சனி, 15 பிப்ரவரி, 2020

தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் 13:-


இந்திய பொருளாதாரம்
(களக்காடு ஐக்கிய முஸ்லீம் ஆண்டு விழா-18-01-1931)

(பெரும்பான்மையான மக்கள் வயிரார உணவில்லை என்பதற்கு முக்கியமான காரணமாக மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும் என்கிறார் பெரியார். சமூகத்தில் பணக்காரன் எழை என்று வர்க்கமாய்ப் பிரிந்ததற்கு இந்த மூன்று காரணமாக்க முடியாது. வர்க்கப் விரிவு சொத்துடைமையினால் ஏற்பட்டது. பெரியார் குறிப்பிடுகிற இந்த மூன்றும் வர்க்க சமூதாயத்தில் பணக்காரர்களுக்காக உருவானது என்ற தெளிவு வர்ண் பார்வையில் கிடைக்காது, வர்க்கப் பார்வையினால் தான் கிட்டும். பார்ப்பன சாதி என்பது பணக்காரர்களை அண்டிபிழைப்பதற்குத் தோன்றியதாகும். எழைகளாய் போன உழைப்பாளர்கள் எழுச்சி கொள்ளக்கூடாது என்பதற்காகப் பணக்கார வர்க்கமே கோவில்களையும், குளங்களையும் கட்டிக் கொடுத்துள்ளது. இந்தப் பணக்கார வர்க்கத்திற்குச் சேவை செய்வதற்கே பார்ப்பனர்கள் மற்றும் இவர்களை ஒத்தவ ஆதிக்கச் சாதியினர் மதம், மறுபிறப்பு போன்ற கோட்பாடுகளை உருவாக்கினர்.

இந்த உண்மையில் இருந்து பார்த்தால் முதலில் ஒழிக்க வேண்டியது தனிச் சொத்துடைமையே ஆகும். அதனைத் தொடர்ந்தே கடவுள் நம்பிக்கை, மதம், பார்ப்பன ஆதிக்கம் போன்றயை ஒழிக்கப்படும். பார்ப்பனர்களின் தோற்றமே பணக்காரர்களிடம் அண்டிப் பிழைப்பில் அடங்கியிருக்கிறது. பார்ப்பனன் தன்னைப் பிறப்பால் உயர்வு பாராட்டினாலும் அவனுக்குத் தேவைப்படுகிற பணம், பணம் படைத்தவர்களிடம் இருந்துதான் வரவேண்டும். பார்ப்பனர் உடல் உழைப்பு செய்யாததால் அவர்களின் வாழ்வாதாரம் பணம்படைத்தவரைகளையே சார்ந்திருக்கிறது.

கோயில்கள், குளங்கள் ஆகியவற்றைக் கட்டுவதும், அதில் பார்ப்பனர்கள் பணிபுரிவதும் பணக்கார வர்க்கத்தை நலன்களின் அடிப்படையில் தான். அதனால் முதலில் ஒழிக்க வேண்டியது தனிச் சொத்துடமையே ஆகும். மதம் எதைச் சார்ந்திருக்கிறதோ, அதனை ஒழிக்க வேண்டும். அந்த ஒழிப்பின் மூலமே மதம் பற்றிய எண்ணமும் மதமும் ஒழிக்கப்படும். சாதியும் எந்த உற்பத்தி முறையோடு இணைந்துள்ளதோ அந்த முறை ஒழிப்பின் செயற்பாட்டோடுதான் சாதியப் போராட்டம் இருக்க வேண்டும். இவ்வாறு, தத்துவத்தையும், அரசியல் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு விஞ்ஞான அடிப்படையில் மார்க்சியம் விளக்குகிறது.

மதம் கடவுள் பற்றிய இந்துமத கருத்தின் அடிப்படையில் பெரியார் பேசுகிறார். ஆனால் நாம் அதன் உண்மைத் தோற்றத்தின் அடிப்படையில் அணுக வேண்டும்.)

“இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக்காரலனுக்கு இங்கு வேலை இல்லை. இதுபோலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும் முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.

ஆகவே இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையான பேர்களை வயிரார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறுபல காரியங்கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கிய மானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.

மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும் மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு விளைந்தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன.”
 (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள் I - பக்-130)

                       (தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக