வியாழன், 27 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 25:-


(தேசய விடுதலை என்பது ஒரு முதலாளித்துவப் போராட்டம் தான். ஆனால் பெரியார் இந்திய முதலாளித்துவ ஆட்சியைவிட ஏகாதிபத்திய ஆட்சி மோசமானதல்ல என்று கருதுகிறார். மக்கள் ஏகாதிபத்திய காலத்தில் அனுபவிக்கின்ற கஷ்டங்களுக்கு ஏகாதிபத்திய சர்க்கார் காரணமல்ல, முதலாளிகள் என்கிறார். ஏகாதிபத்திய காலகட்டத்தில் உள்நாட்டு முதலாளிக்கும் ஏகாதிபத்திய சர்க்காருக்கும் நடக்கும் போராட்டத்தில் பெரியார் ஏகாதிபத்தியம் பக்கமே நிற்கிறார். ஆனால் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயுள்ள கஷ்டத்திற்குக் காலம்காலமாகக் காணப்படும் கடவுள், மதம், பார்ப்பனியம், மதப் பிரச்சாரகர்கள் என்கிறார். தேசிய போராட்டத்தைப் பெரியார் எதிர்ப்பதை நாம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.)

தந்தை பெரியார்:-
“நமது கவனத்தை அரசாங்கத்தாரும் வேறு ஏதாவது ஒரு வழியைக் காட்டித் திருப்பி விடுவார்கள். ஆனால் உண்மையில் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கும், அன்புக்கும் விரோதமில்லாமலே தான் அரசாங்கத்தார் நடந்து கொள்ளுவார்கள். அப்படிக்கில்லா விட்டால் அரசனுக்கும், அவனுடைய சிப்பந்திகளுக்கும் உலை வைக்க உடனே முதலாளி வர்க்கம் வேலை செய்ய ஆரம்பித்துவிடும். உண்மையில் தொழிலாளிகளுக்கு தீங்கு இழைத்துக் கொண்டிருப்பது முதலாளி வர்க்கம் தான் என்பதை மக்கள் அறியமுடியாமல் பல தேச பக்தர்கள் என்பவர்கள் முதலாளிகளிடம் கூலி பெற்றுக்கொண்டு நம்மை சர்க்கார் பக்கம் திருப்பி விட்டு விடுகிறார்கள். இப்போதும் இந்நாட்டில் உள்ள கஷ்டத்திற்கு காரணம் சர்க்கார் என்றுதான் நீங்கள் கருதுகிறீர்களே தவிர முதலாளிகள் என்று நீங்கள் கருதுவதில்லை. சர்க்காரால் தொழிலாளிக்கு அதிக நஷ்டமில்லை.
… … …
மேனாடுகளில் அன்னிய அரசு, ராஜா அரசு ஆகியவை இல்லாத சுதேச அரசு, குடி அரசு நாடுகள் பல இருக்கின்றன. ஆயினும் அவை பேருக்குத் தான் ஜனங்கள் ஆட்சி என்பது தவிர அரசாட்சி செலுத்துவது ஆதிக்கம் வகிப்பது எல்லாம் பணக்காரக்கூட்டம் தான். அங்கு இன்று லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளிகள் பட்டினிதான் கிடந்து வாடுகிறார்கள். உலகத்தில் குபேரநாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவின் யோக்கியகைப் பற்றி வெளியில் சொல்லவேண்டியதில்லை. அங்குதான் வேலை யில்லாத் திண்டாட்டம் இன்னும் அதிகமாக இருக்கிறது. 11 கோடி மக்களுக்கு வேலையில்லை, பட்டினி தான் இருக்கிறது. அங்கு வேறு நாட்டான் வந்து அரசாளவில்லை. ஒரு அரசன் இருந்து அரசாள வில்லை. உள்ளூர்க்காரன் சொந்தக்காரன் குடிகள் தான் அரசாளுகிறான். அப்படியிருந்தும் தொழிலாளியின் நிலையானது ஏன் இவ்வளவு கேவலமாக வந்திருக்கிறது என்பதை கவனித்தால் காரணம் விளங்காமல் போகாது.

இந்தியாவில்தான் “வெள்ளைக்காரன் அரசாளுகிறான் இதனால் வேலை இல்லை கஷ்டம் பஞ்சம்," என்று குறை கூறப்படுகிறது. அவசர சட்டங்கள், அடக்கு முறைகள் என்று அலரப் படுகிறது. ஆனாலும் ஆங்கில அரசாட்சியிலும் அல்லது இனி வரப்போகும் காந்தி அரசாட்சியிலும், இங்குள்ள தொழிலாளிகளுக்கு என்ன பயன் ஏற்படும். கருப்பன் அரசாண்டால் இன்னும் ஒரு 50 சங்கராச்சாரியும் ஊருக்கு 10 மடமும் 20 கோவிலும் ஏற்பட்டு இன்றும் மக்களை கொள்ளையடிக்கப் பட்டு மக்களை ஒன்றுபடவிடாமல் சாதிக்கு சாதி சட்டம்போட்டு நசுக்கு வதைத் தவிர வேறு என்ன வழிபிறக்கும்? என்பது இதுவரை சுயராஜ்யம் கேட்கும் தேசியவாதிகள், தேசபக்தர்கள் மகாத்மாக்கள் சொல்வதிலிருந்தும், எழுதுவதிலிருந்தும் தெரியவில்லையா? ஆங்கில ஆட்சியிலேனும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வதாக ஏதோ 100-க்கு 4, 2 அனு கூலங்கள் ஏற்பாடு செய்ததாக, செய்வதாக சொல்லப்படுகிறது. கொள்ளை, திருட்டு, ஜாதிமுறை இவைகள் தடுக்கப்படுவதற்கு கடுமையான சட்டங்கள் கையாளப்படுகிறது துவேஷமிருக்கக்கூடாது என்று சொல்லிக் கொள்ளப்படுகிறது.”
(தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I I – பக் 103---—105)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக