணங்கிறது ஒரு பழக்கந்தானுங்களே. நெத்திக்கு நாமம் வைக்கிறத என்னக்கி பழகிட்டானோ, கல்லும் மண்ணும் கடவுள்னு என்னக்கி பழகிட்டானோ, அன்னைக்கே வந்த பழக்கம்தான் கல்யாணம். அது ஒரு பழைய சங்கதி. மத்ததெல்லாம் போச்சு, இது ஒண்ணுதான் நிக்குது. வேறு பழைய சங்கதி மனுஷன்கிட்டே என்ன இருக்குது சொல்லுங்க.

கணையாழி: மேற்கு நாடுகளிலேகூட நீங்க சொல்லும் மாறுதல்கள் வரவில்லையே?

ஈ.வெ.ரா.: அங்கே எல்லாத்தையும் மதத்தோட சம்பந்தப்படுத்திட்டாங்க. ஸ்தாபனம் Permanent பண்ணிட்டாங்க. சர்ச்சு, போப்பு, முல்லா, வெங்காயம்னு எல்லாம் Permanent ஆயிடுச்சு. பரப்புறதுக்கு ஒரு ஸ்தாபனம் இருந்துச்சுன்னா, நாலு வருஷத்திலே, கழுதையைக்கூடச் சாமி பண்ணனும்னா பண்ணிப்புடலாம்.

கணையாழி: நீங்கள் மதங்களைப் பொதுவாக எதிர்க்கிறீர்களா? அல்லது இந்து மதத்தை எதிர்க்கிறீர்களா?

ஈ.வெ.ரா.: அறிவுக்குப் புறம்பான எதையும் நான் எதிர்க்கிறேன். சாதி, மதம் எல்லாம் போனா சமுதாயம் முதலில் ஒண்ணாகும். அப்புறம் துலுக்கன் வந்து ஆண்டாத்தான் என்ன. ஆனால், நம்ம மக்களுக்குச் சொல்லவேண்டியிருப்பதாலே பேசும்போது இந்து மதத்தைப் பற்றி அதிகம் பேசறேன்.

கணையாழி: உங்கள் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களே 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று பேசுகிறார்களே?

ஈ.வெ.ரா.: அதை நான் கண்டிச்சேன். நீ என்னடா ஒஸ்தி? ஒன்றே குலம், ஒருவனே தேவன்னு நீ சொல்றே. இன்னொருத்தன், இரண்டே குலம், இரண்டே தேவன்னு சொல்றான். ஒனக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்? தேவன்னா, ஒண்ணு இருந்தால் என்ன, இரண்டு இருந்தால் என்ன, ஆயிரம் இருந்தால் என்ன?

கணையாழி: பொருளாதாரச் சமத்துவம் வந்தால் இந்தச் சாதி, மத உணர்வுகள் பெரும்பாலும் போய்விடாதா?

ஈ.வெ.ரா.: எங்கே போகுது? கடவுள்ங்கிற நம்பிக்கை இருக்கும் வரைக்கும் அந்தச் செல்வாக்கு இருக்கும். எங்க சாதியையே எடுத்துக்குங்க. நாங்க பலிஜா நாயுடு. பணக்காரனும் இருக்கிறோம்; ஏழையும் இருக்கிறோம். பணக்காரனுக்குச் சாதி உணர்ச்சி போச்சா? பணம் இருக்க இருக்க நாமம் பெரிசாகிகிட்டே போகுது.

கணையாழி: உலகத்திலே, கோள்கள் இயக்கத்திலே, நமக்கு அப்பாற்பட்ட சக்தி எதுவும் இல்லை என்று சொல்வீர்களா?

ஈ.வெ.ரா.: கேள்வி confusion. மழை பெய்யுது. ஏன் பெய்யுதுன்னு நமக்குத் தெரியுது. பிரபஞ்சம் எல்லையில்லைன்னு சொல்றாங்க. எல்லாருக்கும் புரியாது என்று சொல்லமுடியாது. நமக்கு இப்ப சில விஷயங்கள் தெரியலை. மனுஷனாட்டம் ஏன் ஒரு பிறவி, நாயாட்டம் ஏன் ஒரு பிறவி? என்ன தேவை? நமக்குக் காரணம் தெரியாது. நமக்கு அது சொல்லமுடியலே. நமக்குப் புலப்படாத சங்கதின்னு சொல்லலாம். ஆனால், எல்லாருக்கும் புரியாதுன்னு சொல்லமுடியாது.

கணையாழி: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மேற்கொண்ட பணியில், நீங்கள் நடத்திய இயக்கத்தில் வெற்றியடைந்ததாகத் திருப்தி அடைகிறீர்களா?

ஈ.வெ.ரா.: சில சமயத்திலே நானே சிந்தித்ததுண்டு. மனசுக்குத் தோணுது. நாம் ஒருத்தன் நம்ம வாழ்க்கையிலே இதைச் செய்ய முடியுமான்னு. ஆனால், இருக்கிறோமே, என்ன பண்றது? முழு நம்பிக்கை வச்சே நான் இந்த வேலையைத் தொடங்கலே. மனுஷன்னா வேலை, சிந்தனை, ஆசாபாசம் இல்லாதவர் இல்லே. நமக்கு வேற வேலை என்ன? நான் இருக்கிறேன். அதனாலே ஒரு வேலை பண்ணனுமே.

கணையாழி: தி.மு.கழகத்தில் ஏற்பட்டுள்ள பிளவைச் சரிபடுத்தும் சமரச முயற்சியெல்லாம் இன்னும் நடக்கிறதா?

ஈ.வெ.ரா.: இப்ப ஒண்ணும் செய்யலை. ஒரு விழாவுக்குக் கூப்பிட வந்த நண்பர்கள் சொன்னார்கள், செஞ்சேன். இராமச்சந்திரன்' களிமண்ணு. சிந்தனை, என்ன செய்யலாம்னு யோசிச்சு அவர் செய்யலே. அவருக்கும் பிரிய வேண்டும்கிற அவசியம் வந்துட்டுது. அவரை ரொம்பக் கொடுமைப்படுத்திட்டாங்க. யார் யாரையோ புடிச்சாரு. அவசியம் ஏற்பட்டது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பா - இந்த அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவரணும்னு நினைக்கிறவங்க இருக்காங்க. காங்கிரஸ், இன்னொரு காங்கிரஸ். தி.மு.க இயக்கம் இருக்கிற வரைக்கும் இவர்களுக்கு இடம் இருக்காது. தி.மு.க. தீவிரமா இருக்கிறார்கள். எதிர்ப்பு ஏற்படுத்தினாத்தான் முடியும்னு நினைக்கிறாங்க. எங்கே போய் முடியுமோ? ஒரு வேளை Central Government பிரவேசிச்சா முடியும்.

கணையாழி: ரொம்ப நன்றி அய்யா, உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துவிட்டோம்.

ஈ.வெ.ரா.: அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எனக்கு எவ்வளவு உற்சாகமா இருக்கு. நீங்க பொதுவா கேட்டீங்க, நானும் பொதுவா பதில் சொன்னேன். போய்ட்டு வாங்க. வணக்கம்.

("கணையாழி”, கணையாழிக்கு அளித்த சிறப்புப் பேட்டி, 27-10-1972)
(பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் – பக்- 4405-4410 -பதிப்பாசிரியர் வே. ஆனைமுத்து)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக